முகநூல் பதிவு 190
14.11.2020
நரகாசுரன் அழிந்த நாள் தீபாவளி என்ற கதையை நம்பி நாமும் பலநூற்றாண்டுகளாய் தீபாவளி கொண்டாடி வருகிறோம்....
வீடு முழுவதையும் தூய்மை படுத்துகிறோம்....
அலமாரிகளை அடுக்குகிறோம்....
அது பிதுங்கி ஆடைகள் கொட்டினாலும்....
மேலும் மேலும் புத்தாடைகள் வாங்கி அடுக்குகிறோம்....
சமையலறையில் புழங்குவதற்கு தேவையான பாத்திரங்கள் இருப்பினும், புது புது பாத்திரங்களை வாங்கி குவிக்கின்றோம்.....
பழையன கழிதலாய் தேய்ந்துப்போன துடப்பம், பிய்ந்துபோன கால்மிதிகள், கிழிந்த திரைச்சீலைகள், உடைந்த குப்பைக் கூடைகள் , பிடியிழந்த பாத்திரங்கள் , நசுங்கிப்போன தலையணைகள் , வெளுத்துப்போன விரிப்புகள் கால் உடைந்த நாற்காலிகள், கையிழந்த இருக்கைகள் எல்லாவற்றையும் வெளியே எறிந்து, தேவையற்றவைகளை எல்லாம் நீக்கிவிட்டதாய் திருப்தி அடைகிறோம்....
பூஜைக்கு மலர்களும் ஊதவத்தி, கற்பூரம் , திரி, எண்ணெய், குங்குமம் , மஞ்சள் , சந்தனம் , வண்ண விளக்குகள் என் அனைத்தும் பார்த்து பார்த்து வாங்கி வருகிறோம்....
இனிப்புகள், பலகாரங்கள், பலவகையாய், உயர்தரமாய் தேர்ந்தெடுத்து செய்கிறோம், போதாதக் குறைக்கு வாங்கியும் வைக்கிறோம்.....
வீட்டை தூய்மையாகி, விளக்குகளால் அலங்கரித்தால் மகாலட்சுமி மனைக்குள் அடியெடுத்து வைப்பாள் என்பது நம் ஐதீகம் .....
நம் முன்னோர்கள் திருவிழாக்களுக்கெல்லாம் ஒரு கதையும் அதற்கு காரண காரியத்தையும் மறைமுகமாய் கற்பித்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள்... கதைகளை கண்மூடித்தனமாய் நம்பினோம்.... ஐதீகமாகச் சொன்ன காரியங்களை எல்லாம் மேலோட்டமாகப் பார்த்து அதில் சாதகமான பழக்கங்களை வழக்கமாக்கி இன்றுவரை நடைமுறையில் வைத்திருக்கிறோம்... ஆனால் மறைமுகமாக விட்டுச் சென்ற அதன் உள்ளார்ந்தக் கருத்தை உணராமலே தள்ளிவைத்தோம்.....
இனியாவது அதை சற்று உணர்வோமே...
அசுரன் நம் மனதில் உள்ள அழுக்காறுகள் தான்...
பொய், பொறாமை , பேராசை, வெற்று டாம்பீகம் , சுயநலம் இவைதான் கசடுகள்...
முதலில் இவற்றை அகத்திலிருந்து அடியோடு அழிப்போம்....
அன்பு, பாசம், உண்மை, விசுவாசம், மனிதநேயம் போன்ற தீபங்களால் அகத்தில் ஒளியேற்றுவோம்....
பிதுங்கி கொட்டும் அலமாரியில் நம் தேவைக்கு அதிகமான ஆடைகளை பகிர்ந்தளித்து... மீதியை அழகாய் அடுக்கி வைப்போம்....
தேவைக்கு அதிகமான பாத்திரங்களை தேவைபடுபவர்களுக்கு கொடுத்து, சமையலறையை தூய்மையாய் பராமரிப்போம்....
பழையன கழிதலாய், நல்ல நிலையில் இருக்கும்போதே தேவைக்கு அதிகமான போர்வைகளை பாதசாரிகளுக்கு பங்கிட்டுக் கொடுப்போம்..... இனிப்புகளை வழியில் செல்லும் வரியவர்களுக்கு வாரிவழங்குங்கள்....
பெறுபவர்கள் ஒவ்வொருவரின் புன்னகையும் , இறைமை நம்மில் நிறைவதற்கான அறிகுறி.... இறைமை நம்மில் உறைந்துவிட்டால்... நம்
இல்லமே கோயிலாகும்... ஆண்டவன் நம்முடனே ஐக்கியமாகிவிடுவான்...அதன்பின் அர்ச்சனை அபிசேக வழிபாடுகளும் , நம்மன சம்பிரதாயத் திருப்திக்கே....
இதுவரை பலர்மீது கோபப் பட்டுள்ளேன்... பொங்கி எழுத்துள்ளேன்... அத்தனையையும் இன்றோடு இதயத்திலிருந்து அழித்துவிடுகிறேன்... எனக்கு துரோகம் செய்தவர்களையும் மனதார மன்னித்து... அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்....
யார்மீதும் பொறாமைபட்டதில்லை.... பேராசையும் பட்டதில்லை..... சமய சந்தர்பமாய் யாரையும் பாதிக்காத சிறு சிறு பொய்களை சொல்லியிருக்கிறேன்... அதையும் முடிந்தவரை சொல்லாது தவிர்க்க முயற்சிப்பேன்..... இனி எவர் மனமும் புண்படும்படி பேசுவதை நூறுசதவீதம் தவிர்த்துவிடுவேன்..... இத்தனை சூளுரைகளைகளையும் ஏற்றப்பிறகு, உண்மையில் என் மனம் இன்று இலேசாக உணர்கிறது....
நேற்றே தேவையில்லாத பாத்திரங்கள் , எலக்ரிக் ரைஸ் குக்கர் மிக்சி ஸ்டவ் அனைத்தையும் கொடுத்தாகி விட்டது....
இன்று காலையில் பிதுங்கி தொங்கும் சேலைகள்... இன்று மாலைக்குள் அலமாரிகளும் தூய்மையாகிவிடும் என்று நம்புகிறேன் ....
அமோகமாய் வந்துவிட்டது எனக்கு தீபாவளி....
அப்போ உங்களுக்கு.....
நன்றே செய்யுங்கள்
அதை இன்றே செய்யுங்கள் .....
அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!