திருந்திய மனம் - பாகம் - 6
மறுநாள் காலை டாக்டர் பாரியை காண வந்தார். அவன் நேற்று இரவே கண் விழித்தும் அவனால் பேச முடியவில்லை. காரணம் மிகவும் வலியுடன் சோர்வாக இருந்தான். மேலும் டியூப்கள் மூக்கிலும் கையிலும் பொருத்தப்பட்டு இருந்தது. இலக்கியா பக்கத்தில் நின்று கொண்டு இருந்தாள். டாக்டர் அவனை பரிசோதித்து விட்டு நர்சிடம் ஏதோ உத்தரவிட்டார். பிறகு இலக்கியாவிடம் திரும்பி, எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும்மா, கவலை வேண்டாம். நாளைக்கு வருகிறேன்... ஒருவாரத்தில் வீட்டிற்கு செல்லலாம் என்றார் . அந்த ஒருவாரத்தில் நண்பர்கள் உறவினர்கள் என்று பலரும் வந்து பார்த்துவிட்டு சென்றார்கள் .
பெரியவர் ஹனிபா அவர்கள் இரண்டு முறை வந்து பாரிக்கு கையை அசைத்து விரைவில் குணமடைவாய் என்று கூறிவிட்டு , நான் அடுத்த மாதம் சென்னை வரும்போது வீட்டிற்கு வந்து பார்க்கிறேன் என்றார். அவர்கூடவே வெளியில் வந்த இலக்கியா , ஐயா அந்த பணம் என்று ..ஏதோ கூற ஆர்மபித்தாள் ...அவர் உடனே அதெல்லாம் அப்புறம் பேசலாம் ....ஒன்றும் குழப்பிக் கொள்ளாதே என்று விரைந்து சென்றார் . இலக்கியா அவர் செல்வதையே பார்த்துக் கொண்டு அப்படியே சிலை போல நின்றுவிட்டாள் .
சரியாக எட்டாவது நாள் வழக்கம் போல டாக்டர் வந்து பார்த்தார் . அப்போது பாரி அவரிடம் மிகவும் நன்றி சார் என்று கையெடுத்து கும்பிட்டான் . அவர் சிரித்துக் கொண்டே நாங்கள் எங்கள் கடமையை தான் செய்தோம் . அதிகம் உணர்ச்சிவசப்பாடாதீர்கள் . உங்கள் மனைவிதான் அருகிலே இருந்து உங்களை நன்றாக கவனித்தார்கள் . இன்று மாலை நீங்கள் வீட்டிற்கு செல்லலாம் . அடுத்து பத்து ந்தால் கழித்து வந்து என்னை பாருங்கள் என்றார். நான் எழுதியுள்ள மாத்திரைகள் தினமும் சாப்பிடுங்கள் . தைரியமாக இருங்கள் , ஒன்றும் கவலை இல்லை , எல்லாம் சரியாகிவிட்டது . அவ்வப்போது தலையில் சிறிதாக வலி இருக்கும் பயப்பட வேண்டாம் . இலக்கியாவிற்கும் , அவளது பெற்றோருக்கும் ,மற்றும் பாரியின் மாமாவிற்கும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் .
வீட்டிற்கு சென்று மூன்று நாட்கள் ஆனதும் பாரி , இலக்கியாவை அழைத்து என்னவெல்லாம் நடந்தது , செலவிற்கு என்ன செய்தாய் என்று விவரங்களை கேட்டான் . அவள் இரத்த தானம் முதல் , பெரியவர் ஹனிபா பணம் கட்டியது வரை அனைத்தையும் பொறுமையாக கூறினாள் . முதலில் இரத்தம் வழங்கிய அனைத்து நண்பர்களையும் செல்போனில் அழைத்து நன்றி கூறினான் . பிறகு பெரியவர் ஹனிபாவை அழைக்க முற்பட்டான் . அப்போது இலக்கியா அவனை தடுத்து , அவரே அடுத்த வாரம் இங்கு வருகிறார் உங்களை பார்க்க . அதிகம் உணர்ச்சிவசப்பட வேண்டாம் . பேசாமல் ஓய்வெடுங்கள் . நான் அவரிடம் தினமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். கவலை வேண்டாம் என்றாள் .