மாற்றம் கொணரும் தீபாவளி

மாற்றம் கொணரும் புதிய தீபாவளி(கட்டுரை)
கோவி.தமிழ்ச்செல்வி,நீலாய்.
ஆண்டு தோறும் நாம் கொண்டாடிய தீபாவளி போல் இல்லாமல் இவ்வான்டு இந்நாள் மிகவும் மாறுபட்டுள்ளது.துணிமணிகள் வாங்குவதற்காகக் குடும்பத்துடன் கிள்ளான்,தலைநகர்,மலாக்கா ,சிரம்பான் போன்ற முக்கிய இடங்களுக்குச் செல்வது,அங்கேயே உணவு உண்பது போன்ற சிறப்பு அம்சங்கள் இவ்வாண்டு இல்லாமற் போய்விட்டது.பலகாரங்கள் செய்வதற்கான பொருள்களை வாங்கவும் பலவகையான பலகாரங்கள் வாங்கவும் இவ்வாண்டு தடங்கல் ஏற்பட்டுள்ளது .வகைவகையாய் வீட்டு அலங்காரப் பொருட்களை வாங்கி வீட்டை மாற்றி அமைப்போருக்கு இந்த ஆண்டு தடை ஏற்பட்டுள்ளது.
தீபாவளிக்கு மட்டுமே கோயிலுக்குச் செல்லும் பக்கதர்களின் நிலையும் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.தீபாவளிக்குள் மூடப்பட்டிருக்கும் கோயில் வாசல்கள் திறவு காணாதோ? உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நச்சுயிரி எல்லாவற்றிற்கும் முட்டுக்கட்டையாய் வலம் வந்து கொண்டிருக்கிறது.மிகவும் பாதுகாப்பான முறையில் அனைவரும் தீபாவளி ஏற்பாடுகளைச் செய்தல் நலம்.நடமாட்டக்கட்டுப்பாட்டு ஆணையினால் ஆண்டுத் தொடக்கம் முதல் பலரது குடும்ப வருமானம் பாதிப்புற்றுள்ளது.தினசரி உணவுக்கும் வீட்டுச் செலவுகளுக்கும் வழியின்றி பலரும் துன்பத்தில் உளன்று வருகின்றனர்.அன்றாட வாழ்க்கையில் பிள்ளைகளின் உணவு,பள்ளித் தேவைகள் போன்றவற்றைப் பூர்த்தி செய்ய இயலா நிலையில் சிக்கித் தவிக்கும் குடும்பங்கள் இத்திருநாளை எவ்வாறு எதிர்கொள்வர்?
தீபாவளிக் கொண்டாட்ட அடிப்படையில் பொருளாதாரத்தினை நம்பியிருந்த வியாபாரிகளும் சிறு தொழில் முனைவர்களும் செய்வதறியாது தவிக்கின்றனர்.மின்னியல் வியாபாரமும் சேர்ந்து இவ்வாண்டு தீபாவளி வருமானத்தைத் தவிடு பொடியாக்கிவிட்டது.வெளிநாட்டிலிருந்து வந்து சேர வேண்டிய சரக்கும் வந்தபாடில்லை.இப்படி எப்பக்கம் திரும்பினாலும் துன்பமும் சிக்கலுமாக இவ்வாண்டுத் தீபாவளியை எதிர்கொள்ளும் சூழலுக்கு நாம் ஆளாகியுள்ளோம்.
நம்மிடம் இருப்பதைக் கொண்டு நாம் மட்டும் மகிழ்ச்சியுடன் இத்திருநாளைக் கொண்டாட முடியுமா? இருக்கும்போது கொடுப்பதை விட இல்லாதபோது கொடுப்பதே சிறந்தது.அது பொருளாக இருந்தாலும் சரி ஆதரவாக இருந்தாலும் சரி.இத்தனை காலம் நம்மிடமும் இருந்தது;அதைவிடக் கொஞ்சம் குறைவாக இருப்போருக்குக் கொடுத்து உதவினோம்.ஆனால்,இன்றைய நிலைமை வேறு.பலரும் இல்லாத நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.எல்லோரது குறைகளையும் நாம் நிவர்த்தி செய்துவிட முடியாது தான்.ஆனால் ,குறைந்த பட்சம் ஓரளவாவது கொடுத்து உதவுவோம்.நம்மால் இயன்ற உதவியை மற்றவர்களுக்குச் செய்வோம். அள்ளிக் கொடுக்காவிடினும் கிள்ளியாவது கொடுப்போம்.நமது அநாவசியச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு அதன் மூலம் வரியோர்க்கு உதவுவோம்.அவர்களின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.
அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகளைத் தவறாது பின்பற்றுவோம்.தேவையற்ற விருந்து உபசரிப்பு நிகழ்ச்சிகளைத் தவிர்ப்போம்.அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்ப்போம்.முகக்கவரி இன்றி மறந்தும் வெளியே செல்லாதிருப்போம்.இந்தச் சூழலை உணர்ந்திராத சிறு பிள்ளைகளுக்கும், மூத்த வயதினருக்கும் நச்சுயிரியின் தாக்கத்தால் ஏற்படக்கூடிய விளைவினை விளக்குவது நமது கடமை.அவர்களின் பாதுகாப்பு நம் பொறுப்பு.
நண்பர்களோடும்,உறவினர்களோடும் பல தீபாவளிகளைக் கண்டிருப்போம்.இவ்வாண்டு அனைவரின் பாதுகாப்பினையும் கருத்திற்கொண்டு குடும்ப உறுப்பினர்களுடன் அன்பாகவும் எளிமையாகவும் இத்தீபாவளியைக் கொண்டாடுவோம்.அடுத்த தீபாவளியைக் கொண்டாட வேண்டுமெனில் இந்தத் தீபாவளியைப் பாதுகாப்புடன் கொண்டாடுவோம்.

அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களும் துன்பங்களும் நம்மை நிழற்போல் தொடர்கின்றன. அவற்றை ஓரு நாளாவது மறந்து குடும்ப உறவுகளோடும் நட்புகளோடும் உற்றார் உறவினரோடும் மகிழ்ந்திருக்க வருவது தான் விழாக்களும் பண்டிகைகளும்!
விசேட தினம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஏதோ ஒரு வகை மகிழ்ச்சியில் மூழ்கித் தான் போகிறோம்.தினசரி எத்தனை போராட்டங்களை எதிர்கொண்டாலும் ,விஷேச தினம் வந்ததும் இன்னல்களையும் வேதனைகளையும் மூட்டைக்கட்டி ஒரு புறம் தள்ளிவைத்து விடுகிறோம்.ஆயின், மனதோடு நெருங்கி வாழ்ந்தவர்களின் நினைவு மட்டும் நம்மை வாட்டி வதைக்கவே செய்யும்.மற்ற நாட்களை விட சிறப்பான தினங்களில் அவர்களோடு வாழ்ந்த தினங்களும் சம்பவங்களும் நிழற்படமாய் நம் மனத்திரையில் நீங்கா வண்ணம் நிலைத்து நிற்கும்.அந்த வரிசையில் எங்கள் குடும்பத்தார் மனக்கண்ணில் நிலைத்து நின்று நல்லாட்சி புரிபவர் என் தந்தையார் தான் திரு.கோவிந்தராஜ் அவர்கள்.
இன்னும் சில ஆண்டுகளில் நானும் முதுமை அடையலாம்.ஆனால், இன்று கூட அப்பாவோடு கொண்டாடிய தீபாவளியை நினைத்தால் கண்கள் குளமாகின்றன.சிறு பிள்ளைபோல் மனம் மீண்டும் அதனையே அடைய ஏங்கி அடம் பிடிக்கிறது.இன்று ஒவ்வொருவரும் “அப்பா இருந்தால்.....” என்று ஏதாவது விடயத்திற்குத் கட்டாயம் சொன்னபடிதான் தீபாவளி ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
சிறுபிள்ளை போலே துள்ளியாடி மகிழ்வோடு வீட்டுக்குச் சாயம் பூசுவது முதல் பலகாரங்கள் செய்ய துணை புரிதல் வரை .....அனைத்திலும் மும்முரமாக ஈடுபடுவார்.நாங்கள் சிறுவர்களாக இருந்த போது எண்ணெயில் முறுக்கைப் போடுவது முதல் அதனைப் பக்குவமாக வேகவைத்து ,ஆறவைத்து டின்களில் அடைத்து வைப்பது வரை அப்பாதான் அம்மாவுக்குத் துணை.ருசி பார்ப்பது மட்டும் எங்கள் வேலை.
