இவர்களும் நிலவைப் பிடிக்கட்டும்
====================================
தேயிலை கொய்து தினசரி மாய்வார்
தீமைகள் மாறட்டும் – அவர்
தேவைகள் தீரட்டும்.
*
வாயிருந் தாலும் வார்த்தைகள் பேசா
வடுக்களும் மாறட்டும் – அவர்
வழக்குகள் தீரட்டும்
*
காடுகள் வெட்டிக் கழனிகள் செய்தோர்
காரிருள் நீங்கட்டும் – வாழ்வில்
கதிரொளி தேங்கட்டும்
*
பாடுகள் பட்டும் பசியுடன் வாழும்
பாமரர் வாழட்டும் – இன்பம்
பரிசென சூழட்டும்
*
கூடுகள் கட்டிக் குருவிகள் வாழும்
குடிசைகள் சிரிக்கட்டும் – வெற்றிக்
குங்குமம் தரிக்கட்டும்
*
கோடுகள் தாண்டக் கூடா தென்னும்
கொடுமைகள் சாயட்டும் – பொல்லாக்
கொள்கைகள் மாயட்டும்
*
வீடுகள் தோறும் விரவிய ஏழ்மை
விடுதலை காணட்டும் – புதிய
விடியலும் தோன்றட்டும்
*
ஏடுகள் தேடி ஏங்கிடு மேழை
இளசுகள் படிக்கட்டும் – நிலவை
இவர்களும் பிடிக்கட்டும்.
*