எத்தினியாவது

உண்மையில் நடந்தது.
எத்தினியாவது?
நான் அப்போது கோயம்புத்தூரில் இஞ்சினீரிங் படித்துக் கொண்டு இருந்தேன். ஒரு விடுமுறைக்கு எங்கள் கிராமம் அரியலூருக்கு வந்திருந்தேன். அப்போது எங்கள் வீட்டு பழைய வேலைக்காரனை தற்செயலாக சந்தித்தேன்.
“என்ன குரு, ஊரிலே இருந்து எப்போ வந்தே?”
என்னை சிறு வயதிலிருந்தே தெரியுமாதலால் உரிமையுடன் “என்ன குரு?” என்று கூப்பிட்டார்.

“ நேத்து” என்று சொல்லிவிட்டு “சௌக்கியமா?” ன்னு கேட்டேன்.

“சௌக்கியம்” னு சொல்லிட்டு “ நீ இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?” என்றார்

“B.E படிச்சிக்கிட்டு இருக்கேன்” என்றேன்.

அப்படின்னா “ எத்தினியாவது?” என்றார்

11வது அதாவது SSLC முடிச்சி இது நாலாவது வருஷம்.

அப்படின்னா, பதினஞ்சாவதுன்னு சொல்லு.

அப்படி அதை சொல்றதில்லே. வேணும்னா அப்படியும் வெச்சிக்கலாம்.

இன்னும் எத்தினி வருஷம் படிக்கப்போறே?

இன்னும் 2 வருஷம்.

“உன்னோட படிச்ச பரமசிவம் எல்லாம் இப்ப வேலையிலே இருக்கான். நீ இன்னும் படிச்சிக்கிட்டே இருந்தா, என்னிக்கித்தான் வேலைக்குப்போவே?”

“படிச்சி முடிச்சவுடனே”.

“காலாகாலத்துலே படிப்பை முடிச்சி வேலைக்குப் போறதை விட்டுட்டு படிச்சிக்கிட்டே இருந்தா எப்ப சம்பாதிக்கிறது? எப்ப கல்யாணம் பண்ணிக்கிறது? எப்ப குழந்தைங்களைப் பெக்கறது? அதே பார் அந்தப்பரமசிவம் வேலைக்குப்போன கையோட கல்யாணம் பண்ணிக்கிட்டான். இப்பப் பேர் சொல்லிக்கூப்பிட ஒரு கொழந்தை கூட இருக்கு”.

“அதெல்லாம் படிப்பு முடிச்ச அப்புறந்தான்”.

“என்ன படிப்போ? எப்ப முடிப்போ? ஆமாம் சம்பளம் எவ்வளவு தருவாங்க!”

“தெரியாது. ₹ 150/- தருவாங்க”

“ஓ! ₹150/- தருவாங்களா? அப்படின்னா பெரிய வேலைன்னு சொல்லு”.


“இஞ்சினீயர் வேலை. அதாவது கட்டடம் கட்டறது, ரோடு போடறது, பாலம் கட்டறது இந்த மாதிரி வேலை”

“கொலொத்து, மேஸ்திரி வேலைன்னு சொல்லு. அதுக்குக்கூட அவ்வளவு சம்பளம் தராங்களா? நல்லது. சரி. உடம்பைப் பாத்துக்கோ. நீ இளச்சிகிட்டே போறே. கொலுத்து வேலி செய்யறதுக்கெல்லாம் தெம்பு வேணாம்? நல்லா சாப்பிடு” என்று வாழ்த்தி விடை பெற்றார்.

நான் இஞ்சினீரிங் சேந்ததைப்பத்தி வீட்டிலே எவ்வளவு பெருமையா பேசினாங்க, அவங்க இவர் சொன்னதை நெனச்சா எப்படி இருக்கும்னு நெனச்சிப்பாத்தேன். சிரிப்பா வந்தது.

இப்போது அவரது பேரன் இஞ்சினீரிங் படிப்பதாகக் கேள்விப்பட்டு மகிழ்ந்து போனேன்.அவரை வாழ்த்தலாம் என்று விசாரிக்கப் போனதில் அவர் காலமாகிவிட்டார் என்று தெரிந்தது.
காலந்தான் எப்படி மாறிவிட்டது?

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (24-Feb-21, 3:53 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 40

மேலே