ரகசிய டைரி குறிப்பு♥️

ரகசிய டைரி குறிப்பு♥️

கல்லூரி நாட்களின் ரகசிய டைரி குறிப்பு.

பழப்பு அடைந்த அந்த டைரியை பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.

எனக்கு தெரிந்து இதுவரை என்னை தவிர யாரும் படித்தது இல்லை.

இன்றைய தலைப்பு அதை ஞாபகப்படுத்த
தூசி தட்டி எடுத்தேன்.

நிறைய ரகசியங்கள் அதில் உள்ளது.

அத்தனையும் என்னை பற்றியது.

சரி அதில் இருந்து சில வரிகள் அப்படியே..


மின்சார வண்டியில் தான் கல்லூரிக்கு செல்வேன்.

தினமும் காலை 8.20 க்கு திருவோற்றியூரில் இருந்து சென்னை சென்டரலுக்கு.

இதோ அந்த மறக்க முடியாத சில பக்கங்களின் வரிகள்....

அலங்காரமில்லா அழகிய அல்லி கொடியே
ஆரவாரம் இல்லா அமைதி பூங்காவே
ஆளை மயக்கும் உன் அம்பு பார்வை
ஆழ் மனிதில் பதிந்திடவே
ஆராதனை செய்கிறேன்
ஆகாயத்தில் இருந்து வந்த தேவதையே....


திருவொற்றியூரில் இருந்து கொருக்குபேட்டை
பதினைந்தே நிமிடம் தான்
ஒரு மணி நேரமாக இருக்க கூடாதா
அதிக பட்சம் இப்போது இரண்டு முறை பார்க்கிறாய்
தூரம் அதிகமாணால் பத்து முறை பார்ப்பாயே
நான் பரவசம் அடைவேனே


நீ நடிகை சீதாவின் சாயல்.
எனக்கு நடிகை சீதாவை நிரம்ப
பிடிக்கும்
உன்னையும் தான்
மஞ்சள் தாவிணியில் மல்லிப்பூ
தலையில் சூடி
கண்களால் இதயத்தை களங்கடிக்கும்
வித்தையை எங்கே கற்றாய்
உன் உதட்டோர புன்னகையை
என் உள்ளங்கையில் பிடித்து
என் சட்டை பாக்கெட்டில் பத்திரபடுத்தியுள்ளேன்
அழகியே! என் இதயத்தை கொள்ளை அடித்த தேவதையே..

என்ன இன்று கூடுதல் அழகுடன்
காணப்படுகிறாய்
இன்று உன் பிறந்த தினமோ
அலட்டிக்கொள்ளாத அழகுடையவளே
இன்று சற்று ஆர்பாட்டம் ஏனோ
சின்ன இடை கொண்ட சிங்காரமே
உன் கொவ்வை இதழ்களுக்கு ஏன் சிகப்பு சாயம்
உன் துள்ளி விளையாடும் கயல் விழிகளுக்கு ஏன் அஞ்சனம்.
உன் இன்றைய ரோஸ் கலர் தாவிணி ராமராஜன் சட்டை போல்
கண்ணை பறிக்குதே
அணிகலன்கள் அவ்வளாவாக அணியாத
அற்புதமே இன்று நிச்சயம் ஆரவாரம் கொஞ்சம் அதிகம் தான்
இருப்பினும் அலங்கார தேர் போல் காட்சி அளிக்கிறாய்
அதிர்ஷ்டக்காரன் நான் இன்று ஐந்து முறை பார்த்துவிட்டாய்
அதில் ஒரு முறை ஒரு நிடத்துக்கு மேல்..
உண்மையில் இன்று பிறந்த நாள் என்றால்
வாழ்க பல்லாண்டு இனிக்கும் இளமையுடன்....

இன்றைக்கு நீ கலையிழந்த சிற்பமாய்
மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன்
குளிர் நிலவான உன் முகம் சூரியன் போல் கொதிக்கிறதே
காரணம் தான் என்ன
அட, நீ அழுகிறாய்
என் மனம் வலிக்கிறதே
உன்னை யோரோ ஒரு பெண் தேற்றுகிறாள்
ஆறுதல் சொல்லுகிறாள்
என் தோள் சாயேன் நான் ஆறுதல் கூறமாட்டேனா
கண் துடைத்து, சட்டன என்னை பார்க்கிறாய்
திடிர் என நேரடியாக எனை பார்த்து சிரிக்கிறாய்
ஒரு துண்டு பேப்பர் ஒரு பெண்ணிடம்
கொடுத்து என்னிடம் கொடுக்க சொல்கிறாய்
அந்த பேப்பரில்..
"உங்களிடம் நான் பேச வேண்டும்"
நீ கொருக்குபேட்டையில் இறங்கிவிட்டாள்.

பயந்தாங்கொல்லி...பாலுவே..
அவளிடம் பதில் சொல்ல பயந்து
ஒரு வாரத்திற்கு கல்லூரிக்கு பஸ்ஸில் பிராயணம் செய்கிறாயே...

- பாலு.

எழுதியவர் : பாலு (4-Feb-21, 6:25 pm)
சேர்த்தது : balu
பார்வை : 199

மேலே