361 சிறு துயிலாக இல்லாமல் பெருந்துயில் ஏற்பதே சாவு – நெடுந்துயில் 4
கலி விருத்தம்
(காய் காய் காய் மா)
உறங்குவது போலுஞ்சாக் காடென்ன உரைத்தார்
இறங்கலில்சீர் வள்ளுவனார் போலுமெனன் மிகையே
நிறங்குலவு சிறுதுயிலற் றேல்நெடிய துயிலை
மறங்குலவு மரணமே எனக்கூறல் வழக்கே. 4
- நெடுந்துயில்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”குறைவில்லாத புகழ் மிகுந்த திருவள்ளுவர் உறங்குவது போலும் சாக்காடு என்று சொன்னார். அவ்வாறு சொல்வதில் `போலும்’ என்பது மிகைப்படுத்திச் சொல்லப்பட்டது.
உடம்பிற்குத் தேவையான அளவான உறக்கத்தைக் கொள்ளாமல் ஏற்கும் நீண்ட நேர உறக்கம் எமன் நம்மை நெருங்கி எடுத்துக் கொண்டு செல்கின்ற மரணமே எனச் சொல்வது முறையாகும்” என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.
சாக்காடு - சாவு. இறங்கலில் - குறைவில்லாத; மிகை - கூடுதல். நிறம் - உடல். மறம் - எமன்.
அற்று - இல்லாமல். ஏல் - ஏற்கும்.
வழக்கு - முறைமை.