அம்மாவுக்கு மறுமணம்

அம்மாவுக்கு மறுமணம்

திடீரென்று கண் விழித்த வசந்தா பக்கத்து அறையில் விளக்கெரிவதை பார்த்தாள்.மணி என்ன இருக்கும்? கண்ணை கசக்கிவிட்டு எதிரில் உள்ள கடிகாரத்தை பார்க்க நாலு மணியை காட்டியது. நாலு மணிக்கு கிருபா எழுந்து விட்டானா? போய் பார்ப்போம் என்று முடிவு செய்து கட்டிலை விட்டு மெல்ல எழுந்து, விளக்கை போடாமல் பக்கத்து அறைக்குள் சென்றாள். கதவு ஒருக்களித்து திறந்திருந்தது. மெல்ல கதவை திறந்தவள் கிருபா என்று கூப்பிட்டு உள்ளே நுழைந்தாள். கட்டிலின் அருகில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்து எதையோ தீவிரமாய் படித்துக்கொண்டிருந்த கிருபா ‘வாம்மா’ என்றழைத்தான்..
நேரத்துலயே எழுந்துட்டயா? மெல்ல அருகில் சென்று அவன் தலையை கோதினாள். ஒரு முக்கியமான “செம்” இருக்கு அதைய தயார் பண்ணிகிட்டு இருக்கேன். நீ எப்பம்மா எந்திருச்சே? இப்பத்தான்,உன் ரூமுல லைட் எரியறதை பார்த்தேன்,அதான் வந்தேன்.காலையில எந்திரிச்சு பண்ணக்கூடாதா? அன்புடன் கேட்டாள். இல்லம்மா பகல்ல இந்த அளவுக்கு “கான்ஸ்சன்ட்ரேசன்” கிடைக்கறதில்லை, அடுத்த வருசம் நான் “பாரின்” போறதுக்கு இந்த அசைன்மெண்ட் ரொம்ப முக்கியம், அதான் படிச்சுகிட்டு இருக்கேன். நீ போய் படும்மா. நான் வேணா உனக்கு காப்பி போட்டு எடுத்து வர்ட்டுமா? கேட்டவளிடம், நீ போய் படும்மா, காலையில ஆறு மணிக்கு கொடுத்தியின்னா போதும். இப்ப போய் படும்மா. சரி உன் பெட்லயே படுத்துக்கட்டுமா? கேட்டவளை உற்றுப்பார்த்து அம்மா நீ எப்பவுமே என் பக்கத்துலயே இருக்கணும்னு நினைக்காதே. அடுத்த வருசம் நான் உன்னைய விட்டு அமெரிக்கா போயிட்டன்னா ரொம்ப சிரமப்படுவே. நிம்மதியா உன் படுக்கையில் படு. இப்படி பேசியவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல் அவன் தலையை கோதி நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, அவள் அறைக்கு வந்து படுத்தாள். நினைவுகள் மெல்ல விரிந்தன.
கிருபா அப்படியே அவன் அப்பாவைப்போலவே, எதிலும் நிதானம்,தெளிவு ஆழ்ந்த யோசனை, கிருபாவின் பத்து வயதில் ராஜேஸ் தன்னை விட்டு இறந்த போது தடுமாறிவிட்டாள். நல்ல படிப்பு உத்தியோகம், என்று இருந்தாலும் அவனைப்போல ஒரு துணை இனி கிடைக்குமா? அதிலும் ராஜேஸ் அவளை ஒரு நண்பனை போல நடத்தியவன். எதிலும் நிதானம், அவளிடம் அனைத்து விசயங்களையும் அளவளாவுவது, இவளாவது சில நேரங்களில் கோபம் வர கத்துவாள் ராஜேஸ் அலட்டிக்கொள்ளவே மாட்டான். அவளை சிறிது நேரம் பேச விட்டு விடுவான். இவள் கத்தி ஓய்ந்து போனபின் மெல்ல இவன் தரப்பு நியாயத்தை சொல்லும்போது அவன் சொல்வதுதான் சரியாக இருந்திருக்கும். தன்னுடைய கோபத்தை நினைத்து பின்னர் வருத்தப்படுவாள்.இப்படி இருந்தவன் ஒரு நாள் காய்ச்சல் என்று சொல்லி படுத்தான். இவள் சாதாரண காய்ச்சலாக இருக்கும் என்று நினைத்தவள், பக்கத்தில் உள்ள கிளினிக்கு கூட்டிச்சென்று மருந்து மாத்திரைகளை வாங்கி வந்து ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டு வேலைக்கு கிளம்பினாள். அலுவலகத்திலிருந்து போன் செய்து எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு நன்றாய் இருப்பதாக கூறியவன், இவள் மாலை வீடு வந்த போது உடல் நெருப்பென கொதித்து கொண்டிருந்தது. கிருபாவையும் கூட்டிக் கொண்டு அவசர அவசரமாய் தன் அண்ணனுக்கு போன் செய்து விட்டு பிரபலமான ஒரு மருத்துவமனைக்கு கொண்டு போனாள். மறு நாள் விடிவதற்குள் மருத்துவமனை அவள் தலையில் இடியை இறக்கியது. அருகில் அருகில் அண்ணன் சுரேஷ் இருந்ததால் அவளை ஆதுரத்துடன் அணைத்து ஆக வேண்டிய காரியங்களை அனைத்தும் செய்து முடித்தார்.
