வேணாம் வேணாம் வேணவே வேணாம்8 வக்கீல்

அந்தக் காலத்திலே இஞ்சினியர், டாக்டர்களை விட, ஏன், அரசியல்வாதிகளைவிட, வக்கீல் தொழிலுக்கு அசாத்திய மதிப்பு இருந்தது. சுதந்திரப் போராட்டத்திலே பெரிய அளவுலே கலந்துகிட்டவங்களிலே பலபேரும் வக்கீல்கள்தான். அவ்வளவு தூரம் போவானேன். காந்தியே வக்கீல்தான். நேருவும்கூட வக்கீல்தான். நம்மூரிலே இருந்து போன ராஜாஜியும் வக்கீல்தான். இந்த மாதிரி சுதந்திரப் போராட்டத்துலே கலந்துகிட்ட பெரிய மனுஷங்களிலே பல பேரும் வக்கீல்கள்தான். வக்கீல்கள்னாலே பொதுஜனங்க அவங்களைத் தெய்வமாப் பாத்த காலம் ஒண்ணு உண்டு. அரசியல்வாதிகள், அதிலும் குறிப்பா, பிரிடிஷ் அரசியல் வாதிகள் கண்டு பயந்ததே நம்ம வக்கீல்களைப் பாத்துத்தான். ஆனா, இன்னிக்கு அப்படியா இருக்கு? பெரும்பாலும் உதவாக்கரைங்க, வேறே படிப்புக்குப் போக முடியாதவங்க இவங்கதான் இப்ப இந்த வக்கீல் படிப்புக்குப் போறாங்க. படிச்சிக் கிட்டு இருக்கும்போதே பிரபல வக்கீலா ஆயிட்ட மாதிரி அவங்க பண்ற ரௌசு இருக்கே தாங்க முடியல்லே. பார் கௌன்சில்லே ரெஜிஸ்டர் பண்ணிக்கிட்டாதான் பிராக்டிஸ் பண்ணலாம்கிறதையே மறந்துடறாங்க. அடிதடி, வெட்டு குத்துன்னு இறங்கி படிச்ச அப்புறம் கிரிமினல் வக்கீல் ஆறதுக்கு முன்னாடியே கிரிமினல் ஆயிடறாங்க. ரோட்டுலே இருந்து, காலேஜ், கோர்ட் வாசல் வரையிலும் தகராறு, அடிதடின்னு இறங்கிடறாங்க. பாதி நாள் ஏதாவது போராட்டங்களிலே ஈடுபடறாங்க. அது ஹெல்மெட்டா இருக்கட்டும், இல்லை, ஸ்ட்ரீட் லைட்டா இருக்கட்டும், எந்தப் போராட்டமா இருந்தாலும் வக்கீல்கள் முன்னணியிலே இருக்கிறதைப் பாக்கலாம். இதனாலே கோர்ட் நடவடிக்கைகளெல்லாம் ரொம்ப பாதிக்கப்படுது. ஒரு வருஷத்துலே முடிய வேண்டிய கேஸெல்லாம் வருஷக் கணக்கா போய்க்கிட்டே இருக்கு.
ஒருத்தர் என்கிட்டே கேட்டார் "வக்கீல்சார், இந்தக் கேஸை என்னோட ஆயுளுக்குள்ளே முடிக்காம பாத்துக்குங்க"ன்னு. நான் " உங்க கேஸை உங்க காலத்துக்குள்ளே முடிக்கணும்னு கேட்டாத்தான் பிரச்சினை. இப்ப நீங்க கேக்கறது பிரச்சினையை இல்லேன்னு. நாங்க வாய்தா வாங்கியே கேஸை இழு இழுன்னு இழுத்து அடிச்சு உங்க பிரச்சினையைத் தீர்த்து வெக்க மாட்டோமா என்ன ?" ன்னு சொன்னேன். அந்த மாதிரி ஆயிட்டுது.
பொதுமக்கள் இன்னிக்கி வக்கீல்னாலே ஏதோ ஒரு வக்ர ஜந்துவைப் பாக்கற மாதிரி பாக்கறாங்க. அவங்க இப்ப ஒரு கேலிப் பொருளா ஆயிட்டாங்க. இப்ப பாஸ் பண்ணி வக்கீல் தொழிலுக்கு வரவங்களுக்கு சட்டமே சரியாத் தெரியறதில்லே. பல பேருக்குப் பிராக்டிஸே கிடைக்கிறது இல்லே. எங்காத்துக்காரரும் கோர்ட்டுக்குப் போறார்னு அந்தக் காலத்துலே கேலி பண்ணுவாங்க. இண்ணிக்கு பெரும்பாலான வக்கீல்களுடைய நிலைமை அப்படித்தான் ஆகிப்போச்சு. நல்ல பிராக்டிஸ் இருக்கிற வக்கீல்களை விரல் விட்டு எண்ணிடலாம். பெரும்பாலானோருக்கு பிராக்டிஸே கிடையாது. இதனாலே கேஸ் வக்கீலைத் தேடி வர காலம் போயி இப்ப கேஸ் பிடிக்க நாங்க நாயா பேயா அலைய வேண்டி இருக்கு. இப்ப கூட நீங்க பார்க்கலாம் கோர்ட் வாசல்லே அந்தக்காலத்துலே சில வக்கீல் குமாஸ்தாக்களும், ஒருசில பத்திரம் எழுதறவங்களும் செய்யற வேலையை இப்ப கறுப்புக்கோட்டை மாட்டிக்கிட்டு வக்கீல்கள்தான் செஞ்சிக்கிட்டு இருக்காங்க.

