யார் காரணம் மாதவியா

மணிமேகலை துறவு மேற்கொள்ள அவள் தாய் மாதவி தான் காரணமா?
__________________________________________
என்னுரை:: மணிமேகலையின் பால் ஒரு ஆய்வுக்கட்டுரையை சு.இராம ஜோதி ஆகிய நான் மேற்கொண்டு இருக்கிறேன். மிக சுருக்கமாக இந்த ஆய்வுக் கட்டுரை அமைகிறது .தலைப்பை பார்க்கிறபோது மணிமேகலையின் தாய் மட்டுமல்ல வேறு நபர்களும் இருக்கக் கூடுமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

மணிமேகலை துறவு மேற்கொள்ள யார் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதை ஆய்வுக்கு பின் தான் முடிவு செய்ய வேண்டும் .மணிமேகலையை பொருத்தவரை மதிப்பிற்குரிய சிலம்புச் செல்வர் ம. பொ. சி .முதற்கொண்டு பல தமிழறிஞர்கள் ஆய்வுக் கட்டுரைகளையும் அற்புதமான விளக்கங்களையும் தந்திருக்கிறார்கள். இருந்தாலும் இத்தலைப்பின் மீது வரும் ஆய்வு சிலப்பதிகாரம் மணிமேகலை படிக்கின்ற வருங்கால இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என நினைக்கிறேன்.

முன்னுரை.... மணிமேகலை துறவு மேற்கொள்ள அவள் தாய் மாதவி தான் காரணமா ?என்ற கேள்விக்கு நாம் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையும் பார்க்கவேண்டியுள்ளது .கோவலன் கண்ணகி; கோவலன் மாதவி இவர்களின் வாழ்வு ;வாழ்க்கை அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் வாழ்ந்த சூழல் ;சமுதாயச் சூழல் ;காவல் தெய்வம் மற்றும் ஊழ் என்றெல்லாம் ஆராய வேண்டி வருகிறது.
ஒரு சமுதாயத்தில் அந்த சமுதாய வாழ்வு முறை அந்தந்த காலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது .சிலப்பதிகாரத்தில் ஆண்கள் பரத்தையர் வீட்டிற்கு செல்வதை குற்றமாக சொல்லவில்லை. அதேபோல் கோவலன் பரத்தையர் வீட்டிற்குபோகவேண்டும் என்று போகவில்லை .மாதவியை ஒரு கலை மகளாகநாட்டியமாதாகத்தான்கருதுகிறான்
‌அதேபோல் கண்ணகியை வெறுத்தும் கோவலன் பிரியவில்லை. அவனது வாழ்விலும் சரி மாதவியின் வாழ்விலும் சரி கண்ணகியின் வாழ்விலும் சரி திட்டமிட்டு எதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை .அப்படியானால் இவர்களின் மகளான மணிமேகலை ஏன் துறவுகொண்டாள் என ஆராய்வோம்.

பொறுப்புரை...
இது என்ன பொறுப்புரை. தலைப்புக்காக மட்டுமே ஆய்வை செய்து முடிக்காமல் அற்புதமான தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் மணிமேகலை இந்த இரண்டின் வரலாற்று உண்மைகளை காட்ட வேண்டும் என்ற பொறுப்போடு இந்த ஆய்வு . ஏனெனில் இந்த ஆய்வு மிகச் சுருக்கமாகவே இருக்கப்போகிறது கணக்கற்ற வாதப்பிரதிவாதங்களையும் கடந்து காலத்தையும் கடந்து கடல் கொண்டாலும் ஓலைச்சுவடிகளை கரையான் உண்டாலும் கண்விழித்து காப்பாற்றிய தமிழ் அறிஞர்களை தெரிந்துகொண்டு அவர்களை வணங்கி வாழ்த்தி செல்வதுதான் பொறுப்பானதாக இருக்கும் .ஆகவேதான் இந்த பொறுப்பு.
சிலப்பதிகாரத்திற்கு முதன்முதல் அரும்பத உரையாசிரியரும் அடுத்து அடியார்க்குநல்லாரும்உரைவகுத்தார்கள். அதன்பின் நாவலர் நா. மு .வேங்கடசாமி நாட்டார் அவர்களின் உரையும் புகார் காண்டத்திற்கு மட்டும் டாக்டர் ரா.கா.சண்முகம் செட்டியார் அவர்களின் உரையும் வெளிவந்தன.
அதன்பின் சிலப்பதிகாரம் முழுவதையும் நன்கு ஆராய்ந்து மேலே குறித்த இரு பழைய உரைகளுடன் அறிய பல குறிப்புகளுடனும் முதன்முதலாக அச்சில் ஏற்றி அருந்தமிழ் தொண்டாற்றிய ஈடுஇணையற்ற தமிழ் தாத்தா டாக்டர் உ. வே .சாமிநாதைய்யர் அவர்களையே சாரும்.
சித்தாந்தி கலாநிதி அவ்வை சு.துரைசாமிப்பிள்ளை _திரு நாராயண ஐயங்கார் போன்ற பல புலவர் பெருமக்கள் மணிமேகலை காப்பியத்திற்கு விளக்கமும் விரிவுரையும் வழங்கியுள்ளனர் என்றாலும் மற்ற தமிழ் காப்பியங்கள் மக்களிடையே பெற்ற மதிப்பை _செல்வாக்கை_ ஈர்ப்பை_ இந்த மணிமேகலை காப்பியம் பெறவில்லை என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இதற்கு என்ன காரணம் என்றால் பழந்தமிழ் நூல்கள் பலவும் உரைநடையில் இல்லை. பொருள் விளங்கி புரியவைக்க வேண்டிய புலவர் நடையில் உள்ளது .பாமரரும் படித்து பொருள் உணர்ந்து மகிழ்கின்ற வகையில் எளிய இனிய தமிழில் இருக்க வேண்டும் .யார் இதை எழுத முன்வருவார்கள் என்பது போல கேட்கிறார் மணிமேகலை பதிப்பாசிரியர் திரு ராம லட்சுமணன் அவர்கள் ( உமா பதிப்பகம் 2001).

