அச்சம் தவிர் மனமே
#அச்சம் தவிர் மனமே..!
நுண்பிணியொன்று உலகினில் புகுந்தே கண்கட்டி யாடுதடா
எண்ணிலடங்கா பேர்களை யின்று
ஆட்டிப் படைக்குதடா
என்னென்னவோ சொல்லி இருக்கும் பேரை
இன்னலில் ஆழ்த்துகிறார்
புன்னகை புரிந்த வாய்களில் எல்லாம்
பூட்டுகள் போடுகின்றார்
கண்கள் அறியா கிருமிக்கு நாமும்
கலங்குதல் சரியாமோ
வண்ணங் கொண்ட வாழ்வினை அச்சத்தில்
வதைத்தல் வீணாமே..
அஞ்சுதல் கொண்டால் அண்டிடும் பிணியும்
அறிந்தால் துன்பமில்லை
சஞ்சிகைத் துணிவு நெஞ்சினில் என்றால்
சங்கடம் ஏதுமில்லை..!
வீட்டுக் காவலில் வைத்தது நோயும்
வரவில்லை செலவுண்டு
காட்டினி லிருந்து வாழ்வது போலே
காரிருள் சூழ்ந்ததின்று
கையின் இருப்புக் கரைந்த பின்னால்
கலங்கும் மனமுழன்று
மெய்தனில் நம்பிக்கை வைத்திட வேண்டும்
மாறிடும் நிலைவிரைந்து..!
இடையினில் வந்தது எதிரினில் நின்றது
எய்தோம் அம்பினையே
படையென வந்தது சடுதியில் அழியும்
நாளது விரைவினிலே
விலங்குகள் உடைத்து வெளியே வரலாம்
மயக்கங்க ளகன்றிடுமே
நலமுடன் வாழ்ந்திடும் நாளது வரையில்
பலமது கொள்மனமே..!
மாய நோய்க்கு மரண மளிக்க
மருந்தும் ஆய்வினிலே
காயங் கொண்ட மனதினை ஆற்று
கவிழ்ப்போம் நோயினையே
அச்சங் கொண்டால் அவதிகள் மனதில்
அடியொடு அதனையழி
மிச்ச வாழ்க்கை மின்னும் ஒளிரும்
ஏற்பாய் உறுதிமொழி ..!
#சொ.சாந்தி