அப்பாவின் தடங்கல்

=====================
சைக்கிள் வேண்டாம்
விழுந்து கை காலை உடைத்துக்கொள்வாய்
நடந்தே போ என்று ஆரம்பமான
முதல் தடங்கலை முறியடித்து
வெற்றிவாகை சூடக் கைகொடுத்தது
பிடிவாதமென்கின்ற உடும்புப் பிடி
**
விளையாட்டுப் போட்டியெல்லாம் எதற்கு
ஒழுங்கா படி அதுதான் உனக்கு
சோறு போடும் என்ற அடுத்தத் தடங்கலை
முறியடித்து வெற்றிக் கோப்பைகளை
வீட்டில் கொண்டுவந்து குவித்தப்போது
மேலும் மேலும் பிடிவாதத்தின் கை
ஓங்கத் தொடங்கியது
**
பாட்டு, கச்சேரி இந்தக்
கூத்தெல்லாம் எதற்கு
இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்ற
தடங்கலை முறையாக பயின்று
முறியடித்து ஞானம் அடைந்தபோது
பிடிவாதத்தால் எதையும் சாதிக்கலாம்
என்றத் திமிர் தலைக்கேறத் தொடங்கியது
**
பாட்டுக் கச்சேரி என்று அலையிற
உனக்கெல்லாம் மருத்துவமோ
பொறியியலோ கிடைக்காது
கலைதான் அமையும் என்றத் தடங்கலை
முறியடித்து பொரியியலாளனாகி
அப்பாவின் கனவுகளைத் தகர்த்து விட்டத்
தலைக்கணம் கிரீடமாகியது
**
அதன்பிறகு தடங்கல்கள் இடுவதைக்
குறைத்துக் கொண்ட அப்பாவிடம்
என்னங்க அவனுக்கு ஒரு
பொண்ணப் பார்த்துக் கட்டிவைக்கணும் என்ற
அம்மாவின் ஆலோசனைக்கு அவனுக்கெல்லாம்
பேசி முடிக்கிற கல்யாணம் அமையாது
காதல் கீதல்ன்னு ஏற்கனவே
பார்த்து வச்சிருப்பான் என்று முற்றுப்புள்ளி
வைத்துக் கொண்டவரின் இந்தத் தடங்களையும்
முறியடித்து பேசி மணமுடித்தது
பெருமைக்குரிய கர்வமாகியது
**
தடங்கல் என்ற உளியால்
பிடிவாத குணமென்னும் என்
மனப்பாறையைச் செதுக்கிச் செதுக்கி
என்னை ஒரு சிற்பமாக்கிவிட்டு
புகைப்படத்தில் மாலையாகிய
அப்போது புரியாத
அப்பாவின் தந்திரம்
சைக்கிள் கேட்டு அடம்பிடிக்கும்
என் மகனிடம்
இப்போது நான் அதே தடங்கலை
கையாளத் தொடங்குகையில்
மிகத் தெளிவாகவே புரிகிறது.
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (31-Aug-20, 2:19 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : appavin thadangal
பார்வை : 39

மேலே