வசீகரக் கவி பாரதி
வாழ்த்து மலர்கள் தூவி
புகழ்கிறேன் உன்னை மகாகவி...
உந்தன் நினைவு நாளின் மாதம் ஆவணி
என்றும் உனைப் போற்றும் இந்த அவனி..
சுப்பிரமணிய பாரதி... நீ...
குலத் தாழ்ச்சி உயர்ச்சி
சொல்லல் பாவமெனக் கூறி
சாதிய ஆதிக்க மலை
உடைக்க வந்த உளி...
ஆதிக்க சமுதாயம் தோன்றிய நீ
சாதிகள் இல்லையடி பாப்பா.. பாடி
சாதியொழிப்பில் சாதிக்க
வந்துதித்த தெய்வப் பிறவி...
அப்படி ஒரு காலத்தில் இப்படியும்
என வியக்க வைத்த
இணையில்லா புரட்சிக் கவி...
அநீதி எதிர்க்க அக்னி வரி...
மனிதம் வளர்க்க அமுத வரி..
அமுதும் தேனும் ஊறும் வரிக்கு வரி
அதுதான் மகாகவி பாரதி...
நீ... அந்நியன் வெளியேற
கனன்று எரிந்த
சுதந்திர வேள்வித் தீ...
மாதர்தம்மை இழிவு செய்யும்
மடமையை கொளுத்துவோம்...
பெண் விடுதலைக்குக் குரல் எழுப்பிய
புதிய பாரதத்தின் சிற்பி...
கண்களில் கேட்டாய் ஒளி...
நெஞ்சினில் படைத்தாய் உறுதி..
மரணமே இல்லை உனக்கு இனி...
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே..
நீங்களெல்லாம் சொற்பனந் தானோ?
பல தோற்ற மயக்கங்களோ...
மா பலா வாழை தோற்றிடும்
உன் பாடல்களில்... அதில்
பிரகாசிக்கும் ஞான ஒளி...
எல்லோரும் ஓர்குலம்
எல்லோரும் ஓரினம்..
பாடிய பாரதி உன்னை
மறவாது இந்தப் புவி..
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்...
உனையன்றி யார் சொல்வார்
இதைவிட இங்கு சமநீதி.. சமூகநீதி..
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?.. பாடி
அகவிருள் நீக்கும் முகவரி...
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே...
இந்த பாடல் மட்டுமன்றி... நீ
எழுதிய எல்லா பாடல்களும்
எமக்கு என்றும் தரும் சக்தி...
யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழி போல் இனிதாவது
எங்கும் காணோம்
தெரிந்து சொன்ன பாரதி நீ
தமிழ்க்கடல் நீந்தும் இன்பத் தோணி...
பள்ளித் தலமனைத்தும்
கோயில் செய்கு வோம்,
எங்கள்பாரத தேசமென்று
தோள்கொட்டுவோம்... பாடிய
நீதான்... நீதான்.. எங்கள் ஏணி...
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -
கலைச்செல்வங்கள் யாவுங்
கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
தெளிவுறுத்திய அறிவுத் தேனீ...
காசி நகர்ப்புலவர் பேசும்
உரைதான் காஞ்சியில்
கேட்பதற்கோர் கருவி செய்வோம்...
முன்னரே உணர்ந்து சொன்ன
நீ... நல்ல தீர்க்கதரிசி...
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும்
தாழ்வேயென அறிந்து சொன்ன
நீ ஒரு சமூக விஞ்ஞானி...
இச்சகத்து ளோரெல்லாம்
எதிர்த்து நின்றபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே...
வாழ வழி சொல்லும் மெஞ்ஞானி...
ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி
என்றும் எங்களின்
உரிமைக் குரல் நீ...
தீரத்திலே படை வீரத்திலே
வண்மையிலே உளத்திண்மையிலே
என்று பாடி நாடு காக்க
முரசு கொட்டும் சிப்பாய் நீ...
ஞானத்திலே உயர் மானத்திலே
ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே
என்று பாடி இளைஞர்களைத்
தட்டி எழுப்பும் தளபதியும் நீ...
நெஞ்சு பொறுக்குதிலையே இந்த
நிலைகெட்ட மனிதரை
நினைந்துவிட்டால்...
அஞ்சியஞ்சிச் சாவார்... இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே...
சிலிர்த்தெழும் உந்தன்
பாடல்களில் இந்தத் தரணி...
வலிமையற்ற தோளினாய் போ போ..
பொலிவிலா முகத்தினாய் போ போ..
களிபடைத்த மொழியினாய் வா வா..
கடுமைகொண்ட தோளினாய் வா வா...
பாரதம் ஜெயிக்க பாங்குடன்
பாடுவாய் போர்ப் பரணி...
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கொரு காட்டிலோர்
பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல்வீரத்தில் குஞ்சென்றும்
மூப்பென்றும் உண்டோ...
நிதர்சனம் பகிரும் ஒளிவிளக்கு நீ...
சுதந்திர தேதியில்
இருக்கமாட்டோமெனக் கருதி
ஆடுவோமே... பள்ளுப் பாடுவோமே...
ஆனந்த சுதந்திரம்
அடைந்துவிட்டோமென்று
விடுதலைக்கு முன்பே
அதனைக் கொண்டாடி மகிழ்ந்து
முப்பத்தொன்பது வயதே வாழ்ந்தும்
முழுமை பெற்றுக்கொண்டாய் நீ...
வங்கத்தில் ஓடி வரும்
நீரின் மிகையால்
மையத்து நாடுகளில்
பயிர் செய்குவோம்
விவசாயம் செழிக்க வந்த
ஆலோசனைக் கருவூலம் நீ...
நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
என்று... பாடிய எல்லாம்
படித்தவர்க்குப் புரிவதற்கு
எளிமையும் அழகும் சேர்த்துப் பாடிய
வசீகரக் கவிஞனே... நீயே
எமக்கு கவிகளுக்கெல்லாம் கவி..
சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
பாடி தேசியம் வளர்த்த பாரதி
என்றும் வாழிய.. வாழிய நீ...
அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்...
👍💐🙏👏🌹