தேசிய ஒருமைப்பாடு
தேசிய ஒருமைப்பாடு
(கவிஞர் தில்லை கவிராசன் – தொகுப்பில் இருந்து)
ஒற்றுமை யாகநாம் வாழ்வோம் - நாட்டின்
ஒருமைப்பாட்டை நாம் காப்போம்!
வேற்றுமை உணர்வுகள் இல்லாமல்- நாட்டின்
வெற்றிக்குப் பாதை வகுத்திடுவோம்!
இமயமும் குமரியும் நமதுஎல்லை - இங்கு
இருப்பவர் யாவரும் இந்தியரே !
சமயமும் சாதிப் பிரிவுகளும் - இல்லாச்
சமுதாயத்தை அமைத்தி டுவோம் !
கீதங்கள் பலவகை என்றாலும் - அவை
தோன்றிடும் உள்ளம் ஒன்றாகும்!
பேதங்கள் இன்றி வாழ்ந்திடும் நம்மின்
பெயரோ இந்தியர் என்றாகும்!
விழிகள் இரண்டாய் இருந்தாலும் - கண்ணில்
விளங்கும் பார்வை ஒன்றாகும்!
மொழிகள் வேறாய் இருந்தாலும் - மக்கள்
மொழியும் கீதம் ஒன்றாகும்!
ஆயிரம் மலர்கள் சேர்ந்தால் தான்
அழகிய மாலை உருவாகும்! - பல
ஆயிரம் மக்களும் ஒன்றானால் தான்
ஆக்கமும் நம்மில் உண்டாகும் !
நிறத்தால் நிலத்தால் பிரிவில்லை - மக்கள்
நினைவால் யாவரும் ஓரினமே !
பிறப்பால் மொழியால் பிரிவில்லை -தேசப்
பிணைப்பால் அனைவருமே ஓர்குலமே !
மரத்தில் கிளைகள் பலவுண்டு - அங்கே
மரமே அதற்குத் துணையாகும் !
மக்கள் கூட்டம் பலவுண்டு - அங்கே
மரமாய் இருக்கும் சமுதாயம் !
உடையும் நடையும் வேறுபட்டாலும் - நாம்
உண்ணும் வகைகள் மாறுபட்டாலும்
பழகும் கலைகள் வேறுபட்டாலும் - நாம்
பாரதத் தாயின் பிள்ளைகளே !
பாரத நாடிதைப் பாடிடுவோம் - வேறு
பாடுகள் இன்றியே வாழ்ந்திடுவோம் !
யாவரும் இந்தியர் என்றே - நல்
யாழிசையில் பண் பாடிடுவோம் !
- கவிஞர் தில்லை கவிராசன்