சமாதான மருந்து

(சிறுகதை)
===========
தூர இடத்திற்கு ஒரே மகளைக் கட்டிகொடுத்து ஒரு சில மாதங்களேயான பொன்னம்மாவின் மனசுக்குள் மகள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பாளோ என்ற எண்ணம் வலுத்துக் கொண்டிருந்தது.
ஏதோ வேலையாக கணவன் வெளியே சென்றிருக்க வீட்டு வேலைகளை எல்லாம் வேலைக்காரியை ஏவி செய்து முடித்துவிட்ட பிறகும் இன்னும் நேரமிருக்கவே தொலைக்காட்சியை இயங்கவிட்டுக் கண்களை அதிலே மேயவிட்டாள். எந்த நிகழ்ச்சியிலும் மனம் லயிக்காமல் போகவே முன் வாசல் அருகிலிருக்கும் சாளரத்தைத் திறந்தாள். தேயிலைத் தோட்டம் கண்ணுக்கெட்டிய தூரம்வரை கொட்டிவைத்திருந்த பசுமை ஒரு பச்சைக் கம்பளம் விரித்ததுபோல் இருந்தது. நாற்புறமும் சூழ்ந்திருந்த மலைகளுக்கு நடுவே ஆங்காங்கே சிற்றோடைகளும் நீர்வீழ்ச்சிகளும் கண்ணுக்குக் குளிர்ச்சியூட்டின.மேற்கில் மறைய எத்தனிக்கும் சூரியனின் இளஞ்சூட்டில் முற்றத்தில் மலர்ந்திருந்த முல்லைப் பூக்களின் நறுமணம் மூக்கைத் துளைத்தது. மாமரக்கிளையில் கிளிகள் இரண்டு கூட்டை நோக்கிப் புறப்படும் அவசரத்தில் ஒன்றோடொன்று அலகுகளால் உரசிக்கொண்டு ஏதோ சமிக்ஞை செய்த வண்ணம் இருக்கின்றன. ஆனாலும் அவை எதிலும் மனம் லயிக்காத பொன்னம்மா மாலை இளந்தென்றலும் மேனியைச் சுடுவது போலிருக்க சாளரத்தைச் சாத்திவிட்டு அருகே கிடந்த சொகுசு நாற்காலியில் அமர்ந்துகொண்டு தொலைக்காட்சிப்பெட்டியை இயங்கவைத்தாள். அதுவும் எரிகிறத் தீயில் எண்ணெய் வார்த்ததுபோல் ஏதோ ஒரு சினிமாப்பாட்டை ஒளி ஒலியாக்கியது. ஒரு தேயிலைத் தோட்டத்திற்குச் சொந்தக்காரரின் மனைவியாக ஆடம்பரமான அந்த மாளிகையில் இருந்தவாறு அந்த மாலைபொழுதில் மணலில் விழுந்தப் புழுவாகப் பொன்னம்மா தவிப்பதற்கும் காரணமில்லாமலில்லை. .
என்னதான் செல்வந்த வீட்டுப் பெண்ணாக இருந்தாலும் பிறந்தவீட்டில் அவளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியவற்றை முறையாகக் கற்றுக் கொடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை. அந்தக் கடமையிலிருந்து அவளை அவள் விருப்பத்திற்கேற்ப வளர்க்கும் தாய்மார்கள் கொடுக்கும் செல்லமானது அவள் மணமுடித்து இன்னொரு வீட்டுக்குச் செல்ல நேர்கையில் அவள் புகுந்த வீட்டில் எப்படி வாழ்வாளோ என்றக் கவலையை காலம் அந்தத் தாய்மார்க்கே கொடுத்துவிடுகிறது. ஒரு சராசரித் தாயின் தவிப்போடு இருந்தவளிடம் வந்த வேலைக்காரி “அம்மா ரெண்டு நாளைக்கு முன்ன ஊரடங்கு இல்லாதபொது அவசரமா அவரு வேலைசெய்யிற முதலாளியோட எங்க வீட்டுக்காரரு கண்டிக்குப் போனாரு..””
