சப்தத்தின் நிழல்

==================================

மொழியின் மனதுக்குள்
நின்று நின்று நகர்வதும்
நகர்ந்து பின் நிற்பதுமான
அந்தி இருட்டொன்றில்

முளைத்து முளைத்து மடியும்
வார்த்தைகளின் கூக்குரலில்
புதைந்து அழிகிறது
கவிதையொன்றின் கனவு.

நிழலின் நிழல் விழும்
நீர்த்துளி ஒன்றுக்குள்
சிக்கி தவழாதிருக்கும்
சிறுசூரியனின் பிம்பத்தில்
மொழியின் வாசனை
கரைந்து பனியாய் புகைகிறது.

சப்தத்தின் நிழலில்
அர்த்தங்களின் கனவு.
அக்கனவின் நிழலில்
முளைக்கும் பகல்கள்.

உயிரை பிளக்கும்
மரணத்தின் நிழலில்
ஓய்வின்றி உணவின்றி
ம(ன)ணற்கடலின்
அலைகளை கழுவுகின்ற
காற்றுக்குள் படிந்திருக்கும்
இசையின் நிழலில்தான்
எத்தனை வண்ணங்கள்...


====================================

எழுதியவர் : ஸ்பரிசன் (24-Feb-21, 9:59 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 1369

மேலே