கோகுலாஷ்டமி - 11082020

குருவாயூரில் வீற்றிருக்கும்
குழந்தை கண்ணனவன்
எங்கள் மகன் ஆன விதம்
நீங்களும் தான் அறிவீரே

சும்மாவே இருக்க மாட்டான்
துருதுருவென்று சேஷ்டைகள்
பல செய்து எங்களை
கலகலப்பாக வைத்திருப்பான்

நாளெல்லாம் வெளியே
திரிந்தாலும் இருள் சாயும்
நேரம் எங்கள் வீட்டினிலே
தஞ்சம் அடைந்திடுவான்

அவ்வப்பொழுது நாங்கள் போடும்
சண்டையினை கண் கொட்டாமல்
பார்த்திடுவான், பின்
ஓடிவந்து கட்டிப்பிடித்து
முத்தமழை பொழிந்திடுவான்

பிறந்தநாளில் என்ன
வேண்டும் என கேட்டோம்
எதுவுமே வேண்டாமென்று
எதார்த்தமாய் சொல்லிவிட்டான்

இருந்தாலும் புத்தாடை வாங்கி வந்து
அவனுக்கு அணிவித்து
கண்களில் மையிட்டு
அவனை அழகு படுத்தி பார்த்திட்டோம்

உடனே வெளியே ஓடிச்சென்று
புல்லாங்குழல் இசையோடு
நடனமும் ஆடிக்கொண்டே
வீட்டிற்குள்ளே வந்த அவன்

நேராக பூஜை அறை சென்று
பவ்யமாக கும்பிட்டான்
மனித பிறவி எடுத்ததினால்
வந்த பழக்கம் இதுவோ

அவன் செய்கை கண்டு
நாங்களும் சொக்கித்தான் போய்விட்டோம்

அகிலத்தை ஆள்பவன் தான்
அடுத்த நொடி ரகசியத்தை அறிந்தவன் தான்
வாழ்க்கையின் தத்துவத்தை
வடிவமைத்து கொடுத்தவன்தான்

இருந்தும்,

எதுவும் தெரியாதது போல்
எங்கள் வீட்டு பிள்ளையாய்
எங்களுடன் அன்றாட வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருக்கிறான்

அவனுடைய பிறந்தநாளை முன்னிட்டு
நாம் அனைவருமே அவனுக்கு
வாழ்த்துக்களை சொல்லிடுவோம்
அவன் ஆசிதனைப் பெற்றிடுவோம்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (11-Aug-20, 3:37 pm)
பார்வை : 55

மேலே