உதிர்ந்த உறவுகள் வேர்பிடித்து எழுமா கட்டுரை பகுதி 1

உதிர்ந்த உறவுகள் வேர் பிடித்து எழுமா?
(பகுதி...1.)
முன்னுரை.....

'" ஆழத் துயரக் கடலில் நான் அமிழ்ந்து மடிந்து போகாமல்
வாழ்த்துணையாய் கரை சேர்த்து வைத்தருள்செய்வாய் என் தாயே"
என அன்னை உறவே ஆரம்ப உறவு .அதுவே அர்த்தம் அற்றதாய் மாறி வருகிறதோ? என்ற ஐயம் வருகிறது .எங்கு நோக்கினும் முதியோர் இல்லங்கள். தாய் தந்தை உறவுகள் அங்கே உறங்கிக் கிடக்கிறது அல்லது புழுங்கிக் கிடக்கிறது.
நமது பாரத நாடு ஒரு பழம்பெரும் நாடு. பல மதங்களும் மதங்களில் பல ஜாதிகளும் ஜாதிகளில் பல பிரிவுகளும் பிரிவுகளில் பல இனங்களும் இருந்தாலும் ஒரே குடும்பமாக ஒற்றுமையாக வாழ்கிற நாடு. வாழ்ந்து வருகிற நாடு.
அந்தப் ஒற்றுமையே உறவுகளால் ஆன கோட்டைகள் . உறவுகள் என்பது உலகத்தில் எங்கும் காண முடியாத பெரும் பெருமையையும் ஆழத்தையும் கொண்ட வாழ்க்கை முறை நமது வாழ்க்கை முறை.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"_ என்ற கணியன் பூங்குன்றனாரின் சொல் நமது உறவு முறையை அனைத்து உலகங்களுக்கும் பறைசாற்றுகின்றன.
இப்படி ஆலம் விழுதுகள் போல் படர்ந்து விரிந்து பக்கபலமாய் நின்ற உறவுகள் இன்று எங்கே போயிற்று? என்ன ஆயிற்று? வயதான முதியோர் எல்லாம் இன்று தனிமையில் பயப்படும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. எங்கே தவறு நடந்திருக்கிறது? அல்லது நடக்கிறது? என்ன செய்தால் சரி செய்யலாம்?
உறவு முறைகள் தெரியுமா?

