கரிசல் காட்டு தாய்

கரிசல் காட்டு தாய்.

ஒன்னேஒன்னு, கண்ணே கண்ணுன்னு செல்லமா வளர்த்தேன்
பனமரமா வளர்ந்தியே தவிர
படிப்பு உனக்கு வரலை.
உன் பாட்டன் படிச்சானா?
இல்லை உன் அப்பன்
தான் படிச்சானா?
எல்லாருமே கைநாட்டு.
அந்த வழி வந்த நீ மட்டும் என்னத்த படிச்சி கிழிக்கபோரன்னு 
விட்டுட்டேன்.
கைத்தொழில் ஏதாவது 
கத்துக்குவேன்னு 
பாத்தா!
அதுக்கும் உன் உடம்பு ஒத்துழைக்கில.
புத்தி கூர்மையும் இல்ல.
இப்ப ஏழு கழுதை
வயசு ஆச்சி...
வானத்துக்கும், பூமிக்கும் நல்லா வளர்ந்து நிக்கற. 
கா.. காசுக்கு பிரயோசனமில்லை.
அந்த புண்ணியவானும்
குடிச்சு, குடிச்சு செத்தே போயிட்டான்.
அந்த மனுசன், 
வச்சிட்டு 
போன
கால் காணி 
நிலத்தால,
நம்ம பிழைப்பு நாறாம ஓடுது.    
இல்ல, நீ நானும் கோயில் வாசல்ல 
பிச்சை தான் எடுக்கனும்.


சரி காட்டு வேலைக்கு 
போடான்னா,
எங்கிட்ட... வீரனாட்டம் போறேன்னு 
சொல்லிவிட்டு,
கண்ட காலி பயிலுக கூட சேர்ந்து கெட்ட பழக்கம் குடை, குடையா.... கத்துக்கிட்ட.  
எல்லாம் என் தலை எழுத்து. 
நீ என்னை உக்கார வச்சி கஞ்சி ஊத்தனும்.
ஆனா இங்க எல்லாமே தலை கீழ்.
சரி அதெல்லாம் விடு,
எனக்கும் வயசு ஆவுது,
எப்ப எது நடக்கும் யாருக்கும் தெரியாது,
உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி 
பார்த்துடேன்னா,
நான் நிம்மதியா கண்ணை மூடுவேன்.
நீயும் திருந்தி, முழு மனுசனா மாறுவேன்னு நம்பிக்கை ஒரு ஓரமா என் மனசுகுள்ள ஒட்டிகிட்டு இருக்கு.  

நேத்து திருவிழாவில்
உன் அயித்த மவளைப் பார்த்தேன். 
அல்லி கொடியாட்டம் அம்புட்டு
அழகா இருக்கா.
உனக்கு மட்டும் என்ன
முடி வெட்டி இந்த தாடி கருமத்த எடுத்தா நீயும் மகாராசன் தான்.
என்னடா அவளை
உனக்கு கல்யாண பேசி முடிக்கவா?
நீயும் உங்கப்பனாட்டம் சாராய கருமத்தை கத்துகிட்டே.
மவராசன் இல்ல, கல்யாணத்துக்கு அப்புறம் இந்த கண்ராவி 
எல்லாம் விட்டுவிடு ராசா.
கோபத்தை அடியோடு ஏறகட்டிடு.
அடிதடி எல்லாம் நமக்கு எதுக்கு,
முன்கோபத்துக்கு ஒரேயடியா முழுக்கு போடு.
ராசா இல்ல...
நல்ல புள்ள இல்ல....
ஒன்னுமத்த பயிலுவ எல்லாம் 
பணங்காசை 
பார்த்தவுடன்
என்ன ஒரு பவுசா மாறிட்டானுக,
அட அவங்களுக்கு 
நீ எந்த விதத்தில் கொறச்சல். 
சொல்லுடா.
முடிவு செய்துவிட்டேன் டா...
தை மாதம் கல்யாணத்தை 
வச்சிக்கிலாம்.
இதுல எந்த மாற்றமும் இல்ல.
அப்புறம் அந்த மகமாயி சித்தம்.
         
