புலிக்குட்டிச் சிங்கன் - பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம்
புலிக்குட்டிச் சிங்கன் என்பவன் ஒரு செல்வனாக இருந்திருக்க வேண்டும். இத்துடன் தான் புலவன் என்று செருக்கியும் திரிந்தான். இவன் காளமேகத்தை மதியாது போக, அதனாற் கவிஞர் அவன் மீது வசையாகப் பாடிய செய்யுள் இது.
புலிக்குட்டிச் சிங்கனைக் காதலித்து, அவனுடன் போய் விடுகின்றாள் ஒரு பெண். அவனுடைய இழிந்த மனத்தை அறியாது, தன் பேதைமையால் அறிவிழந்த அவள், சில நாட்களில் அவனாற் கைவிடப் பெற்றுத் தாய் வீட்டிற்குத் திரும்புகின்றாள். அவளுடைய உருக்குலைந்த தோற்றத்தைக் கண்டதும் அவளுடைய தமையனின் மனம் கொதிக்கின்றது.
புலிக்குட்டிச் சிங்கனின் ஈனத்தனத்தை அறியாமல், சொன்னாலும் கேளாமல் சென்று மானமிழந்து வந்து நிற்கும் தங்கையைக் கண்டதும் அவன் குமுறுகின்றான், இந்தப் பாங்கிலே செய்யுள் நடக்கிறது.
பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் மா விளம் / மா விளம் விளம் அரையடிக்கு)
போன போனவி டந்தொ றுந்தலை பொட்டெ ழப்பிறர் குட்டவே
புண்ப டைத்தம னத்த னாகிய பொட்டி புத்திர னத்திரன்
மான வீனணி லச்சை கேடனொ ழுக்க மற்றபு ழுக்கையன்
மாண்ப னாம்புலிக் குட்டிச் சிங்கன்வ ரைக்கு ளேறியி றங்குவீர்
பேனும் ஈருமெ டுக்க வோசடை பின்னி வேப்பெணெய் வார்க்கவோ
பிரிவி ழிக்கரி யெழுத வோவொரு பீறு துண்டமு டுக்கவோ
வான கந்தனில் வைக்க வோவிரு கால்வி லங்கிடு விக்கவோ
கற்க ரங்கொடு சாட வோவொரு காரி யத்தினை யேவுமே. 219
பொருளுரை: தான் போன இடங்களில் எல்லாம் அவமானப்பட்டுத் தலையில் பொட்டு எழத்தக்க வகையில் பிறராற் குட்டப்பட்டுப் புண்படைத்தவன் புலிக்குட்டிச் சிங்கன் என்பவன். அத்தகைய இழிந்த மனத்தவனாகிய அவன் அறிவற்ற மூடன் பெற்ற புதல்வனும் ஆவான். அவன் அம்பு செலுத்துபவன் என்றும் கூறிக்கொள்வான். மானங்கெட்டவன்! வெட்கங்கெட்டவன்! ஒழுக்கங்கெட்டவன்! மிகக் கேவலமானவன் அவன்!
அத்தகைய சிறப்புடைய புலிக்குட்டிச் சிங்கனின் எல்லைக்குள் சென்றுவிட்டு, இறங்கி வருகின்ற பெருமை யுடையவரே! உம் கூந்தலில் நிறைந்திருக்கும் பேனையும் ஈரையும் எடுக்கவோ? சடை பின்னி வேப்பெண்ணெய் வார்க்கவோ? அவனைப் பிரிந்து வாடும் தங்கள் கண்களுக்கு மை எழுதவோ? அல்லது உமக்குக் கிழிந்த கந்தலை உடுத்து விடவோ? காட்டில் கொண்டு விட்டுவிடவோ? அல்லது காலில் விலங்கிட்டு வைக்கவோ? அல்லது, கையில் கற்களை எடுத்து உம்மீது எறிந்து உம்மைக் கொன்றுவிடவோ? இவற்றுள் எதனைச் செய்யலாம்? அதனை நீரே கூறுவீராக என்பது பொருள்.
காமத்தைக் காதலென மயங்கி அறிவிழந்து கண்டவன் பின்னே சென்ற பெண்களுள் பலர் இந்த நிலைக்கே ஆளாவர். அவள் அடைந்துவிட்ட அவல நிலையும், அதைக் கண்டு கொதித்து, அவளுடைய உறவினர் கொள்ளும் ஆவேசவுணர்வும் இச் செய்யுளிற் காணப்படும்.
குடும்பத்தின் தகுதிக்குக் குறைவு ஏற்படும்போது அன்பு காட்டியும் அருமை பாராட்டியும் வளர்த்து ஆளாக்கிய குலக்கொடியையே வெறுத்து ஒதுக்கும் மனநிலையையே மக்கள் பெரும்பாலும் கொள்வர். அந்த மனநிலையின் விளக்கமாகவும் இதனைக் கொள்ளலாம்.