வருங்காலத்தில் உறவுகளின் நிலை என்ன? என்னென்ன உறவுமுறைகல் நமக்குள் இருந்தன? என்பதாவது வருங்கால சந்ததியினருக்கு தெரியுமா ?இருக்கும் உறவுகளை யாவது மேம்பாடு அடைய செய்ய முடியுமா ?இப்படிப் பல கேள்விகள் எழத்தான் செய்கின்றன .அதற்கான விடை காண்பதுதான் இந்த முதிர்ந்த உறவுகள் வேர் பிடித்துஎழுமா ?என்ற கட்டுரையின் நோக்கம். இக்கால இளைஞர்கள் உறவுமுறைகளை புரிந்து கொள்ள கூட தயாராக இல்லை .இக்கட்டுரை மூலம் சிறிய கருத்துக்களை யாவது அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
நிறைவான உறவுகள் . நிம்மதியாய் வாழ்ந்தவர்கள்...
குடும்பம்....... தாய் தந்தை மகன் மகள் தாய்வழி தாத்தா பாட்டி தந்தை வழி தாத்தா பாட்டி.
மகன் குடும்பம்.... மகன் மருமகள் பேரக்குழந்தைகள் தனது தாய் தந்தை தாய்வழி தாத்தா பாட்டி தந்தை வழி தாத்தா பாட்டி அண்ணன் தம்பி அவர்களின் குடும்பங்கள் அத்தனையும் ஒரே குடும்பமாக..
மகள் குடும்பம்..... மகள் மாப்பிள்ளை பேரக்குழந்தைகள் சம்பந்தி வீட்டார் மாப்பிள்ளையின் தாய் தந்தை மாப்பிள்ளையின் அண்ணன் தம்பி அவர்களின் குடும்பம் அத்தனையும் ஒரே குடும்பமாக.
மகன் மகளுக்கான உறவுகள் ....
மச்சினன் மச்சினிச்சி மாமனார் மாமியார் நாத்தனார் சகலை அவர்களின் மனைவிகள் கணவர்கள் அவர்களின் குழந்தைகள் என விரிந்து கொண்டே ஆலமர விழுதுகளாய் பரவி நிற்கும்.
தாய் வழி உறவுகள்.... தாத்தா பாட்டி தாத்தாவின் சகோதரர்கள் பெரிய தாத்தா சின்ன தாத்தா. பாட்டியின் சகோதரிகள் ...பெரிய பாட்டி சின்ன பாட்டி . தாயின் சகோதரன் தாய்மாமன் மாமன் மனைவி அத்தை இவர்களின் குழந்தைகள் மருமகன் மருமகள் என உறவுமுறை ஆற்றின் கிளைகளாய் பரந்து வாழும்.
தாயின் சகோதரிகள்... பெரியம்மா பெரியப்பா இவர்களின் குழந்தைகள் சகோதரர்களாய். சித்தி சித்தப்பா இவர்களின் குழந்தைகள் சகோதரர்களாய் சகோதரிகளாய்.
தந்தைவழி உறவுகள் ....தாத்தா பாட்டி பெரிய தாத்தா சிறிய தாத்தா சித்தப்பா சித்தி அவர்களின் குழந்தைகள்அண்ணன் தம்பி பெரியப்பா பெரியம்மா அவர்களின் குழந்தைகள்அண்ணன் தம்பி அக்கா தங்கை என உறவுகளின் வேர்கள்.
பங்காளிகள்..... பெரியப்பா சித்தப்பா பிள்ளைகள் பங்காளிகளாகிறார்கள்.பங்கு+ஆள்பவர்கள் =பங்காளிகள்.
இப்படி ரத்த சம்பந்த உறவுகள் பெருகி கொண்டே போய் ஒரு குடும்பம் என எடுத்துக் கொண்டால் ஒரு கிராமமே உறவுகளாய் தான் இருக்கும் .ஏனெனில் ஒரு குடும்பத்தில் சராசரியாக 6 குழந்தைகளுக்கு மேல் இருந்தார்கள் .இத்தனை உறவுகளும் பெருக்கல் 6 போட்டு பார்த்தால் சுமார் 100 பேருக்கு மேலே வந்துவிடும்.
உறவுகளின் நன்மைகள்......
இப்படி விரிந்த உறவு முறை குடும்பத்தோடு பின்னிப்பிணைந்து இருந்ததால் குடும்பங்கள் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தது யாருக்கேனும் ஒன்று எனில் கிராமமே திரண்டது .தங்களது வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் நுழைய அனுமதிக்காத பலம் இருந்தது. அதனால்தான் 200 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள் கூட நமது கலாச்சாரத்தை வாழ்க்கை முறையை அழிக்க முடியவில்லை .சர்வாதிகாரத்தால் அடக்க முடிந்தது.
திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம் பதினெட்டு பட்டி என்று .அது கற்பனை அல்ல. வெறும் கதையல்ல. நமது வாழ்க்கை முறை அப்படித்தான் இருந்தது. 18 கிராமங்களில் ரத்த சம்பந்தமான உறவு முறைகள் நாட்டில் பின்னிப்பிணைந்து பரந்து விரிந்து கிடந்தது. அது நல்ல பண்பு உடையவர்களால் காக்கப்பட்டு வளர்க்கப்பட்டது .பெரியோர்கள் குடும்பத்தோடு இருந்ததால் அனுபவரீதியாக சொந்தங்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள் .அதைத்தான் சங்க இலக்கியம் குறுந்தொகை
" பண்புடையார் பட்டண்டுலகு அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன் ".....என்று சொல்கிறது.
உறவுகளால் நன்மை..(. பகுதி இரண்டில் தொடர்ச்சியாக பார்க்கலாம்).

எழுதியவர் : சு.இராமஜோதி (9-Sep-20, 6:48 am)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 402

மேலே