உடைந்த பல்ப்

நம்ம மந்திரி என்ன இப்ப எல்லாக் கோவிலுக்கும் அடிக்கடி போறார்?

அவர் ஊழல் வழக்குலே மாட்டிக்கிட்டு இருந்தாலும் மாட்டிக்கிட்டு இருப்பார்.

அப்படிங்கறே?

இதை நாம இப்ப எல்லாம் சாதாரணமா சொல்ற ஜோக்.

ஆனா எனக்கு சின்ன வயசுலே ஏற்பட்ட அனுபவத்தைப் பார்த்த பொழுது அது உண்மைதான்னு தோணுது.

நான் ஆறாவதோ, ஏழாவதோ படிச்சிக்கிட்டிருந்த போது நடந்தது. எங்கள் குடும்பங்களில் ஒருவர் வீட்டுக் குழந்தை இன்னொருவர் வீட்டிற்குள் சுதந்திரமாக நுழைந்து, கிச்சனுக்குள்ளே போய் அங்கு எங்களுக்கு ஏதாவது பிடித்த சாப்பிடும் ஐடம் கிடைத்தால் யாரையும் கேட்காமல் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும் அளவுக்கு நம் நாட்டு அரசியல் தராத சுதந்திரத்தை நாங்கள் அனுபவித்து வந்தோம். ஆனால் நாங்கள் டீஸென்ட் பாய்ஸ், கேர்ள்ஸும் கூட. அதனால் யாருக்கும் தெரியாமல் அப்படி செய்யமாட்டோம். செய்தாலும் யாரும் எங்களைக்கேட்க மாட்டார்கள்.

அப்படி நாங்கள் சாப்பாட்டு நேரத்தில் அங்கு நுழைந்தால் அந்த வீட்டுக்குழந்தைகளுடன் உட்கார்ந்து சாப்பிட்டு விடுவோம். அந்த வீட்டு அம்மா எங்கம்மாவிடம் நான் சாப்பிட்டதை இரண்டு வீட்டிற்கும் இடையே இருந்த ஜன்னல் மூலம் சொல்லிவிடுவார்கள். (ஃபோன் இல்லாத காலம் அது). யாரும் இதைத்தவறாக எடுத்துக்கொள்ளலமாட்டார்கள். அப்படி ஒரு அன்யோன்யம் எங்களுக்குள்ளே. முகம் சுளிக்கமாட்டார்கள்.

ஆனால் எங்க அரியலூர் அங்கிள்கள் “ உள்ளே போய் தண்ணி வாங்கிண்டு. வாடா” என்று சொல்லி, “வேறெதுவும் கேக்கக்கூடாது. அங்கே இருக்கிற வேறே பண்டங்கள் மீது கைவைத்தால் ஜாக்கிரதை” என்பார்கள்.

“ ஏண்டா, உன் முழியே சரியா இல்லை. என்ன விஷமம் பண்ணப்போறே, அல்லது பண்ணிட்டு வரே” என்றுதான் கேட்பார்கள்.

எனவே அங்கிள்கள் என்றால் எங்களுக்குக் கொஞ்சம் பயம்தான். இப்படியாக இருக்கும்போது அன்று ஒரு ரப்பர் பந்தை எடுத்துக்கொண்டு ஒரு நாள் பக்கத்து வீட்டில் நுழைந்தேன். வாசலில் இருந்த அந்த வீட்டு அங்கிள்
“ என்னடா பந்தை எடுத்துக்கிட்டு எங்கேடா போறே? என்று கேட்டார்.

கொல்லைப்பக்கத்தில் இருக்கும்திறந்தவெளியில் விளையாடப்போறேன் என்றேன். அவருக்கு அதில் அவ்வளவு இஷ்டம் இல்லை. இருந்தாலும் அவர் ஒரு நல்ல மூடில் இருந்திருப்பார் போல் இருக்கிறது.
“அதனால் எந்த ரகளையும் பண்ணாமல் எதையும் உடைக்காமல் விளையாடணும் தெரிஞ்சுதா?” என்றார்.

நான் எதையும் உடைக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு, வீட்டின் பின் கட்டுக்குப்போய் நான் விளையாடிக்கொண்டு இருந்தேன். அந்த சிறிய இடத்தில் அப்படி இப்படி ஓடி விளையாடியதில் பந்தை கொஞ்சம் வேகமாக உதைத்து விட்டேன். இங்கிதம் தெரியாமல் அந்தப் பந்து பின் கட்டிலிருந்த ஒரு பல்பைப்பதம் பார்த்து விட்டது. உடனே நடுநடுங்கிப்போனேன். அந்த உடைந்த பல்புத்தூள்களை எடுத்து அருகிலிருந்த சாக்கடையில் போட்டு விட்டேன். அங்கிளுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான், என்ன ஆகும் என்று எனக்குத் தெரியாது, வேகமாக வெளியே வந்துவிட்டேன். அந்தப்பல்புக்குப்பதிலாக வேறே பல்ப வாங்கி மாட்டணுமே. என் கிட்டே காசு கிடையாது. அப்பா கிட்டே கேட்டா எதுக்குடா என்பார். விஷயத்தை சொன்னால் உதை விழும். அம்மாவிடம்தான் கேட்க வேண்டும். இருந்தாலும் தன்மானம் இடம் தரவில்லை.

