கடிதம் ஆறு வழக்கு ஒன்று
என் கழுதை-19ம் நூற்றாண்டு வருட வழக்கு ஒன்று
அனுப்புநர்
குச்சியூர் குஞ்சப்பன்,
குச்சியூர்
வாலாங்குளத்து சந்து,
கோவன்புதூர்
கும்பினியாரின் ஆட்சியில் ஸ்ரீ ஸ்ரீ சீரங்கப்பட்டிண கோட்டுக்குள் அடங்கி இருக்கும் எங்கள் கோவன்புதூர் முனிசிபாலிட்டிக்குள் இந்த குச்சியூரில் வாழ்ந்து வரும் அடியேனாகிய குச்சியூர் குஞ்சப்பன் என்று பட்டி தொட்டி மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட நான் எனது கழுதையை காணாமல் தவித்துக்கொண்டிருந்தேன்.
அது சமயம் ஸ்ரீ ஸ்ரீ கும்பினியார் ஆட்சிக்கு உட்பட்ட சீரங்கப்பட்டின கோவன் புதூர் முனிசிபாலிட்டியில் இருந்து அடியேனுக்கு ஒரு காகிதம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
அதில் கோவனூர் முனிசிபாலிட்டிக்கு உட்பட்ட அச்சு வைக்கப்பட்டு அடியேனுக்கு குச்சியூர் குஞ்சப்பன், விலாசமிட்டு அனுப்பி இருந்தது. “கு”என்னும் இட்த்தில் இந்த அச்சு விழுந்து விட்டதால் !
சரியான முகவரி தெரியாமல் குச்சியூருக்கு பதிலாக நச்சியுர், பூச்சனூர், தாச்சனூர் ஊர்களுக்கு இலவச பயணமாக தபால் அய்யா உபயத்துடன் சென்று குஞ்சப்பனை தேடி உள்ளனர். பிறகு நான்கு நாட்கள் கழித்து குஞ்சப்பன் என்பவன் குச்சியூரில்தான் வசிக்கிறான் என்று முடிவு செய்து என்னிடம் குறிப்பிட்ட காகிதம் வந்து சேர்ந்தது. ஆக் மொத்தம் ஒரு தகவல் என்னை வந்து சேர ஐந்து நாட்கள் ஆகிவிட்டிருந்த்து.
ஐயா ! நிற்க எனக்கு எழுத படிக்க தெரியாததால் ஸ்ரீ ஸ்ரீ கும்பினியார் ஆட்சிக்குட்பட்ட இந்த சீரங்கப்பட்டின கோவன் புதூர் முனிசிபாலிட்டியாரின் தகவல் என்னவென்று புரியாததால்
அடியேன் ஐம்பத்தாறு தேசங்கள் செல்லாமல், எங்கள் பக்கத்து பக்கத்து ஊர்களாக சென்று
இந்த காகித தாளில் என்ன எழுதி உள்ளது என்பதை எல்லோரிடமும் கேட்டும், நான் கேட்ட எல்லோரும் என்னைப்போல தற்குறியாக இருந்து தொலைத்ததால், மீண்டும் எனது குச்சியூருக்கே வந்து திண்ணை பள்ளி ஆசிரியரிடம் காண்பித்தேன். அவர் எப்படியோ படித்து
எனக்கு விளக்கியதில் நான் கண்டு கொண்ட அர்த்தம் என்னவென்றால் அதாகப்பட்டது, நான் காணாமல் தொலைத்து விட்ட கழுதை தற்போது ஸ்ரீ ஸ்ரீ கும்பினியார் ஆட்சிக்கு உட்பட்ட சீரங்கபட்டணத்திற்கு உட்பட்ட கோவன் புதூர் முனிசிபாலிட்டியில் இருப்பதாகவும், அது அந்த முனிசிபாலிட்டியில் இருந்த அலுவலக தாள்களை எல்லாம் மேய்ந்து விட்டதாகவும், அது மேற்கொண்டு அலுவலக தஜ்தாவேஜூகள் சம்பந்த பட்ட அனைத்தும் கழுதையின் வாயில் நுழைந்து சீரணித்து கழுதையின் வயிற்றுக்குள் சென்று விட்டதாகவும், இதனால் முனிசிபாலிட்டி சம்பந்தபட்ட வரி வகையறாக்கள் அனைத்தும் நின்று விட்டதால் முனிசிபாலிட்டிக்கு வரவேண்டிய நிலுவை தொகைகள் அனைத்தும் நீவிர் தரவேண்டியதுயதும், கழுதைக்கு பாத்தியப்பட்டதால், அதற்கு தனியாக ஒரு காசு இரண்டு சல்லி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இக்கடித தாளுக்கு என்ன பதில் எழுதுவது என்று மேற்படி திண்ணை பள்ளி ஆசிரியரை கேட்டும் அவர் உடுமலை பட்டணத்துக்கு சென்று அங்கு ஒரு வக்கீல் தொழில் செய்யும் சீமான் இருப்பதாகவும் அவரிடம் கேட்டுக்கொள் என்று தெரிவித்து விட்டார். அதன் படி நான்
என் சீமந்த புத்திரியிடம் சொல்லி கட்டு சோற்றை கட்டிக்கொண்டு தலையில் வைத்து பொடி நடையாய் உடுமலை பட்டணத்துக்கு மூன்று நாட்களில் சென்று சேர்ந்தேன். அந்தோ என்ன பரிதாபம், அந்த வக்கீலாகப்பட்டவர் அப்பொழுதுதான் சென்னை பட்டணம் கிளம்பி சென்று விட்டதாகவும், திரும்பி வர ஒரு மாதம் பிடிக்கும் என்று சொல்லி விட்டார்கள். என் கழுதை என்னவாகும் என்று ஒரு பக்கம் கவலை இருந்தாலும் ஸ்ரீ ஸ்ரீ கும்பினியார் ஆட்சிக்குட்பட்ட சீரங்கப்பட்டண கோவன் புதூர் முனிசிபாலிட்டி என் கழுதைக்கு வேளா வேளைக்கு அங்குள்ள அலுவலக தஜ்தாவேஜுக்களை சாப்பிட கொடுத்துதவுகார்கள் என்று நம்பிக்கையில், வக்கீலை பார்த்தே செல்வது என்று அங்கு காத்திருந்தேன்..