நாளடைவில் நாங்கள் வளர்ந்துவிட்டப் பின்பும் இந்த வேலைகளை அப்பாவுக்குக் கொடுப்பதில் எங்களுக்குப் பேரின்பம்.தனது கரடு முரடான வாழ்க்கைப் பயணத்தில் அவர் கடந்து வந்தவற்றை எங்களோடு பகிர்ந்த வண்ணம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்.உறவென்று அவருக்கு அம்மாவையும் எங்களையும் தவிர வேறு யாரும் இல்லாத காரணியாலோ என்னவோ எங்களுக்கிடையில் அத்துணை நெருக்கம்,நேசம்,பாசம்!
பெரியப்பா இருந்த வரை அப்பாவுக்கு நிறைய உறவுகள் இருந்ததாக நாங்களும் உணர்ந்தோம்.அவருடைய ஏழு மகன்களும் இரு மகள்களும் ஆண்டுக்கு ஓரிரு முறை வந்து போனதுண்டு,தீபாவளி என்றால் பலகாரங்களை மூட்டை கட்டிக் கொண்டு பேருந்தில் ஏறிச் சென்று தலை நகரில் வாழ்ந்த தன் அண்ணன் குடும்பத்திற்குக் கொடுத்து வருவது என் அம்மா அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று.பெரியப்பாவின் மரணத்திற்குப் பிறகு அன்பாக வளர்த்த தன் அண்ணனின் பிள்ளைகள் மூவருக்குத் திருமணம் செய்து வைத்தார்.அப்பாவின் உழைப்பில் மட்டுமே வளர்ந்த நன்றி கொன்ற ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் எவரும் அவரவர் திருமணத்திற்குப் பின் அப்பாவை எட்டிப் பார்க்கவில்லை.
அந்தப் பாசத்தையும் நாங்களே ஈடு செய்தோம்;என்றாலும் அவர்களை வளர்த்து ஆளாக்கித் திருமணமும் செய்து வைத்த எங்கள் பெற்றோரை மதிக்க மறந்த அந்த உறவுகளைப் பதர் எனக்கருதி நீக்கிவிட்டோம்.அப்பாவும் அம்மாவும் மிகவும் வருந்தினார்கள். சில வேளைகளில் உதவிக்காக எங்களை நாடி வந்தனர்.அப்பாவின் இறுதிப் பயணத்தில் கூட இருவர் மட்டுமே யாரோ ஒருத்தன் போல வந்து போன நாள் முதல் உதவி செய்யும் எண்ணமும் எங்களை விட்டு ஒதுங்கிவிட்டது.உதவிக்கான எப்போதாவது எட்டிப் பார்த்தவன் வாங்கிய பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லை.அப்பாவுக்காக அவன்களை மன்னித்தோம்;ஆனால், இனி கதவடைப்புத்தான்!
நடுத்தர வசதி தான் என்றாலும் மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லா அந்த வாழ்க்கையை அமைத்த அப்பாவையும் ,சாமர்த்தியமாக சிறிய வருமானத்திலும் எங்களைக் கற்றோர் சபைதனில் தலை நிமிர்ந்து நடக்க வகை செய்த அம்மாவும் எங்களின் இரு தெய்வங்கள்.மிகவும் சிக்கனமாகக் குடும்பத்தை வழி நடத்திய அம்மா தீபாவளிக்கு வசதிக்கு ஏற்றவாறே மிகவும் எளிய முறையில் ஏற்பாடுகள் செய்வார்.
