சேர்த்த ஆசைகள் - ஹைக்கூ விளக்கத்துடன்
மனைவி துணிகளைச் சலவை செய்துகொண்டிருந்தாள். என்னிடம் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை துணி துவைக்கும் இடத்திற்குச் சென்று சோப்புக் குமிழிகளால் ஆன நுரைகளை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். நான் மனைவி துணி துவைப்பதை ரசிப்பதை விட்டுவிட்டு குழந்தையின் விளையாட்டை ரசிக்கத் துவங்கினேன். மனைவி குழந்தைக்கு சோப்பினால் உண்டாக்கப்பட்ட பெரிய நுரைக் குமிழிகளை உண்டாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்க குழந்தை அதை வைத்து விளையாடியும் குமிழி உடையும்போது அழுது புதியதாக வேறொரு குமிழியை வாங்கிக் கொண்டு விளையாடுவதாகவும் இருந்தான். அவனே குமிழியை உண்டாக்கவும் கற்றுக் கொண்டான். ஒரு ஹைக்கூ தோன்றியது:
உண்டாக்கி உடைத்து
அழுது மகிழ்ச்சியடையும்
சலவைக்குமிழியுடன் குழந்தை (1)
குழந்தை விளையாடும் குமிழிகளை உற்று நோக்கும்போது அக்குமிழியில் உலகமே தெரியத்தொடங்கியதாக உணர்ந்தேன். சிறு புல்லின் மேல் படியும் பனித்துளியில் எவ்வாறு நீண்ட பனை மரம்/ தென்னை மரம் தெரிகிறதோ அதுபோலவே சோப்பு நுரைக் குமிழியில் மேகம் முதற்கொண்டு பலதும் தெரியத்துவங்குவதைக் காண முடிந்தது. குழந்தை குமிழியை உடைக்கிறான். குமிழி உலகமாகக் காட்சியளிக்கிறது. இப்படி ஒரு ஹைக்கூ தோன்றியது:
உலகை உடைத்து
விளையாடும் குழந்தை
சலவைக் குமிழி (2)
உலகம் ஏதோ ஒன்றின் காரணமாகத் தோன்றி வளர்ந்திருக்கக்கூடும் சோப்புக் குமிழி வளர்வதுபோல. தோன்றிய உலகம் அழியவும் கூடும் என்று சிந்தை விரிய ஒரு ஹைக்கூ:
வளர்ந்த உலகம்
உடைந்துபோகும்
சலவைக்குமிழியாய் (3)
சலவைக் குமிழியை உண்டாக்கியதால் உடைந்தே தீரும். அதன் அழிவுக்கு குழந்தைக் காரணமாக இருக்கிறது. உலக அழிவோடு அதை ஒப்பிட ஒரு ஹைக்கூ:
உலகம் அழியும்
உண்டாக்கியதால்
அணுகுண்டுகள், அணு உலைகள் (4)
குழந்தை ஆசையாசையாய் குமிழியை உண்டாக்குகிறது. அதை நினைத்து பெரிய கனவு காண்கிறது. கனவு நிஜமாகாமல் குமிழி உடைகிறது. இதை வாழ்க்கையோடு ஒப்பிட ஒரு ஹைக்கூ:
சேர்த்த ஆசைகள்
சிதறுதேங்காயாகிவிட்டது
மரணம் (5)
இதில், நம் வாழ்க்கையில் எவ்வளவோ ஆசைகளைச் சுமந்து இப்படியெல்லா மோ வாழ வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் அவ்வாறு வாழ முடிவதில்லை. மரணம் என்பது சாவை மட்டுமே குறிக்காது. அது நிறைவேறாத ஆசைகளையும் குறிக்கும். மரணம் என்பது மேற்கண்ட ஹைக்கூவில் குறியீடு. வாசகன் நினைக்கும் பல பொருளையும் அது குறிக்கும்.