அவளை தன்னுடன் வந்து இருக்கும்படி எவ்வளவோ முறை சொல்லியும் அவள் நிதர்சனமாய் மறுத்து விட்டாள். உள்ளூரில் தான் இருக்கிறோம்,நீ எப்பொழுது வேண்டுமானாலும் என்னை வந்து பார்த்துக்கொள்.அதே போல் நானும் உன்னை வந்து அடிக்கடி பார்க்கிறேன் என்று சொல்லி அவர் வாயை அடைத்து விட்டாள்.
அதன் பின் ஏழு வருடங்கள் ஓடி விட்டன. கிருபாவின் வளர்ச்சி அவளுக்கு ராஜேஸ் கூட இருப்பது போலவே இருந்தது. ராஜேசை போலவே அவன் உருவமும் செயல்களும் இருந்ததால் அவளால் ராஜேசின் பிரிவை ஓரளவு சமாளிக்க முடிந்தது.கிருபா அடுத்த வருடம் அமெரிக்க சென்ற பின்னால், அவனில்லாமல் தன்னால் சமாளிக்க முடியுமா?நினைக்கும்போதே அவளுக்கு பயம் உள்ளத்தில் ஊறியது.
எதிர்பார்த்தது போல கிருபா நல்ல மதிப்பெண்களுடன் தேறி அவன் லட்சியமான அமெரிக்க பயணத்திற்கு தயாராகிக்கொண்டிருந்தான். ஒரு நாள் இவள் அலுவலகம் முடிந்து வீடு வந்த பொழுது அங்கு இவள் அண்ணா சுரேஷ், கிருபாவுடன் பேசிக்கொண்டிருந்தார்.வாண்ணா எப்ப வந்தே? இவள் விசாரித்தபடியே உள்ளே வந்து தன் கைப்பையை வைத்து விட்டு பாத்ரூம் சென்று முகம்,கை கால் கழுவிக்கொண்டு வந்தவள் இரு டீ போடறேன் சமையலறைக்குள் நுழைய முயன்றாள்.
வேண்டாம்மா இப்பத்தான் நானும் கிருபாவும் டீ போட்டு சாப்பிட்டுட்டு உனக்கு ‘பிளாஸ்குல’ வச்சிருக்கோம், எடுத்து குடிச்சிட்டு என் கூட கொஞ்சம் வெளியே வா, என்றவரை இவள் வித்தியாசமாய் பார்க்க, அரை மணி நேரத்துல வந்திடலாம் என்று மீண்டும் சொன்னார். சரி என்று ‘பிளாஸ்கை’ திறந்து டீயை குடித்து முடித்து கிருபாவிடம் சொல்லிவிட்டு அண்ணனுடன் கிளம்பினாள்..
கார் அமைதியாய் ஓடிக்கொண்டிருந்தது.எதுவும் பேசாமல் ஓட்டிவந்த அண்ணனின் முகத்தை கவனித்த வசந்தா அண்ணன் ஏதோ சொல்ல நினைக்கிறார் என புரிந்தவள் அது என்னவென்று அறியும் ஆவலில் மெல்ல செருமினாள். ஏதோ பேசனும்னு சொன்ன, இப்ப பேசாமல் வந்தா எப்படி? அதுதான் எப்படி சொல்லறதுன்னு யோசிச்சுகிட்டிருக்கேன். கிருபா ஒரு மாசத்துக்கு முன்னாடி என் கிட்ட இதை பத்தி பேசிட்டான். கிருபா ஒரு மாசத்துக்கு முன்னாடி அண்ணன் கிட்ட பேசிட்டானா? அப்படி என்ன விசயமாயிருக்கும்? அவளுக்கு பல் சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்து விட்டன.எதுவானாலும் என் கிட்ட சொல்லாம உன் கிட்ட வந்து சொல்லற அளவுக்கு அப்படி என்ன ரகசியம் அவனுக்கும் உனக்கும்?
அது உன் சமபந்தப்பட்ட விசயங்கறதுனால அவன் அதை என் கிட்ட சொன்னான். நானும் அதை நீ எப்படி எடுத்துக்குவியோ அப்படீன்னு தயங்கறேன்.