காலம் எங்கள் கோலத்தை நல்லவிதமாக மாற்றி அமைத்தது. நல்ல எண்ணம் கொன்ட திரு.கோவிந்தராஜ் சாரதா தம்பதியரின் ஐந்து பிள்ளைகளும் சிறப்பான பாதையில் வளத்துடன் பயணிக்கத் தொடங்கினோம்.எளிய தீபாவளி காலத்தின் வளர்ச்சியால் உருமாறியது.அப்பா வழக்கம் போல வீட்டுக்குச் சாயம் பூசுவது முதல் தோரணம் கட்டுதல் வரை பரபரப்புடன் செய்து முடிப்பார்.பழைய வீட்டை விட்டுப் புதிய வீட்டிற்குக் குடிபெயர்ந்தோம் இப்படி ஆண்டு தோறும் பல புதிய முன்னேற்றங்களுடன் தீபாவளிகள் வந்து போயின.
தீபாவளிக்கு முதல் நாள் இரவு படையலிட்ட பதார்த்தங்களை எங்களுக்கு உருட்டி உருண்டையாகக் கொடுப்பார் அப்பா.நாங்கள் அவரைச் சுற்றி அமர்ந்து மகிழ்வுடன் கதைகள் பல பேசி உண்பதைக் கண்டு இரசித்து மகிழ்வார். பலகாரங்களோ,புத்தாடையோ எங்களுக்குப் பெரிதல்ல! தீபாவளியன்று வீட்டில் பூசையை முடித்தபின் ஆலய வழிபாடு! அதன் பின்னர் தான் சிறப்பு.... . . ! ஆம், முழு வாழையிலையில் உணவு பரிமாறி அனைவரும் ஒன்று சேர்ந்து உண்ணும் வேளை...அதுவே பேரின்பம்.இந்த மகிழ்ச்சிக்கு உலகில் வேறு ஏதும் ஈடாகாது.குடும்பத்தில் சில புது வரவுகள். . .இலையின் அளவு வளர்ந்ததே தவிர பழக்கம் மாறவில்லை.இதைக் கண்ட பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
தேன் கூட்டில் கல்லெரிந்தாற்போல யாருடைய பார்வை பட்டதோ தெரியவில்லை; ஆசையோடு இலை வெட்டி வரும் அன்புத் தெய்வமான என் தந்தையை இறைவன் தனக்கென அழைத்துக் கொண்டான்.அந்தப் பிரிவோடு. . . . எட்டு ஆண்டைக் கடக்கின்ற போதும் சொல்லொனா துயரில் நாங்கள்!
இன்றும் அந்தப் பழக்கம் தொடர்கிறது...இலையில் அப்பாவுக்கான இடம் மட்டும் காலியாக உள்ளது.பீரிட்டு வரும் கண்ணீர்த் துளிகளைப் போட்டி போட்டுக் கொண்டு மறைத்தபடி நாங்கள்...!ஒவ்வோர் ஆண்டும்! ஒரே இலையில் சேர்ந்து உனவருந்தும் பழக்கம் தொடர இறைவன் எங்களுக்கு அருள்புரிய வேண்டும்.எங்களின் அன்பும் ஒற்றுமையும் என்றும் நிலைத்திருக்க வேண்டும்.எனக்குப் பின்னரும் அடுத்த தலைமுறைக்கும் இந்த அன்பு தொடர வேண்டும்.அப்பா எங்களோடு ,எங்கள் மூச்சில் கலந்து வாழ்கிறார்;தொடர்ந்து எங்களை நல்வழியில் வாழ்விப்பார்.இனி வரும் எல்லா தீபத் திருநாள்களும் அப்பாவின் நினைவோடு இனிதாய் அமைந்திடல் வேண்டும் !!!!

எழுதியவர் : தமிழ்ச்செல்வி கோவிந்தராஜ (6-Jan-21, 9:18 pm)
பார்வை : 47

மேலே