குழந்தை உண்டாக்கும் குமிழியைப் பார்க்கிறேன். உலகத்தோற்றம் நினைவுக்கு வருகிறது. பைபிள் கருத்தையும் இணைத்துக்கொள்ள ஒரு ஹைக்கூ இப்படி பிறக்கிறது:
மண்ணினால் உருவம்
மூச்சடைத்ததால் மரணம்
குமிழி உண்டாகி உடையும் (6)
இதில் பைபிள் குறிப்புப்படி மண்ணினால் உருவம் செய்து கடவுள் நாசி வழியாக காற்றை ஊதி நிரப்ப மனிதனாக உயிர்பெறுகிறான். அவ்வாறு ஊதி நிரப்பியதால் அம்மூச்சிக்காற்று பெருகுகிறது அல்லது குறைந்து விடுகிறது அதனால் மரணம் உண்டாகிறது (அறிவியல், மருத்துவக் காரணம் வேண்டாம்) என வைத்துக்கொள்வோம். அதே போல்தான் குழந்தை சோப்புக்குமிழியைப் பெரியதாக ஊத அது உண்டாகி உடைந்துபோகிறது. இயற்கையான மரணமும் இவ்வாறே உண்டாகிறது என்று நினைத்துக்கொண்டதால் மேற்கண்ட ஹைக்கூ உருவானது.
சலவைக் குமிழியுடன் பனித்துளியை இணைத்துப் பார்க்கிறேன். இப்படியும் ஒரு ஹைக்கூ:
மழைக்குமிழி
பனித்துளி
சலவைக்குமிழியுடன் நாம் (7)
மேற்கண்ட ஹைக்கூ நிலையாமையைப் பேசுகிறது.
சரி... பல வேளைகளில் நம் நிலையாமைக்குக் காரணம் நாமாகவே இருப்போம். சில வேளைகளில் சமூகக் காரணமும் ஒன்றாக இருக்கும். நாமே காரணம் என வைத்துக்கொண்டால் இப்படி ஒரு ஹைக்கூ:
மழைக்குமிழியை
உடைக்கும்
மழைத்துளி (8)
சரி... நாமே காரணம் இல்லை. சமுதாயமும், சமூகமும்தான் காரணம் என்று வைத்துக்கொண்டால் இப்படி ஒரு ஹைக்கூ என்று சொல்லி ஏமாற்ற மாட்டேன். இப்படி ஒரு சென்ரியு (இதை ஹைக்கூ என்று சொல்லக்கூடாது சென்ரியு வகை ஆகும்).
மனிதனை
அழிக்கும்
மனிதன் (9)
(ஹைக்கூவும் சென்ரியுவும் எப்படி வேறுபட்ட வடிவங்களாகிறது என்ற பாகுபாடு தெரியுமா? தெரியும் என்றால் மகிழ்ச்சி. தெரியாது என்றால் தெரிந்து கொள்ளுங்கள்.)
சரி… ஹைக்கூவிற்குத் திரும்ப வருவோம். குழந்தைச் செய்து விளையாடும் குமிழியில் வேறு என்ன தெரியும் (உலகமே தெரியுது) வேறு எதாவது தெரியாமலா போகும் என்று உற்றுப்பார்க்கிறேன். தெரிந்து விட்டது வானவில். சரி இப்படி ஒரு ஹைக்கூ:
மழையில்லை
வானவில் தோன்றியது!
