360 கதிரவன் கணக்கால் காலன் வருவான் – நெடுந்துயில் 3
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
வானுலாம் அருண னென்னு
மக்களா யுளின்க ணக்கன்
தானெழு முன்னெ ழாரைச்
சகத்திரக் கரத்தால் தட்டும்
ஏனென வெழார்வாழ் நாளை
எண்குறைத்(து) எழுதிக் கொள்வான்
ஆனது கண்டு காலன்
அவரிடம் அணுகு வானே. 3
- நெடுந்துயில்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”விண்ணிலே உலா வரும் மக்களின் ஆயுளைக் கணக்கெடுப்பவனாகிய கதிரவன், தான் தோன்றுவதற்கு முன் விழித்து எழாத மக்களை தன்னுடைய ஆயிரம் கதிர்க் கைகளால் தட்டி எழுப்புவான்.
ஏன் என்று உடனே எழாதவர்களது வாழ்நாளின் எண்ணிக்கையைக் குறைத்து எழுதிக் கொள்வான். அக்கணக்கைப் பார்த்து எமன் அத்தகைய மக்களின் உயிரைக் கொண்டு போக அவர்களிடம் நெருங்கி வருவான்” என்று சூரிய உதயத்திற்கு முன் எழுந்து பணிகளைச் செய்யாதவர்களின் வாழ்நாள் குறையும் என்கிறார் இப்பாடலாசிரியர்.
அருணன் - ஞாயிறு. சகத்திரம் - ஆயிரம்.