“ம்ம் அதுக்கென்ன?” “இல்லம்மா நம்ம சின்னம்மாவை அங்கே எங்கோ கடையிலே பார்த்தாராம்”சின்னம்மா என்றதும் உசாரான பொன்னம்மா ‘’ம்ம் சொல்லு சொல்லு’’ ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினாள். ‘’ அம்மாவும் ஐயாவும் மட்டும்தான் இப்போ வீட்டிலே இருக்காங்களாம், அம்மாவோட மாமியார் மாமனார் எல்லாம் கொழும்புல அவங்க மக வீட்டுக்குப் போய்ட்டாங்கன்னு சொன்னாங்களாம்.” ‘வேறு ஏதாச்சும் சொன்னாரா’’ ‘’ சமையலுக்குப் காய்கறி வாங்கிக்கொண்டு இருந்தாங்களாம் இவரு சுகசெய்திய கேட்டுட்டு வந்துட்டாராம்’’ “என்னது.. சமையலுக்கு காய்கறி வாங்கினாளா.. இவளுக்கு சமைக்கத் தெரியாதேடீ.. எப்படி சமாளிக்கிறாளோ தெரியலியே..’’ ‘’அதாம்மா எனக்கும் கவலையா இருக்கு’ ‘எல்லாம் அவங்க அப்பா கொடுத்த செல்லம் ஒரே புள்ள ஒரே புள்ளன்னு அவளை பெரிய படிப்புப் படிக்கவைக்கப் போய் இப்போ ஒரு பொண்ணு அத்தியாவசியமா படிச்சு வைச்சிருக்கக் கூடிய சமையல் கலையை படிக்க விடாம பண்ணிட்டாரு.’’ புலம்பத்தொடங்கிய பொன்னம்மாவிடமிருந்து வேலைக்காரி நழுவினாள்
கல்லூரிக்குப் படிப்பிற்கென்று சென்றவள், படிப்போடு நகரத்துக் கடைகளின் நாகரீக ருசிகர உணவிற்கு நாக்கைப் பழக்கிக்கொண்டு வந்துவிட்டாள். படிப்பிற்கு ஏற்றத் தொழிலைத் தேடிக்கொண்டிருந்த நயனாவிற்கு வேலை அமைவதற்குள்ளேயே மாலை சூடும் வேளை அமைந்துவிட்டது. நயனாவிற்குத் தக்க மாப்பிள்ளை. வீட்டிற்கு ஒரே பிள்ளை. நல்ல உத்தியோகத்தில் இருந்ததாலும் முதல் சம்மந்தத்தை விட்டுவிடக்கூடாது என்று ஒரு சுபயோக சுபதினத்தில் கெட்டி மேளம் கொட்டி மாப்பிள்ளையோடு அனுப்பி விட்டார்கள். எல்லா பொருத்தமும் பார்த்துக் கட்டிவைத்தாலும் சமையல் தெரியாதவள் என்றால் என்னதான் தங்கமான மாமியார் என்றாலும் ஏழாம் பொருத்தமகிவிடும் என்பது பொன்னம்மாவைக் குடைந்தது.
மாப்பிள்ளைக்கு கொஞ்சமேனும் சமையல் தெரியுமென்றாலும் சமாளித்துக்கொண்டு வாழ்ந்துவிடுவாள். மாப்பிள்ளையும் சமையல் தெரியாதவர் என்றால்.. நினைக்கவே பொன்னம்மாவிற்கு வருத்தமாக இருந்தது. பசி பொறுக்காதவள். என்ன செய்ய போகிறாளோ.. நினைத்தவள் ஒரு தொலைபேசி அழைப்பெடுத்துப் பேசலாம் என்று எண்ணினாள். கூடவே புதிதாய் மணமுடித்தவர்கள். ஊடலும் கூடலுமாய் இருக்கலாம். இந்த நேரத்தில் அவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது. காலையில் பேசுவோம் என்று தனக்குத்தானே சமாதானப்படுத்தி கொண்டாள். என்றாலும் நினைவுகள் நயனாவைச் சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்தன.
