கடுகி வரவும் - நேரிசை வெண்பா
காளமேகப் புலவர், தமிழினிமையை விரும்பிப் போற்றியது போலவே, அழகின் இனிமையை ஆராதிப்பதிலும் ஆர்வம் உடையவராக இருந்தார். இதனால், திருவானைக்கா மோகனாங்கியைப் போல, வேறு சிலருடைய தொடர்பும் இவருக்கு இருந்து வந்தது.
இவர்களுள் ஒருத்தி 'தொண்டி’ என்பவள். இவள், திருநள்ளாற்றைச் சேர்ந்தவள், காளமேகம் நாகைப்பட்டினம் சென்றிருந்த போது, இவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது. இருவருக்கும் இடையே அளவிறந்த பாசமும் உண்டாயிற்று.
நாகையிலிருந்து, காளமேகம் குடந்தைக்குச் செல்ல நினைத்தார். அப்போது, தொண்டியும் திருநள்ளாற்றுக்குப் போக நினைத்தாள். இருவரும், தத்தம் விருப்பப்படி சென்றனர்.
குடந்தைக்கு வந்தபின், தொண்டியைப் பிரிந்திருக்க முடியாமல் காளமேகம் வருந்தினார். தம்முடைய ஆராத காமத்தை நயமாக எடுத்தெழுதி, அவர் அனுப்பிய ஒலை இதுவாகும்.
நேரிசை வெண்பா
நள்ளாற்றுத் தொண்டிக்கு நல்வரதன் தீட்டுமடல்
விள்ளாமல் எத்தனைநாள் வெம்புவேன் - கள்ள
மதனப் பயலொருவன் வந்துபொருஞ் சண்டைக்(கு)
உதவக் கடுகிவர வும். 212
- கவி காளமேகம்
பொருளுரை:
'நள்ளாற்றினளான தொண்டிக்கு நல்லவனாகிய வரதன் தீட்டும் ஒலை, கள்ளனாகிய மதனப்பயல் என்னும் ஒருவன் வந்து என்னுடனே பொருதுகின்றான். வெளியிலே சொல்லாமல் உள்ளேயே போரிட்டு எத்தனை நாளுக்கு நான் வெந்து கொண்டிருப்பேன்? அதனால், அவனோடு சண்டையிட்டு அவனை வெல்வதற்கு, எனக்குத் துணையாக நீயும் விரைந்து வருவாயாக’ என்பது பொருள்.
'உதவக் கடுகி வரவும்' என்ற அழைப்பிலேயே கவிஞரின் உள்ளத்தை நாம் காணலாம்.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
