முகநூல் பதிவு 191
13.11.2020
எல்லா பண்டிகைகளுக்கும் கடை கடையாக ஏறி பார்த்துப் பார்த்து புத்தாடைகள் வாங்கி
நாளொன்றிற்கு புது புது ஆடையில் உடுத்தி மகிழ்ந்த நாட்கள் பல....
சில ஆண்டுகளாக பண்டிகை நாட்களில் எங்கள் வீட்டுப் பணிப்பெண், அருகில் குடியிருக்கும் மூதாட்டி, துப்புரவு தொழில் செய்யும் பெண்மணி, கீரை மற்றும் பூ விற்க வரும் பெண்மணிகள், பால்போடுபவர் மனைவி, பள்ளியில் துப்புரவு பணி செய்பவர், பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் மூதாட்டி என்று ஒரு பட்டியல் தயாரித்து அவர்களுக்கு மட்டும் என்னிடம் உபயோகித்த சில நல்ல நிலையில் உள்ள புடவைகளை பகிர்ந்து கொடுப்பேன்....
ஆனால்
பெறுவதில் கிடைக்கும் சின்ன சின்ன மகிழ்வைவிட...
கொடுப்பதில் கோடி இன்பம் உண்டு என்று கண்கூடாக உணர்ந்த நாள் நேற்று...
ஆம்! சில ஆண்டுகளாக ஒருமுறைகூட கட்டாமல் வைத்துள்ள புடவைகளை எடுத்து எண்ணத் தொடங்கினேன்... ஐம்பதை தாண்டிவிட்டது... அதில் முதலில் முப்பது புடவைகளை யாருக்காவது கொடுத்துவிடலாம் என்று நினைத்தேன்... கொடுக்க வேண்டும் என்று முடிவாயிற்று ... மீதியை வைத்துமட்டும் என்ன செய்யப்போகிறோம்...?
இரண்டு ஆண்டுகளுக்குள் எடுத்தப் புடவைகளை மட்டும் வைத்துக்கொண்டு .... மீதி அத்தனை புடவைகளை பெரிய பைகளில் எடுத்துக் கொண்டு நேற்று மாலை 6.30 மணி முதல்.... வீதி வீதியாக சென்று கண்ணில் படும் பாதையோர வியாபாரம் செய்யும் பெண்கள் வயதில் முதியோர் எல்லோரையும் அழைத்து அழைத்து கையில் கிடைத்த புடவைகளை பகிர்ந்து கொடுத்துவிட்டு வீடு திரும்பினேன்...
வாழ்க்கையில் இதுவரை நான் உணராத ஒரு பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தேன்... மனம் லேசாகி இறக்கைக் கட்டி பறந்தது.....
ஒரு மூதாட்டி மெல்ல தயங்கி தயங்கி அருகில் வந்து கேட்க சற்று கூச்சப்பட்டு நின்றபோது...
என்ன பாட்டி ..? புடவை தரேன் வாங்கிக்றீங்களா..?
நான் கேட்டதுதான் தாமதம் , அவர்கள் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.... புடவையை கையில் பெற்றவுடன் , அதை லேசாகத் தடவி பார்த்துவிட்டு என்னை நன்றியுடன் நோக்கினார்... அந்தப் பார்வையில் கிடைத்த ஆசிர்வாதம் கோடி கொடுத்தாலும் கிடைக்காது... என் வயதையொத்தப் பெண்மணிக்கு, அப்படியே நன்றாக அயர்ன் செய்து வைத்திருந்த ஒரு சில்க் காட்டன் புடவையை கொடுத்தேன்... ஏதோ ஒரு நெகிழ்ச்சியில் சட்டென்று குனிந்து என் காலை தொட்டு வணங்கி பெற்றுக் கொண்டார்.... மனம் சற்று சங்கடமாகிவிட்டது...
‘எம்மா! நீங்க எனக்கு சகோதரி மாதிரி... இப்டி என்ன தர்ம சங்கடமாக்காதிங்க... ‘ எனக்கு சொல்லும்போதே என் கண்களும் கசிந்துவிட்டது... அந்த சகோதரியின் கண்களும் கசிந்துவிட்டது.....
பீரோ பாதி காலியானது மனம் முழுதாய் மகிழ்ச்சியில் நிறைந்துவிட்டது....
எனக்கு
கொடுக்கும் இந்நிலை தந்த இறைவனுக்கு நன்றி....
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்....
இனி இல்லாமை இல்லாத நிலை வேண்டும்....