நிம்மதி வாசம்

===============
என் கண்ணீர்த் துளிகளே
உங்கள் கண்களைத் துடைத்துக் கொண்டு
எனக்காகவும் ஒரு துளி
கண்ணீர் சிந்துங்கள்
**
என் கவலைகளே
உங்கள் கவலைகளை ஒரு ஓரமாய்
ஒதுக்கி வைத்துவிட்டு
எனக்காக சற்று
கவலைப்படுங்கள்
**
என் வேதனைகளே
உங்கள் வேதனைகளை மறக்க
நீங்கள் பயன்படுத்தும்
மாய மருந்துகளில் ஒரு சொட்டு
என் கவலைகளின் நாவிலும்
இட்டு விடுங்கள்
**
என் சோதனைகளே
உங்கள் சோதனைகளை
நீங்கள் கட்டிவைத்த மூட்டையில்
என் சோதனைகளையும் வைத்துக்
கட்டி விடுங்கள்
**
என் பசியே
உன் பசியைப் பட்டினிப் போட்டுக்
கொன்றுவிட்டதுபோல்
என் பசியையும் கொன்றுவிடு
**
என் எதிர்பார்ப்புகளே
எப்போதும் என் எதிர்பார்ப்புகளை
ஏமாற்றவது என்னும் உங்கள்
எதிர்பார்ப்புகளைக் கைவிட்டு
என் ஏமாற்றங்களை
ஏமாற்றும் வழியைக் காட்டுங்கள்
**
என் சுமைகளே
எனக்காக நீங்கள் சுமந்துவந்த
சுமைகளை இறக்கிவைத்து
நீங்கள் இளைப்பாறும் மரத்தடியில்
எனக்கும் சற்று இடம் கொடுங்கள்.
**
என் காயங்களே
உங்கள் காயங்களுக்கு நீங்கள்
இட்டுக்கொள்ளும் ஒத்தடச் சூட்டை
எனக்காகவும் இட்டு ஆற்றுப்படுத்துங்கள்
என்னையும் உறங்கவிடுங்கள்.
**
என் மகிழ்ச்சியே
என்னிடமிருந்தால் நீ நீயாக
இருக்க முடியாதென
நீண்ட தூரம் போன மகிழ்ச்சியே..
வாழ்க்கைப் பாதையில்
காலங்கள் போட்டத் தடைதாண்டி
வெற்றிக் கோட்டை எட்டிப்பிடிக்க
ஓடுகின்றப் பந்தயத்தில்
உன் வாசலைக் கடக்க
உன்னையே அள்ளி என்னில்
பூக்களாய் தூவிவிடு
என் நிம்மதியில் அதன் வாசம்
நீங்காமல் இருக்கட்டும்.
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (20-Sep-20, 2:29 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : nimmathi vaasam
பார்வை : 137

மேலே