அந்த நேரம் அங்கிள் அங்கு இல்லாததால் தப்பிப்பிழைத்து என் வீட்டுற்குள் நுழைந்து கொண்டேன். உடனே எங்கள் வீட்டுக்கூடத்திலிருந்த கிருஷ்ணர் படத்துக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தேன். அத்தனை
“நாளாகக் கிருஷ்ணர் படத்தைக்கும்பிடுடா” என்று என் அம்மா எவ்வளவு கெஞ்சிக்கேட்டும் கும்பிடாத நான் இப்போது நானாகவே விழுந்து விழுந்து கும்பிடுவதைப் பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை என் அம்மாவுக்கு.
“என்னடா, ஏதாவது தப்புப் பண்ணினியா?” என்று கேட்டார் என் அம்மா.

நான் மழுப்பலாக
“நான் ஒண்ணும் தப்புப்பண்ணவில்லை” என்று சொன்னேனே ஒழிய, உண்மை தெரிந்து ஒரு நாள் மாட்டிக்கொள்ளத்தான் போகிறேன் என்ற பயம் என்னுள் இருந்துகொண்டு இருந்தது.

இரண்டு மூன்று நாட்களுக்கு பக்கத்து வீட்டிலிருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை. பல்ப் உடைந்ததை யாரும் கவனிக்கவில்லை போலும். . இதற்கிடையில் நான் தினந்தோறும் இரண்டு வேளையும் கிருஷ்ணர் படத்தைக்கும்பிட்டேன். இதை அடிக்கடி என் வீட்டுக்கு வரும் என் எதிர் வீட்டு அங்கிள் கவனித்தார்.
“ஏண்டா என்ன தப்புப் பண்ணினே?” என்று கேட்டார்.

நான் வழக்கம்போல “ ஒண்ணும் செய்யலையே” என்று சமாளித்தேன்.
குற்ற உணர்ச்சியிலேயே இரண்டு மூன்று நாட்கள் பக்கத்து வீட்டு அங்கிள் கண்ணில் படாமலே இருந்தேன். இன்னும் எத்தனைநாள்தான் இப்படி இருக்க முடியும்?

மறுநாள் எதிர்பாராமல் எதிர்த்த வீட்டு அங்கிள் “ என்னடா? பக்கத்து வீட்டுலே ஒடச்சுது நீதானா? “ என்று கேட்டார்.

எனக்குப் பக்பக் என்று ஆகிவிட்டது.

என்முகத்தில் வழியும் அசட்டுத்தனத்தைக் கண்டு
” நீதான் பண்ணி இருக்கே. நீ தினமும் எப்பவும் இல்லாம கிருஷ்ணர் படத்தைக்கும்பிடும்போதே நெனச்சேன். நிஜத்தைச் சொல்லு” என்றார்.

அந்த வாசல்லே இருந்த அந்த அங்கிள் ஆசையா வெச்ச மரத்துக்கிளையை நீதானே ஒடச்சே” என்றார்.

போன உயிர் திரும்பி வந்தது. “ நான் இல்லை “ என்று சொன்ன போதும் அவர் அதை நம்பத் தயாராக இல்லை.

இதுக்குமேலே என்னாலே தாங்க முடியாமல் அம்மாவிடம் சொல்லி அப்பாவுக்குத் தெரியாமல் காசு வாங்கி ஒரு புது பல்பை மாட்ட நினைத்தேன்.

அந்தப் பழைய பல்ப் ஒடச்சதைப்பத்தி பக்கத்து வீட்டு அங்கிள் கவலைப்படவே இல்லை.
வேறே யாரும் அதைப்பத்திப் பேசவே இல்லை. என்ன ஆச்சு என்று கேட்கவும் இல்லை.

அப்போது பக்கத்து வீட்டு அங்கிள் குரல் கேட்டது “கொல்லைப்பக்கத்துலே அந்த பல்பை மாத்தணும்னு சொன்னேனே”
.
அந்த பல்பையா? யாரோ அதை உடச்சுட்டா. அந்தபல்ப் அங்கே இல்லே” அவர் மனைவி.

“அந்த சுப்பன் நாலு நாளைக்கு முன்னாடி அங்கே விளையாடப் போனான். அவன்தான் உடச்சிருப்பான்”.

“சரி! செம டோஸ் விழப்போகிறது” என்று என்வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டேன்.

“அது ஃப்யூஸான பல்ப். நானே மாத்தணும்னு நாலு நாளா நென்ச்சிக்கிட்டு இருந்தேன்”.

அப்போதுதான் தெரிந்தது நான் உடைத்தது ஃப்யூஸான பல்ப் என்றும் அதை மாற்ற வேண்டும் என்று அங்கிள் நினைத்து இருந்தார் என்றும் பிறகு தெரிந்து கொண்டேன்

என் கையிலிருந்த புது பல்ப் என்னைப்பார்த்து சிரித்தது. இருந்தாலும் செய்த தவறுக்காக அங்கிளிடம் மன்னிப்புக்கேட்டு உடைத்த பல்புக்குப்பதிலாக புது பல்பைக் கொடுத்தேன்..

“இதுக்குத்தான் சொல்றது, பசங்க வீட்டுக்குள்ளே பந்தெல்லாம் வெளையாடக்கூடாதுன்னு” சொல்லி நான் கொடுத்த புது பல்பை என்னிடமே திருப்பித் தந்து விட்டார். அவர் வாங்கிய புது பல்பை அவர் கொல்லையில் மாட்ட விரைந்தார்.

ஒரு ஃ்யூஸான பல்பை தெரியாமல் உடைத்ததற்கே அவ்வளவு தடவை
ஸ்வாமி படத்தை கும்பிட்டநான், பெரிய தப்பை செய்தவர்கள் கோயில் கோயிலாக போய் கடவுளை வேண்டிக் கொள்வதில் என்ன ஆச்சரியம் என்று நினைத்துக்கொண்டேன்.

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (24-Feb-21, 3:56 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 97

மேலே