பொருளும் புகழும் பொருந்த விழைவார் மருளும் மடியும் மருவார் - ஆற்றல், தருமதீபிகை 778

நேரிசை வெண்பா

பொருளும் புகழும் பொருந்த விழைவார்
மருளும் மடியும் மருவார் - தெருளுளத்தே
கொண்டு முயல்வார் குலையார் நிலைஎன்றும்
கண்டு மகிழ்வார் கதி. 778

- ஆற்றல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பொருள், புகழ் முதலிய உயர் நலங்களை அடைய விரும்புபவர் மருள், மடி முதலிய இழிவுகளை மருவார்; உள்ளம் தெளிந்து ஊக்கி முயன்று உயர்ந்த கதிகளைக் கண்டு மகிழ்வார் என்கிறார் கவிராஜ பண்டிதர். உயர்வான நிலைகளை அடைய உரியவரது இயல்புகளை இது இனிது விளக்கியுளது.

மானச மருமங்கள் மதியூகமாய்க் காணவுரியன. மனம் புத்தி சித்தங்கள் வித்தக நிலைகளில் விரிந்து நிற்கின்றன. எண்ணம் விளைய எல்லாம் விளைகின்றன.

மனநினைவுகளால் மனித உலகம் யாண்டும் இனிது இயங்கி வருகிறது. வெளியே விரிந்து நிகழுகிற தொழில்கள் எல்லாம் உள்ளேயிருந்து கிளர்ந்த எண்ணங்களாலேயே இசைந்து திகழ்கின்றன. கருதி முயன்ற அளவு உறுதி நலன்களை மனிதன் அடைந்து வருகிறான். தனக்கு வேண்டிய இதங்களை நீண்ட நோக்கோடு முன்னும் பின்னும் எண்ணி அறிந்து யாவும் எய்த முயல்கின்றான். முயன்ற அளவு உயர்ந்து வருகிறான்.

தனது உயிர் வாழ்க்கைக்குப் பொருள் அவசியம் தேவையாயிருத்தலால் அதனையே முதன்மையாக விழைந்து திரிகிறான். பொருளாசையோடு பலவகை ஆசைகளும் மனிதனிடம் பெருகியுள்ளன. ஆறாத ஆவல்கள் தீராது திரிகின்றன.

தன்னைக் குறித்து அயலார் புகழ்ந்து பேசக் கேட்பதில் மனிதனுக்குள்ள பேராசை இயல்பான மயலாய் விரிந்துள்ளது. அவ்வாறு விழைவுகளோடு வழிவழியே வந்துள்ளமையால் மனித சமுதாயத்திடம் தொழில்கள் நீண்டு வர நேர்ந்தன. பசியும் நசையும் பணிகளைச் செய்யத் தூண்டி மனிதரை ஆண்டு வருகின்றன. அவ்வரவு நிலைகள் இயல்பான உறவுரிமைகளாயின.

கருவில் உருவாகி வந்த எவரும் கருமம் செய்வது கடமையாய் வந்தது. செய்யவுரிய கருமத்தைச் செய்யாமல் நின்றவர் வெய்ய துயரங்களை அடைய நேர்கின்றார். மடியும் மடமையும் குடிகேடுகள் உடையன; அவற்றை மருவ நேர்ந்தவர் குடிகேடராய் இழிந்து அடியோடு அழிந்து போகின்றார்.

காரியங்களை வீரியமாய்க் கருதிச் செய்பவரிடம் சீரிய மேன்மைகளும் சிறந்த செல்வங்களும் விரைந்து வந்து அடைகின்றன. ஒருவன் உயர்ந்த ஆண்மகன் என்பது அவன் செய்கின்ற வினையாண்மையால் விளங்கி வருகின்றது. ஆட்சி புரிய நேர்ந்த அரசரது மாட்சிகள் யாவும் கரும வீரத்தில் மருமமாய் மருவியிருக்கின்றன. கருமங்களைக் கருதிச் செய்பவர் தருமங்களை உரிமையாக அடைந்து கொள்கின்றார். அரிய புகழும் பெரிய புண்ணியங்களும் அவரிடம் பெருகி நிற்கின்றன.