கொரோனா வைரஸ் காரணமாக நாடே ஊரடங்கில் கிடக்கும் இந்நிலையில் கணவனுக்கு வாய்ருசிக்க ஆக்கிப் போடவேண்டியவள் உதவியென்று அக்கம் பக்கத்தவர்களையும் நாட முடியாத சூழ்நிலையில் முன்பொருநாள் சாம்பாருக்குக் காய்கறி நறுக்கச் சொன்னபோது நடந்த சம்பவம் பொன்னம்மாவின் நினைவில் வந்தது..
ஒரு மூன்று பேருக்கு சமைக்க மூன்றடி நீளமுள்ள புடலங்காய், ஒருகிலோ முருங்கை, ஒரு கிலோவோற்கும் அதிகமான கத்தரிக்காய் என்று ஒரு பத்துபேர் இருக்கும் குடும்பத்திற்குத் தேவையான அளவு நறுக்கித் தள்ளிவிட்டாள். நறுக்கியத் துண்டுகளின் அளவைப் பார்த்தால் சாம்பாரின் மேல் இருக்கும் அபிமானம் நம்மைவிட்டுத் தூர தேசத்திற்குச் சென்றுவிடும். வெட்டிய காய்கறி வீணாகக் கூடாதே என்பதற்காக அக்கம் பக்கத்தவர்களுக்குக் கொடுக்க நேர்ந்தது. சொந்த வீட்டில் அதுவும் காய்கறி விளையும் இடத்தில் இது நடந்ததால் அதை ஒரு பெரிய சம்பவமாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவள் புகுந்த வீட்டில் இப்படி நடந்தால் என் வளர்ப்பை ஏளனம் செய்வார்களே என்பதும் பொன்னம்மாவின் பெருங்கவலையாக இருந்தது.
கவலை ஒருபுறம் இருக்கட்டும் கடைகள், உணவகங்கள் எல்லாம் அடைக்கப்பட்டு வீட்டிலேயே சமைத்து உண்ண வேண்டும் என்றக் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட கொரோனா காலத்தில் அவள் ஒருவேளை சாப்பாட்டிற்காக கணவனை என்ன பாடு படுத்துகிறாளோ தெரியாது. வயிற்றுப் பசியைப் போக்கும் வல்லமையே இல்லாதவள் வாலிப பசித்தொட்டு வாழ்க்கையில் ஏற்படும் எல்லாப்சிகளையும் அடக்கிக்கொண்டு வாழ்வை முன்னெடுத்துச் செல்ல என்ன பாடு படுவாளோ என்று நினைத்தபோது நானும் கூட ஒரு காலத்தில் இவளைவிடச் சின்னவயதில் கல்யாணமாகி கணவன் வீட்டில் அனுபவித்த சங்கடங்கள் ஒருகணம் கண்முன் வந்து போனது...
எதுவித வசதிகளுமற்ற ஒரு ஒரு சிறிய கிராமத்தில் வாழ்வை ஆரம்பித்து படிப்படியாக ஒவ்வொரு அனுபவங்களின் மூலம் ஒவ்வொரு பாடங்களைக் கற்று இன்று தலைநிமிர்ந்து நிற்பதைப் பார்க்கப் பொன்னம்மாவிற்கே ஆச்சரியமாக இருந்தது. இது போல வாழ்வில் அவளும் வாழ்ந்துகொண்டே வாழ்வை கற்றுக் கொள்வாள். இனி கலங்கிப் பயனில்லை என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள். அந்த சமாதானமே அவளுடைய மனத்துயருக்கு ஒரு மருந்தாகவும் இருந்தது.
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-Sep-20, 1:48 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 120

மேலே