சலவைக் குமிழியில். (10)
காதலி இல்லாத நேரத்தில் காதலியின் நினைவு தோன்றாதா? மனைவி துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கும்போது காதலியின் நினைவா? அதானே...! சரி... சரி என்ன செய்வது நினைவு வந்து விட்டது. ஹைக்கூவும் பிறந்துவிட்டது இப்படி:
கையை விட்டு ஓடும்
சலவைக் குமிழியானது
பிரிந்த காதல் உறவு (11)
இதற்குப் பல பக்கம் விளக்கம் தேவை. யாராவது எழுதுங்கள். நான் கொஞ்சமாகச் சொல்லிவிடுகிறேன். குழந்தையின் கையை விட்டுப் பிரிந்து ஓடும்/போகும்/பிரியும் குமிழி முதலில் குழந்தையின் கையைச் சுத்தப்படுத்திவிட்டுப்போகும். போனதுத் திரும்பாது உடைந்துவிடும். குழந்தைக்குச் சிறிது நேரம் அது மகிழ்ச்சி/ விளையாட்டுப் பொருள்/ உடைந்ததால் அழுகைக்கும் சோகத்துக்கும் உரிய பொருளாகி விடுகிறது. இப்படி பல குறியீடாக விரிந்து செல்லும். சரி... பிரிந்த காதலிக்கு வருவோம். காதல் பிரிவுக்குப் பின்னரோ தோல்விக்குப் பின்னரோ பழைய நினைவுகள் மகிழ்ச்சியையோ துன்பத்தையோ வருத்தத்தையோ இழப்பையோ ஏன்? மரணத்தையோ கூடத் தருகிறது. இந்த (11வது) ஹைக்கூ எனக்குச் சுமார் 25 ஹைக்கூக்களைத் தந்திருக்கிறது. அதையும் வேறொரு சந்தர்ப்பத்தில் விளக்கமாகப் பதிவு செய்கிறேன்.
இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். சலவைக்குமிழியை வைத்தே 10 ஹைக்கூக்கள் எழுதுவது சரியா? ஹைக்கூ இதனை ஏற்றுக் கொள்கிறதா என்று. கண்டிப்பாக ஏற்றுக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக வண்ணத்துப்பூச்சி குறித்து ஆயிரம் ஹைக்கூ கவிஞர்களிடம் ஒரு ஹைக்கூவை எழுதிக் கேட்டால் வண்ணத்துப்பூச்சி குறித்து ஆயிரம் ஹைக்கூக்கள் கிடைக்கும். ஆனால் கீழ்கண்ட முறைதான் தவறு. எடுத்துக்காட்டுக்கு என் ஹைக்கூவையே சான்றாகக் காட்டலாம்.
வளர்ந்த உலகம்
உடைந்துபோகும்
சலவைக்குமிழியாய் (3)
மேற்கண்ட ஹைக்கூவில் உடைந்துபோகும் என்பது குறியீடு. அது சிதைந்துபோகும் / அழிந்துபோகும் என்பதையும் குறிக்கும். சரி... மேற்கண்ட ஹைக்கூவை அடிகள் மாற்றிப்போட்டுப் பார்த்தால் மேலும் நான்கு ஹைக்கூக்கள் கிடைக்கும். இதோ இப்படி:
வளர்ந்த உலகம்
உடைந்துபோகும்
சலவைக்குமிழியாய் / (முதலாவதாக எழுதியது) (1)
உடைந்துபோகும்
வளர்ந்த உலகம்
சலவைக்குமிழியாய் (அடி மாறியிருக்கிறது) (2)
சலவைக்குமிழியாய்
உடைந்துபோகும்
வளர்ந்த உலகம் (அடி மாறியிருக்கிறது) (3)
உலகம்
உடைந்துபோகும்
சலவைக்குமிழியாய் (4)
உடைந்துபோகும்
சலவைக்குமிழியாய்
உலகம் (5)
மேற்கண்ட ஐந்துமே ஹைக்கூதான். ஆனால் இப்படிச் செய்வதுதான் தவறு. இச்செயல் நான் நிறைய ஹைக்கூ எழுதியிருக்கிறேன் என்பதைக் காட்டுமே ஒழிய, சிறந்த ஹைக்கூக் கவிஞராக உங்களை அடையாளப் படுத்தாது.
10 ஹைக்கூக்களில் உங்களுக்குப் பிடித்த ஒரு ஹைக்கூ சொல்லுங்களேன் நான் மகிழ...
உங்ளின் நேரத்தைக் கருத்தில் கொண்டு கவிதைக்கானத் தோற்றம் குறித்த சிந்தனையை மிகக் குறைவாகவே பதிவு செய்துள்ளேன். நீங்கள் விரித்துரைத்துப் பொருள் கொள்ள வேண்டுகிறேன். இதற்காக நேரம் ஒதுக்கிப் படித்தமைக்கு உங்களுக்கு என் நன்றி