மனிதம்

22.8.2020 விநாயகர் சதுர்த்தி அன்று.... வழக்கத்திற்கு அதிகமாய் கூட்டல், பெருக்கல், கழுவல், விளக்கல் , சமையல் வேலைகள்.... வீட்டில் விநாயகருக்கு பூசை முடிப்பதற்குள்ளே உடல் சோர்ந்துவிட்டது..... ஓய்வாய் அமரவும் நேரமில்லை .....
அடுத்து பள்ளி வளாகத்தில் உள்ள விநாயகருக்கும் பூசை செய்ய வேண்டும் என்று மாலை ஆறு மணிக்கு புரப்பட்டேன்... கணவர் தானும் வருவதாக சொன்னார்.... இருவரும் டூவீலரில் சென்றுவிடலாம் என்று முடிவு செய்தோம்..... கொழுக்கட்டை கொண்டைக்கடலை சுண்டல்.... பூசைக்கு வேண்டிய சாமான்கள், பூசை முடிந்தவுடன் , அக்கம்பக்கம் இருக்கும் சிறுவர்களுக்கு கொழுக்கட்டை ,சுண்டல் , லட்டு கொடுக்க காகிதத் தட்டுகள் எல்லாவற்றையும் ஞாபகமாக ஒரு ஷாப்பர் பையில் எடுத்து வைத்துக்கொண்டேன்.... .
ஆனால் எப்போது வெளியில் சென்றாலும் , நான் மறந்தாலும் தவறாமல் ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துக் கொள்வார் துணைவர்... ஆனால் புரப்படும் அவசரத்தில் அவரும் மறந்துவிட்டார்.....

பள்ளியில் நல்லபடியாக விநாயகர் பூசை முடிந்தது.....
சுற்றி நின்ற குழந்தைகளுக்கும் பிரசாதம் கொடுத்தாகிவிட்டது....
அன்று காற்றடிப்பது குறைவாகவே இருந்தது.... மாஸ்க்வேறு அணிந்திருந்ததால் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டேன்..... போதாதக் குறைக்கு பக்கத்தில் துணைவரோ ஏகப்பட்ட எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருந்தார்....
எடுப்பதற்கு தொடுவதற்கு எல்லாம் என் கைகளில் சானிடைசரை ஊற்றிக் கொண்டே இருந்தார்..... எனக்கோ
நாவு வறண்டு இலேசாக மயக்கம் .... தண்ணீரைத் தேடினேன் ... அப்போதுதான் உணர்ந்தேன் எடுத்துவர மறந்துவிட்டோம் என்பதை..... சும்மாவே அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் தண்ணீர் வாங்கிக் குடிக்க அனுமதிக்கப்பட்டார் துணைவர்...அதுவும் இது கொரோனா காலம்... நிச்சயம் அனுமதி கிடைக்காது..... அதனால் யாரிடமும் தண்ணீர் கேட்கவே இல்லை..... வீட்டிற்கு செல்லும்வரை பொறுத்துக்கொள்ளலாம் என்று எண்ணி வண்டியில் அமர்ந்தேன்.... ஆனால் வண்டி நேராக க்ளினிக் நோக்கிச் சென்றது....
“என்னங்க இந்த வழியாப் போறீங்க?” தயங்கிக் கேட்டேன்..... “க்ளினிக்ல இருக்கிற விநாயகருக்கு பூசை செய்யணும்ல” நிதானமாய் பதில் சொன்னார்...
எனக்கோ லேசாக தலைசுற்றத் தொடங்கிவிட்டது.... அமைதியாய் இருந்தேன்... நல்லவேளை க்ளினிக் ஆயா எல்லா ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து வைத்திருந்தார்.... துரிதமாய் வணங்கிவிட்டு வீட்டை நோக்கி வண்டி நகர்ந்தது....
அப்போதுதான் துணைவரிடம் தண்ணீர் கேட்டேன்.... இருபது நிமிடத்தில் வீட்டிற்கு சென்றுவிடலாம் என்று சொல்லிவிட்டார்... மணி எட்டாகிவிட்டதால்... அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தது..... எனக்கோ மிகவும் வியர்த்து உடல் சில்லிடத் தொடங்கியது..கண்கள் இருண்டது..... எம்.சி ரோட்டில் அரிஹந்த்தை தாண்டி வலதுபுறம் வண்டி திரும்பியது..... எனக்கோ வேகமாய் தலைசுற்ற..... வேறுவழியின்றி துணைவரை வண்டியை நிறுத்தச் சொன்னேன்..... “என்ன? என்ன? என்னாச்சு?” என்று அச்சத்தோடு பதறியபடி வண்டியை ஓரமாக நிறுத்தினார்.... இறங்கி அப்படியே பூட்டிய ஒரு கடையின் வாசலில் அமரந்துவிட்டேன்.... உடல் பயங்கரமாக வியர்த்துக் கொட்டியது..... நாவு உலர்ந்து ஒட்டிக் கொண்டது.... பேச இயலவில்லை... மயங்கி கீழே விழும்நிலை....
“என்னம்மா.. என்னம்மா..., “என்ற என் மகன் வயதில் ஒருக்குரல்.....
“மயக்கமாருக்குனு உட்காந்திட்டாங்க” துணைவர் பதட்டமாய் சொல்ல.....
இருங்கம்மா... “ தண்ணி கொண்டுவரேன்“ என்று சொல்லியவண்ணம் பக்கத்தில் இருந்த படிவழியே ஏறி ஓடினான்..... அதற்குள் அந்த கடைக்கு அருகில் நெருங்கிவந்து நின்றது ஒரு ஸ்கூட்டி .....அதில் இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள்.... ஒருவன் வேகமாக வண்டியைவிட்டு இறங்கி அருகில் வந்து.... என் நிலையை உணர்ந்து சட்டென ஒரு பாட்டில் தண்ணீரை நீட்டினான்.....