ராஜேஸ் போன பின்னாடி எதுவும் எனக்கு பெரிய “ஷாக்”ஆன நியூசா தெரியாது, அதனால தைரியமா சொல்லு. கிருபா உன்னை திரும்ப கல்யாணம் பண்ணிக்க சொல்றான். இந்தசெய்தி அவளுக்கு அதிச்சியை கொடுத்தது.பின் மெதுவாக அதிலிருந்து மீண்டவள் “இந்த பெரிய மனுசன் எப்பத்துலயிருந்து இந்த மாதிரியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சிருக்கான்” குரலில் வருத்தம் தோய்ந்த கிண்டல். தயவு செய்து புரிஞ்சுக்கோ, அவன் அடுத்த இரண்டு மாசத்துல அமெரிக்கா போயிட்டான்னா, திரும்ப வர எப்படியும் அஞ்சு ஆறு வருசம் ஆயிடும், அதுவரை நீ இங்க தனியா என்ன பண்ணுவே? அப்பாவும் போயி, நானும் அம்மாவை விட்டு போயிட்டா அவங்க என்ன பண்ணுவாங்க? அப்படீங்கறான். தயவு செய்து அவனோட எண்ணத்தை புரிஞ்சுக்கோ. அண்ணனின் குரலில் ஆதங்கம்.உனக்கு ஒண்ணும் வயசாயிடலியே? கடைசி காலத்துல உனக்கு ஒரு துணை வேணும்னு அவன் ஆசைப்படறான். நானும் அதையேதான் நினைக்கிறேன். நீ நல்லா யோசிச்சுட்டு சொன்னா போதும். சொல்ல வந்த்தை சொல்லி விட்ட திருப்தி தெரிந்தது.
இரவு மூவரும் அமைதியாய் சாப்பிட்டனர். சாபிட்டு அரை மணி நேரம் கழித்து சுரேஷ் விடை பெற்று சென்றார். கிருபா அம்மாவிடம் “குட் நைட்” சொல்லி விட்டு அவன் அறைக்கு சென்றான். இருவர் மனதிலும் என்ன உள்ளது என்பதை இருவருமே வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.
. ஒரு வாரம் அமைதியாய் ஓடியது. ஒரு நாள் அலுவலகம் கிளம்பு முன் கிருபாவிடம் இன்னைக்கு மதியம் லீவு போட்டுட்டு வர்ரேன், நாம கொஞ்சம் வெளியே போயிட்டு வரணும். ரெடியாயிரு சொல்லி விட்டு கிளம்பினாள்.
மூன்று மணி அளவில் காரில் வசந்தா காரை ஓட்டிக்கொண்டிருக்க மெளனமாய் உட்கார்ந்திருந்தான் கிருபா.கார் ஓர் ஆசிரமத்துக்குள் நுழைந்து வலது புறம் சிறிது தூரம் ஓடி நின்றது. வசந்தா கீழே இறங்கி கிருபா வா என்னுடன் என்று உள்ளே அழைத்து சென்றாள். முன் வாசல் வழியாக உள்ளே நுழைந்து அங்கு நாற்காலியில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் தன்னுடைய பெயரையும் விலாசத்தையும் சொல்ல அந்த பெண் உள்ளே சென்றவள் ஐந்து நிமிடத்தில் இவர்களை உள்லே அழைக்க உள்ளே சென்றதும் அங்கு வயதான இருவர் நின்று கொண்டிருந்தனர். வசந்தாவை பார்த்து புன்னகையுடன் வாருங்கள் என்னுடன் என்று உள் அறைக்கு கூட்டி சென்றார்கள்.
ஒரு அறையில் ஐந்து வயது பெண் குழந்தை ஒன்று சிரத்தையாய் ஏதோ செய்து கொண்டிருந்தது. இவர்களை பார்த்தவுடன் ஓடி வந்து அந்த பெரியவர்களின் பக்கத்தில் நின்று கொண்டது.
வந்த கிருபாவிடம் “இவள் உனக்கு தங்கையாக போகிறாள்” சட்டப்படி இந்த குழந்தையை நாம் த்த்தெடுத்து கொள்ளப்போகிறோம். நீ அமெரிக்கா சென்றவுடன் இந்த அம்மாவும், உன் தங்கையும் இந்தியாவில் இருக்கிறார்கள் என்ற நினைவு வைத்துக்கொண்டு அடிக்கடி வந்து போய்க்கொண்டிரு.
அம்மாவின் வார்த்தைகளில் தெரிந்தது, கண்டிப்பா, பாசமா, புரியவில்லை. ஆனால் அம்மா இனி தனியாக இல்லை என்ற எண்ணமே அவன் மனதை நிறைவு கொள்ள வைத்தது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (18-Nov-20, 8:38 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : ammavuku marumanam
பார்வை : 249

மேலே