டெய் வளர்த்தவனே, வீராசாமி
உன் பெண்சாதி
மூழ்காம இருக்காடா
நீ இன்னும் சில மாசத்துல அப்பன் ஆக போறடா
பச்சை புள்ள காரி அவ
ஆசைப்பட்டதெல்லாம் வாங்கி தாடா
மவராசி ஒரு பேரனை பெத்து 
எங்கையில
கொடுத்தா அது போதும்
அத்தோட எனக்கு வேற சந்தோஷம் 
ஒன்னும் இல்லடா...
              
அச்சு அசலா அவன் பாட்டன் மாதிரியே இருக்கான் பாருடி என் பேரன்.
சும்மா சீமை துரை மாதிரி கலரு. பின்ன அந்தாளு, 
எம்.ஜி.ஆர் கலருல்ல. 
என் மவன் தான் என்ன மாதிரி கொஞ்சம் கலர் மட்டு.
புள்ள உனக்கு நா எப்படி டீ.. நன்றி சொல்லுவேன். 
குட்டி சுவரா இருந்த என் புள்ளையை 
பொறுப்பானவனா 
மாத்தி இன்னிக்கு 
அவனை ஒரு முழு மனுசனா மாத்திபுட்ட. 
என்ன தான் இருந்தாலும் நான் அவனுக்குத் தாய் தானே. நீ பொண்சாதி. 
அதான் மகுடிக்கு மயங்குன 
பாம்பா மயங்கி உங்கிட்ட 
கிரங்கிட்டான்.
சாமார்த்தியசாலி 
சிருக்கிடி நீ . 
மவராசியா நல்லா ஆயுசோட நீ 
வாழனுமடி.  
      
வளர்ந்தவனே,  என் வீராசாமி. என்னையா ஆச்சி 
உனக்கு. யாருய்யா....ஃ 
இந்த காரியம் பண்ணியது.
படுபாவி அவன் மட்டும் என்கையில 
கிடைச்சான், அவனை 
கடிச்சே சாகடிச்சுடுவேன்.
ஐய்யா, அப்படி  பார்க்காதே என் ராசா,
எந்த வேசி மவன் உன் கழுத்து இப்படி அறுத்தது.
ரத்தம் ஆறா ஓடுதே....
மகமாயி!! என்புள்ள 
பொழச்சிக்கனும். 
மாரியாத்தா! ! என் குலகொழுந்துக்கு ஒன்னும் ஆக 
கூடாது.
நான் தினம் கும்மிடும் என் குலசாமி!!
என் மவனை 
காப்பாத்திடு. 
ஐய்யயோ!! நான் கொடுத்த பால் எல்லாம் ரத்தமா ஓடுதே. 
வளர்த்தவனே, 
வீராசாமி உனக்கு 
செக்க செவேல்னு 
ஆம்பள புள்ள 
பொரந்திருக்கான்டா.
பெரிய ஆஸ்பத்திரி இன்னும் கொஞ்சம் தூரம் தான், அங்க டாக்டரு உனக்கு ரத்தம் ஏந்தி உன்னைப் 
பிழைக்க வச்சிடுவாங்க.

ராசா, அப்படி பார்க்காத, கண்ணு இரண்டும் சொருகுதே... ராசா ..... வீராசாமி.... என் குலவளக்கே
போயிட்டியா..... என்ன விட்டு போயிட்டியா இந்த கிழவிக்கு 
தொல்லை கொடுக்க கூடாதுன்னு போயிட்டியா.... கூடா சினேகிதம்  வேணாம்டா.... வேண்டாம்டா...  எத்தனை முறை சொல்லியும் நீ கேட்கலையே..... நீ இப்ப திருந்திட்ட,
ஆனால் எப்பயோ 
செய்த தப்ப மனசுக்குள்ள 
வஞ்சம் வச்சி யாரோ ஒரு அயோக்கிய நாய் உன் உசுரை எடுத்துவிட்டான்.
டேய் வளர்த்தவனே , 
வீராசாமி 
நீ போயிட்ட... என்னை அணாதையா விட்டுட்டு நீ போயிட்ட  இனி உலகத்தில் எனக்கு என்ன வேலை...

எனக்கு என்ன ஜோலி...

வீராசாமி....

வளர்ந்தவனே..... என் ராசா... வீராசாமி........😭😭😭😭😭😭

- பாலு.

எழுதியவர் : பாலு (9-Aug-20, 7:26 pm)
சேர்த்தது : balu
பார்வை : 104

மேலே