அன்னத்தூவிகளாய்

அன்னத்தூவிகளாய்
======================================ருத்ரா

அந்த மேகங்களில் வா
உன்னை உப்பு மூட்டை தூக்கி
விளையாடுகிறேன்.
மழையில் அந்த பஞ்சுப்பொதிகள்
கரைந்து போகும் வரை
விளையாடலாம் வா.
அப்புறம் அன்னத்தூவிகளாய்
மெதுவே இறங்கி இறங்கி
விழுவோம்.
வானத்தின் நீலம் முழுதும் பருகி
அந்த நீல சங்கு பூக்களாய்
மண்ணில் பூத்திருப்போம்.
பனித்துளிகள்
அவற்றில் முத்துகள் கோக்கட்டும்.
வா!விளையாடுவோம்! வா!
விடியல்களிலும் அந்திகளிலும்
அந்தச்சிவப்பு
முத்தங்களின் நாணச்சிவப்பில்
சங்கமித்துக்கொள்ளட்டும்.
அன்பே!
காதல் என்னும் விளையாட்டு
முள் மண்டிய புதர்கள்
எனும் முரட்டு மண்ண ஸ்பர்சிக்கும் வரை
விளையாடலாம்.
மீண்டும் அதோ
வானவில்லின்
ஏழு வண்ணங்களை முறுக்கிச்செய்த‌
கனவு ஊஞ்சல்களில்
ஆடி விளையாடுவோம் வா!
என்ன சொற்கள் தானே செலவு.
அந்த சொக்கட்டான் விளையாட்டில்
நம் காதற்சொற்களை
அள்ளி வீசி வீசி
மீண்டும் அந்த மேக மண்டலத்துள்
மறைந்து கொள்ளலாம் வா.

======================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (1-Sep-20, 4:41 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 68

மேலே