நாட்கள் ஓடியது, தினமும் அங்குள்ள கோயிலில் அன்ன உருண்டைகள் தின்று, வக்கீலம்மாவின் வீட்டில் ஒரு வேளை காப்பியை குடித்து ஒரு மாதமாக காத்திருந்தேன்.
என் தின வருகையால் சலிப்பும் கோபமும் அடைந்த வக்கீலாத்து அம்மையார் “ஓய்” உமக்கு என்னவய்யா பிரச்சினை என்று கேட்டார். நானும் அது மேற்கொண்டு நடந்த விசயங்களை ஒன்று படாமல் உரைத்ததில் அந்த வீட்டம்மாள் என் கையில் ஒரு பைசா, நாலு சல்லி கொடுத்து போய் உன் கழுதையை மீட்டுக்கொள் என்று சொன்னார்.
எங்கள் ஊர் திண்ணை வாத்தியார் சொன்னது சரியாகி விட்டது, வக்கீல் தீர்வு சொன்னால் என்ன வக்கீல் வீட்டம்மாள் சொன்னால் என்ன? சந்தோசமாய் தொகையினை பெற்றுக்கொண்டு பொடி நடையாய் ஊர் வந்து சேர்ந்தேன்.
என்ன ஆச்சர்யம்? என் கழுதை சுகமாய் வீட்டின் முன்னால் நின்று கொண்டு என்னை பார்த்து ஈ..ஈ..ஈ..என்று பல்லிளித்தது.
இது எப்படி நடந்தது என்று சீமந்த புத்திரியிடம் கேட்டேன். அந்த புத்திரியானவள்
கண்களை உருட்டி தன் சின்னஞ்சிறு கைகளால் அபிநயம் பிடித்து எனக்கு நடந்ததை சொன்னாள்.
அதாகப்பட்டது, ஸ்ரீ ஸ்ரீ கும்பினியாரின் ஆட்சிக்குட்பட்ட சீரங்கப்பட்டணத்து கோவன் புதூர் முனிசிபாலிட்டியில் அடைத்து வைக்கப்பட்ட என் கழுதைக்கு தினம் தினம் உண்பதற்கு ஏகப்பட்ட தஜ்தாவேஜூகளை கொடுத்து கொடுத்து ஓய்ந்து போய், கடைசியில் கொடுப்பதற்கு எதுவும் கிடைக்காததாலும், அந்த தஜ்தாவேஜுகளை தினமும் தின்று அது போட்ட சாணத்தால் அந்த அலுவலகமே நாற்ற்மெடுக்க தொடங்கியதால்,அதை கழுவி துடைக்க தனியாக கூலிக்கு ஆள் போட வேண்டி வருவதால், உடனே அதை கிளப்பி கொண்டு போய் எங்கிருந்தாலும் தொலைத்தவன் வீட்டில் ஒப்படைத்து வரும்படி ஆளனப்பி சேர்ப்பித்துள்ளார்கள்.
இப்பொழுது நான் உங்களுக்கு கொடுக்கும் தாக்கீது என்னவென்றால் !
அதாகப்பட்டது ஸ்ரீ ஸ்ரீ கும்பினியார் ஆட்சிக்குட்பட்ட சீரங்கப்பட்டண கோவன் புதூர் முனிசிபாலிட்டி அலுவலகத்துக்கு இந்த குச்சியூர் குஞ்சப்பன் கொடுக்கும் பிராது என்னவென்றால் இது நாள் வரை அதாவாது முப்பத்தி எட்டரை நாள் எனது கழுதையை வைத்திருந்ததால், இந்த சுற்றுவட்டாரத்துக்குட்பட்ட ராசாதி ராசாக்கள், ஜமீந்தாரிகள், தாரன்கள் குடியானவன்கள், மற்றும் பல பல வகையறாக்களுக்கு துணியை தோய்த்து எடுத்து செல்ல முடியாமல் எனக்கு மிகுந்த பொருள் நட்டமும் வேதனையும் அடைந்து விட்டதால், இதற்கு நஷ்ட ஈடாக பதிமூன்று காசுகளும், ஐந்து சல்லிகளும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தவறும் பட்சத்தில் மீண்டும் என் சீமந்த புத்திரியிடம் கட்டு சோற்றை கட்டிக்கொண்டு உடுமலை பட்டணத்து வக்கீலை பார்த்து வழக்கு தொடுக்க தயாராக உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு
குச்சியூர் குஞ்சப்பன்,
குச்சியூர்.