பகீரதன் சிறந்த அரசகுலத் தோன்றல், திலீபன் என்னும் மன்னனுடைய அருமைத் திருமகன். அரிய பல குணநலங்கள் வாய்ந்தவன்; கருதிய எதையும் கடைபோகச் செய்யும் உறுதி மிகவுடையவன். தனது மூதாதையராகிய சகரர் கபில முனிவர் சாபத்தால் இறந்து பட்டதை அறிந்து வருந்தினான். அவர்க்கு நீர்க்கடன் செய்ய விரும்பினான்; விண்ணுலகிலுள்ள தெய்வ கங்கையை இம்மண்ணுலகில் கொண்டு வர முயன்றான்; பரமனை நோக்கி அரிய தவத்தைச் செய்தான். கருமமே கண்ணாய் இவன் கருதிச் செய்த தவம் எவரும் செய்ய முடியாத பெருமகிமையுடையது.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

பெருகும் நீரொடு. பூதியும். வாயுவும். பிறங்கு
சருகும். வெங்கதிர் ஒளியையும். துய்த்துமற்(று) எதையும்
பருகல் இன்றியே. முப்பதி னாயிரம் பருவம்.
உருகு காதலின் மன்னவன் அருந்தவம் உழந்தான் 54

உந்தி அம்புயத்(து) உதித்தவன் உறைதரும் உலகும்.
இந்தி ராதியர் உலகமும். நடுக்குற இரைத்து.
வந்து தோன்றினள் வரநதி; மலைமகள் கொழுநன்
சிந்தி டாதொரு சடையினில் கரந்தனன் சேர! 55

புல்நு னித்தரு பனிஎன. வரநதி. புனிதன்
சென்னி யில்கரந்(து) ஒளித்தலும்.வணங்கினன். திகைத்து.
மன்னன் நிற்றலும். “வருந்தல்;நம் சடையள்வான் நதிஇன்(று)
என்ன விட்டனன். ஒருசிறி(து); அவனிபோந்(து) இழிந்தாள் 56

இழிந்த கங்கைமுன். மன்னவன் விரைவொடும் ஏக.
கழிந்த மன்னவர் கதி பெற முடுகிய கதியால்.
அழுந்தும் மாதவச் சன்னுவின் வேள்வியை அழிப்ப.
கொழுந்து விட்டெரி வெகுளியன் குடங்கையில் கொள்ளா 57

உண்டு உவந்தனன் மறைமுனிக் கணங்கள்கண்(டு) உவப்பக்
கண்டு வேந்தனும், வணங்கி,முன் நிகழ்ந்தன கழறக்
‘கொண்டு போகெனச் செவிவழிக் கொடுத்தனன், குதித்து
விண்டு நீங்கினர் உடல்உகு பொடியின்மே வினளே. 58

நிரையம் உற்றுழல் சகரர்கள் நெடுங்கதி செல்ல.
விரைம லர்பொழிந்(து) ஆர்த்தன விண்ணவர் குழாங்கள்;
முரைசம் முற்றிய பல்லியம் முறைமுறை முழங்க.
அரைசன் அப்பொழு(து). அணிமதில் அயோத்திமீண்(டு) அடைந்தான். 59 அகலிகைப் படலம், பால காண்டம், இராமாயணம்

பகீரதன் அருந்தவம் புரிந்து ஆகாய கங்கையை இங்கே கொண்டு வந்திருக்கும் காட்சியை இது காட்டியுள்ளது. பிரமனை நோக்கியும் கங்கையை நினைந்தும் சிவபெருமானை எண்ணியும் அறுபதினாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து தெய்வ நதியை இவ் வையத்தில் வரச் செய்து சகரர் உய்தி பெற உதவியிருக்கிறான். பகீரதன் கொண்டு வந்தமையால் கங்கைக்குப் பாகீரதி என்று ஒரு பெயரும் வந்தது. உள்ளம் தளராமல் ஊக்கி நின்று நெடுங்காலம் நிலைத்து முயன்று காரிய சித்தி அடைந்திருத்தலால் பகீரதப் பிரயத்தனம் என அரிய வினையாற்றலுக்கு உரிய உதாரணமாய் இவ்வேந்தன் என்றும் விளங்கி நின்றுள்ளான்.

கருமங்களைச் செய்வதில் அரசன் எவ்வாறு கருத்தூன்றி யிருக்க வேண்டும் என்பதை இவன் சரித்திரம் நன்கு விளக்கி நிற்கிறது. பிற உயிர்கள் நலம் அடைந்து வாழ அரசன் முடி புனைந்திருக்கிறான். இந்த முடிவை உணர்ந்து யாண்டும் அயராமல் ஆட்சி புரிந்து வருபவனே உண்மையான அரசன் ஆகிறான். நாடன் என்று அரசனுக்கு ஒரு பெயர். நாடு நன்மையடைய நாடி வருபவன் நாடன் என நேர்ந்தான். தன் பாடும் பதவியும் தெரிந்து அரசன் பீடு பெற ஒழுகி நேரே நீடி வர வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Feb-21, 8:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 140

சிறந்த கட்டுரைகள்

மேலே