பார்வை

மாதத்திற்கு ஒருமுறை அருகில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஒருமாதத்திற்கு வேண்டிய மளிகை சாமான்களை பட்டியலிட்டு மொத்தமாக வாங்குவது வழக்கம். ஸ்டோருக்கு அருகில் வரிசையாக மரங்கள் உண்டு. மரத்தின் நிழலில் ஊனமுற்ற பெரியவர் ஒருவர் சக்கரவண்டியில் அமர்ந்து வருவோர் போவோரிடம் கையேந்திய வண்ணம் இருப்பார்... அவருக்காக வழக்கமாக ஒரு பத்து ரூபாய் நாணயத்தை எடுத்துச் செல்வேன் ... ஸ்டோருக்கு அருகில் செல்லும்போதே அவர் கையில் அதைக் கொடுத்துவிடுவேன்.....
இந்த மாதமும் கடமையாய் வழக்கம்போல பெரியவருக்கு பத்து ரூபாய் கொடுத்துவிட்டு கடைக்குள் சென்றேன்...
பலரும் என்னைப்போல் பொருட்களை ரேக்குகளில் இருந்து எடுத்துக் கொண்டிருந்தனர்..... வாலிப வயதில் ஒருவன் உள்ளே நுழைந்தான் .... ஹால்ஃப் டிராக் ,டீ ஷர்ட் அணிந்திருந்தான் ..... ஏன் இப்படி பிள்ளைகள் பொது இடங்களில் வருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்க.... சற்று நேரத்தில் ஒரு பதினெட்டு வயது மதிக்கத் தக்க பெண்ணும் உள்ளே நுழைந்தாள் ... அவளோ மினி ஸ்கர்ட் வித் டைட் டீ ஷர்ட் அணிந்திருந்தாள்..... இன்றைய தலைமுறைகளின் லைஃப் ஸ்டைல்.... ஆனால் இருவரும் பொறுப்பாக மாஸ்க் அணிந்திருந்தனர் ... அங்கிருந்த பெரியவர்களைவிட மிக கவனமாகவே சமூக இடைவெளி விட்டு,அவர்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர்....,

நான் அதற்குள் எனக்குத் தேவையான மளிகை பொருட்களை வாங்கிவிட்டதால்.... பில் போட காலதாமதம் ஆகும் என்பதால், நெருக்கடியை தவிர்க்க வெளியில் சென்று அந்தப் பெரியவருக்கு சற்றுத் தொலைவில் சென்று காத்திருந்தேன்.....

சற்று நேரத்தில் அந்த இளம்பெண் வெளியில் வந்தாள்..... வேகமாக அருகில் உள்ள பழக்கடைக்குச் சென்றாள்..... இரண்டு வாழைப்பழங்கள் வாங்கினாள்..... ஒன்றை அந்தப் பெரியவரிடம் கொடுத்தாள் ...அவர் அதை பத்திரமாய் தன் வண்டியில் தொங்கவிட்டிருந்த துணிப்பையில் வைத்துக் கொண்டிருக்கும்போதே, அந்தப் பெண் அடுத்தப் பழத்தை உரித்து... அந்தப் பெரியவரிடம் உண்ணும்படி கொடுத்தாள்...... தோலை அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டாள்.....பின்பு கடந்து சென்றுவிட்டாள்...

அதைத் தொடர்ந்து அந்த வாலிபன் வெளியே வந்தான் .... பெரியவரை ஒருமுறை பார்த்தான் .... உடனே மீண்டும் கடைக்குள் சென்றான் .... ஒரு பிரட் பாக்கெட்டுடன் வெளியில் வந்தான் .... பெரியவரிடம் தண்மையாய் குனிந்துக் கொடுத்தான் ...கடந்து சென்றான்.... உண்மையில் நெகிழ்ந்துபோனேன்.... எனக்கு சற்று குற்ற உணர்வாகவும் இருந்தது....

இன்றைய இளைய தலைமுறையினரை அவர்களின் நடை உடை பாவனைகளை வைத்து தவறாக கணக்கிடக் கூடாது...... காலத்திற்கு ஏற்ற மாற்றம் ...... ஜெனரேஷன் கேப்.... அவர்களை பார்க்கும்போது நம்மை முகம் சுளிக்க வைக்கிறது....,
ஆனால் உண்மையில் அவர்கள் பொறுப்பானவர்களாகவும் மிகவும் மனிதாபிமானத்துடன் தான் இருக்கிறார்கள்...

ஏளனம் பேசாமல்,அவர்களை குற்றம் சொல்லாமல்.... நம் பழங்கதைகளை சொல்லி எரிச்சல் ஊட்டாமல்....நட்பாய் பழகி .... பட்டை தீட்டுவோம்..... வைரமாய் ஜொலிப்பார்கள்.

இனிய காலை வணக்கம் !

எழுதியவர் : வை.அமுதா (10-Aug-20, 11:48 am)
Tanglish : parvai
பார்வை : 107

சிறந்த கட்டுரைகள்

மேலே