தொட்டதற்கெல்லாம் சானிடைசர் போட்டுப் பழகிய என் கரங்கள் , ஆபத்து என்றவுடன் தாமதமின்றி வேகமாய் தண்ணீர் பாட்டிலை பற்றியது.... சட்டென மாஸ்க்கை இறக்கிவிட்டு... மடக் மடக்கென தண்ணீரை விழுங்கினேன்.... அப்போதுதான் சற்று தெளிவானேன்....வெளியில் எந்தப் பொருளையும் தொட அனுமதிக்காத என் துணைவர் செயலற்று நின்றார்....
தலையை லேசாய் நிமிர்த்திப் பார்த்தேன்...
வந்த இளைஞர்கள் ஆறுதலாய் பக்கத்தில் வந்து...
“இன்னும் கொஞ்சம் குடிங்கம்மா, “ என்றனர்... அதற்குள் மாடிக்கு ஓடியவர்... கையில் ஒரு ஜக் நிறைய தண்ணீரும் டம்பிளருடன் இறங்கி வந்தார்.... அவரும் இஸ்லாமியர் என்பதை அறிந்தேன்....
வேகமாக தண்ணீரை நீட்டினார்.... குடித்துவிட்டேன், போதும் என்று சைகையிலேயே சொல்லி ... நன்றி என்று கரம் கூப்பினேன்..... “இப்போ பரவாலையாம்மா?, பத்ரமா போங்க” பரிவோடு சொன்னார்.. நான் நெகிழ்ந்து போனேன்.....அன்பு சூழ் உலகம்.....

நான் கும்பிட்ட விநாயகர்தான் இஸ்லாமிய அன்பர் வடிவில் வந்து .... என்னை வீதியில் மயங்கி விழாமல் காப்பாற்றி இருக்கிறார்....

உலகில் அனைவரும் மனதில் கொள்ளவேண்டிய ஒரே மதம் “மனிதம் “ என்று மீண்டும் எனை உணரவைத்தத் தருணம்....

மனிதம் போற்றுவோம்.....!

எழுதியவர் : வை.அமுதா (25-Aug-20, 10:06 am)
Tanglish : manitham
பார்வை : 193

சிறந்த கட்டுரைகள்

மேலே