கேஸ் லேசுலே கிடைக்காததனாலே கிடைக்கிற கேஸை எடுத்துக்கிட்டு நூறு, ஆயிரம்னு வாங்க வேண்டிய இடத்துலே பத்து, நூறுன்னு வாங்கி கைக்கும் வாய்க்கும் எட்டாத ஒரு பிச்சைக்கார வாழ்வை வாழ்ந்துகிட்டு இருக்கறவங்க தான் பல வக்கீல்களும். நல்ல அரசியல் சப்போர்டும், பண வசதியும், ஜாதி பலமும் இருக்கிறவங்கதான் இப்போ இந்தத் தொழில்லே காசு பண்ண முடியும். மத்தவங்க எல்லாம் அன்றாடங்காய்ச்சியாத்தான் நாளைத் தள்ளறாங்க. எந்நேரமும் உழைச்சிக்கிட்டே இருக்கணும். கொஞ்சம் அசந்தாக்கூட வர வேண்டிய கேஸும் வராம போயிடும்.

நெனச்சா புதுசு புதுசா தினமும் ஒரு சட்டம் வருது, அமெண்ட்மெண்ட் வருது. இதை எல்லாம் கவனிச்சிக்கிட்டே இருக்கணும். எந்த மாதிரி கேஸுலே எந்த மாதிரி தீர்ப்பு எத்தானாம் வருஷம் வந்திருக்குங்கறது போல விஷயங்களை எல்லாம் தெரிஞ்சி வச்சிக்கணும். அதுக்கு நிறைய சட்ட புத்தகங்களை படிச்சிக்கிட்டே இருக்கணும். அதுக்கு வீட்டுலேயே ஒரு சட்டப்புத்தக லைப்ரரி வச்சுக்கணும். இது எல்லோராலேயும் முடியாது.
பாதி நேரம் க்ரிமினல்ஸ், கேப்மாரிங்க, திருடங்க, ஏமாத்தறவங்க இவங்களோடே தான் நாங்க டீல் பண்ண வேண்டி இருக்கு. இதனாலே எங்களுக்கும், எங்க குடும்பத்துக்கும் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு. பொய் பேசமாட்டோம் நெஜந்தான் பேசுவோம்னு இருந்தா நாங்களே எங்களுக்குள்ளேயே தான் பேசிக்கணும். தெரிஞ்சே தப்பான கேஸெல்லாம் எடுத்துக்க வேண்டி இருக்கு. எங்க பொழப்பு அப்படி ஆயிட்டுது.

இந்தக் காலத்துலே பலவிதமான குற்றங்களும் நடக்கிறதாலே எல்லாத்தைப்பத்தியும் கொஞ்சமாவது தெரிஞ்சி வெச்சிக்கணும். அது சிவிலா இருந்தாலும் சரி, கிரிமினலா இருந்தாலும் சரி , கணக்கா இருந்தாலும் சரி, கம்ப்யூட்டரா இருந்தாலும் சரி, விளையாட்டா இருந்தாலும் சரி, விஞ்ஞானமா இருந்தாலும் சரி, மாயமா இருந்தாலும் சரி, மந்திரமா இருந்தாலும் சரி, தந்திரமா இருந்தாலும் சரி, யந்திரமா இருந்தாலும் சரி, நம்மைச் சுத்தி நடக்கிற அத்தனையைப் பத்தியும் நாங்க தெரிஞ்சு வச்சிக்கணும்.

சில பேர் நெனச்சிக்கிட்டு இருக்காங்க வக்கீல் தொழில் ஜாலியான வேலை. யார் கிட்டேயும் கைகட்டிச் சேவகம் செய்ய வேண்டாம். இண்டிபெண்டண்டா இருக்கலாம்னு. அது ஓரளவுதான் உண்மை. அதுலே இருக்கிற தொந்திரவு இந்தத் தொழில்லே இருக்கிறவங்களுக்குத்தான் தெரியும். ஜட்ஜோட மூடு, அவரோடே டேஸ்ட் எல்லாம் பாத்து கேஸை பிரசன்ட் பண்ணத் தெரியணும். இதுலே ரிடயர்மெண்டே கிடையாது. கடோசி வரையிலும் நாங்க கத்தியே சாகணும்.

இப்ப எல்லாம் வக்கீலுக்குப் படிக்கிறான்னு சொன்னாலே, அவனுக்குப் பொண்ணு தரமாட்டேங்கறாங்க. அப்புறம் என்னத்தைச் சொல்ல? அதிர்ஷ்டம் இருந்து முன்னுக்கு வந்தவங்களுக்கு இது ஒரு பொன் முட்டையிடும் வாத்து. இல்லேன்னா இது வெறும் குட்டையிலே கெடக்கற வாத்துதான். நான் தெரியாம வக்கீலுக்குப் படிச்சிப் படற பாடு போதும். அது என்னோட போகட்டும். மாசா மாசம் சம்பளம் வாங்கற வேலையா இருந்து அப்புறம் பென்ஷனும் கிடைக்கற வேலையா இருந்தா ரொம்ப சௌகரியம். நிச்சயமா என் பையனை வக்கீலுக்குப் படிக்க வைக்கப் போவதில்லை. வக்கீல் வேலை அவனுக்கு வேணாம். ..வேணாம்........வேணவே வேணாம்

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (16-Sep-20, 4:11 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 134

மேலே