புதைந்த புன்னகைகள்

அன்பு தாயை கண்முன் கண்டதும்
அன்பாய் மலர்ந்த அந்த புன்னகை..
ஆசை மகளின் உச்சி முகருமுன்
ஆசையாய் அரும்பிய அந்த புன்னகை..
அறிந்தவர் எதிரே கடந்து வருகையில்
தலையசைவுடன் அசைந்த அந்த புன்னகை..
பிஞ்சு குழந்தையின் கைவிரல் தொடுமுன்
பிரியமாய் பிறந்த அந்த புன்னகை..
அன்பு தோழனை தோள் அணைக்குமுன்
அகம் குளிர்ந்து வந்த அந்த புன்னகை..
ஆசான் நுழைந்ததும் அடிமனது பயத்துடன்
உதட்டில் உதித்த அந்த புன்னகை..
காதலி முகம் கண்டு கனத்த மகிழ்வுடன்
கரை புரண்டோடிய அந்த புன்னகை..
இன்னும் சொல்லா புன்னகையாவும்
புதைந்தே போனதே முகக்கவசமதனிலே..
புன்னகை புரிய மனிதன் மறந்து
புன்னகை வார்த்தையும் புதைந்திடுமோ
என்று தினம் புலம்புது என் மனமே..
------------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (16-Aug-20, 10:25 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 351

மேலே