ஓ மின்னலே

ஓ மின்னலே!
நீ யார்?
நீ மேகங்கள் மோகித்து இடித்தீனும்
மின்னனுக் குளவியா?
இல்லை
வான் மோனத்திருக்கையிலே கார் களவாடி வந்த
வெள்ளி வளவியா?
மேகமகள் கூந்தல் அள்ளி பின்னி முடிக்க
நீ ஒளி நாடாவா?
இல்லை
நொடி நேரம் வான் அரங்கேற்றும்
ஓர் ஒளிக்கீற்று நாடகமா?
வானத்திரை தனிலே ஒளியும் ஒலியும் ஒளிபரப்பா?
இல்லை
பூமியைப் படம் பிடிக்க மேகம் ஒளிப்பாய்ச்சி
செய்யும் ஒத்திகையா?
வானம் விளைவித்த முதிர்ந்த விண்மீனின் நாற்றா?
இல்லை
மழை நனைந்த மேக மடி தனிலே பொங்கி எழும்
ஒளி ஊற்றா?
ஒளி நிறைத்து வான் பிளக்கும்
கூர் பிடித்த நெடுவாளா?
இல்லை
மதி மறைத்து வானத்தை வதைத்திடும்
சுடுகோலா?
வானத்து வரைதாளில் நீ
வளைவு வரைபடமா?
இல்லை
வான் மடியில் கார் காட்டும்
வெல் ஒளியின் குறும்படமா?
வான்மகள் தேரோட்டி கொண்ட
வெள்ளிச் சாட்டையா?
இல்லை
அவள் மனதைக் கவர்ந்து செல்ல
ஒளி நடத்தும் வேட்டையா?
மழைத் துளி ஈனிப் புடைத்தடங்கும்
கார் முகிலின் நரம்புகளா?
இல்லை
ஒளிந்த விண்மீன் அழைக்க வான் கை எடுத்த
ஒளிப் பிரம்புகளா?
வானத்து ஒளிக்கொடியே! உன் ஓரப் பார்வையின்
விருத்தங்கள் செய்திடுதே பசும் தாவரத்தில்
பல மரபியல் திருத்தங்கள்!
மின் கம்பி செல்லா ஊர் தன்னை
ஒளிக் கம்பி கட்டி இணைக்கின்றாய்!
மின் இணைப்பைத் துண்டிட்டு
நீ இணைப்பில் இருக்கின்றாய்!
இடியைப் புறந்தள்ளி முந்தி வந்து
மூச்சிறைக்கின்றாய்!
இருள் குடித்த வானத்தே
ஒளி அள்ளி நிறைக்கின்றாய்!
நீ தாகமுற்று முகம் காட்டும்
வானத்து வேர்களா?
இல்லை
விண்மீனைச் சரம் தொடுக்க
கார் கரத்து ஒளி நார்களா?
நீ வானையும் மண்ணையும் இணைக்கும்
ஒளி நெளிவுப் பாலமா?
இல்லை
வான் முற்றமதில் கார் வரையும்
நெளிவு சுழிவுக் கோலமா?
உன் கணப் பொழுதின் முத்தத்தில்
எம் உயிரை குடிக்கின்றாய்!
காலூன்ற நிலம் கேட்டு இடி
இடித்து சிரிக்கின்றாய்!
ஊசி முனைதனிலே உன்னை இழக்கின்றாய்!
ஓசோன் வான் கூட்டி
உயிர் உய்யத் தளைக்கின்றாய்!