சிலப்பதிகாரம்::: இது ஒரு நாடக காவியம் உள்ளத்தை வயப்படுத்தும் கதை அமைப்பு கொண்டது. உயிர்ப்புள்ள கதைமாந்தர்கள். ஏழிசை கூத்துக்கள் ;குரல்கள் ;ஒலிக்கின்றன . பண்கள்பயின்று வருகின்றனர் .அரசியல் சொல்லப்படுகின்றன .பேசப்படுகின்றன .மக்களின் பல்வேறு நிலை ;கொள்கை ;இனம் தொழிலை காண்கிறோம்.
தமிழகத்தின் வளம்- வரலாற்றுச் செய்திகள்- தத்துவ உண்மைகள் காணக்கிடக்கிறது. மூவேந்தர் நாட்டின் சிறப்பு _முத்தமிழ் இனிமையும்- காவிய அமைப்பும் தமிழில் தன்னிகரில்லாத உயர்வும் காணக்கிடைக்கிறது.
சிலப்பதிகாரம் தோன்றிய விதம் குறித்து::::
குணவாயில் கோட்டத்து அரசு துறந்து இருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்டுக்
குறன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப்
பொலம்பூ வேங்கை நலங்கினர் கொழநிழல்
ஒருமுலைஇழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்றஅவள்
காதல் கொழுநனைக் காட்டி அவளோடு எம்
கட் புலம் காண விட் புலம்போயது
இறும்பூது போதும் :அஃது அருள் நீ என..

குடநாட்டு வேந்தர் குடியினரும் சேரலர் மரபினருமான இளங்கோவடிகள் அரச வாழ்வைத் துறந்து குணவாயில் கோட்டத்து துறவியாக தங்கியிருந்தார். திருச்செங்குன்றத்து குரவர்கள் ஒரே கூட்டமாக வந்து பொன் நிற மலர்கள் நிறைந்த வேங்கை மரத்தின் நலம் கிளர் விக்கும் கொழுமையான நிழலிலே தன் ஒரு முலையினை இழந்தாளான ஒரு திருமா பத்தினி நின்றதை கண்டோம் .தேவருக்கு அரசனை சார்ந்தவர்களின் சிலர் அவ்விடம் வந்து அவளுடைய கணவனையும் அவளுக்கு காட்டி அவளையும் அழைத்துக்கொண்டு விண்ணுலகம் சென்றனர். இவற்றை எங்கள் கண்களால் கண்டோம் அடிகளே நீவீர் அறிந்து அருள்வீராக.
கோவலன் கண்ணகியை விட்டு மாதவியின் பால் மயங்கி கிடந்த போது மனைவி கண்ணகியிடம் இருந்த பொருள்களை எல்லாம் எடுத்துவந்து மாதவியை அலங்கரித்து பார்த்தான் .அதன்பின் மாதவி யைவிட்டு கண்ணகியோடு பாண்டிய நாட்டுக்குச் சென்றான். வணிகர் தெருவின் வழியாக சென்றபோது எதிர்ப்பட்ட பொன் வேலைசெய்யும் கொல்லன் ஒருவனிடம் கண்ணகியிடம் இருந்த இரண்டு கால் சிலம்பு களில் ஒன்றினை பொற்கொல்லன் இடம்கொடுக்க பொற்கொல்லன் தான் முன்பு களவாடிய அரசியின் காற்சிலம்பு நினைவுக்கு வர பாண்டிய மன்னனிடம் அரசியின் கால் சிலம்பில் திருடியவன் இவனே என்று கோவலன் மீது திருட்டு பட்டம் சுமத்த அரசனும் விசாரிக்காமல் அவனை கொன்றுவிட்டு அந்த கால் சிலம்பினைகொண்டுவாருங்கள் என்று உத்தரவிட கோவலன் வெட்டுண்டு விழுகிறான்..

அடுத்து மணிமேகலையை பார்ப்போம் ::::(கட்டுரையின் தொடர்ச்சி இரண்டாம் பகுதியாக) ‌‌‌‌. தொடர்ச்சி......

எழுதியவர் : சு.இராமஜோதி (25-Aug-20, 11:58 am)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 107

மேலே