பார்வையை மாற்றிவிடு…
நான் உழுதேன், நான் விதைத்தேன், நான் நீர்ப்பாய்ச்சினேன்
நானே என் மாடுகளோடு மாடாய் உழைத்துத் தேய்ந்தேன்
பகலெல்லாம் பறவைகளைப் பேயாய் விரட்டி
பட்டினியுங் களைப்புமாய் நிமிடங்களையோட்டி
இவ்விதைப்பேதைகள் எப்போதுதான் முளைப்பரென
இரவெல்லாம் மணித்துளிகளை எண்ணி-விழித்தேன்
உன் கண்களோ எம் வியர்வையையும் வேதனைகளையும்
உன் கனவுகளோடுக் கண்டுகளித்து அயர்ந்துத் தூங்கின.
நீ விற்ற விதைகளில் விதைகளினுங் களைகளே அதிகம்
நீடிய வருடல்… நெருடல்… களையொழிக்கும் காண்டம்…
உன் விதைகளில் பூச்சியெதிர்க்கும் சக்தியும் சம்யமுயுமில்லை.
உரமென, மருந்தென… சிறு-பெரும் சிரமங்கள், சங்கடங்கள்…
பாதியாய்க் களைகள்போய் மீதியாய் உழைப்பே மிஞ்சின.
பார்த்துப்பரிதவித்தேன். எனினும், மனந்தளராமல் பாடுபட்டேன்.
உன் கண்களோ எம் வியர்வையையும் வேதனைகளையும்
உன் கனவுகளோடுக் கண்டுகளித்து அகல் விழித்தன.
பயிர் வளர்ப்பதும் பெண் வளர்ப்பதும் ஒன்றுதானோ...?
பாரழிப்பதுபோல் வறுமைகள்…! வெறுமைகள்…!
பிறர் கண்களிலிருந்துக் காப்பதும் பெரும்பாடன்றோ…
பொம்மையூன்றி, வேலியிட்டு, முகத்தை மறைத்து…
மீண்டும் நீர்; மீண்டும் உரம்; மீண்டும் பூச்சிமருந்து...
மென் பெண்மைவிடக் கனிவானது என்-பொற்பயிர்.
உன் கண்களோ எம் வியர்வையையும் வேதனைகளையும்
உன் கனவுகளோடுக் கண்டுகளித்துக் காதல் பாடின.
பிஞ்சாகி, பால்புகுந்து, பஞ்சுபோன்று மென்மைபெற்று,
தஞ்சாவூர் பொம்மையெனத் தலையாட்டியசைத்து,
ஆடி, அசைந்து, அங்கத்தையே நடனமாக்கி,
பாடிக்கூத்தாடும் பாவைபோல் மனங்கவர்ந்து,
பட்டினியிருந்து வளர்த்தயர்ந்த பாமரனென் பசிதீர்க்க
பிறந்ததுபோல் என் பயிர்ப்-பெண் கருத்தரிக்க...
உன் கண்களோ எம் வியர்வையையும் வேதனைகளையும்
உன் கனவுகளோடுக் கண்டுகளித்துக் காமம் கொண்டன.
தலைகுனிந்தாள்.பெற்றவரின் கடன்தீர்க்க தயாரானாள்.
தழைத்தஎன் பயிர்ப்பாவையை விலைப்பேச நீயும்
தரகர்களாய் மரணத்தூதர்களை அனுப்பிவைத்தாய்.
தன்னையர்பணிப்பதுதான் தலையான தியாகமென
தரணிக்குணர்த்துமளவில்- அழகியென் பயிர்நங்கை
தூக்கம் கலைந்தாள். கரைந்தாள். துக்கமணிந்தாள்.
உன் கண்களோ எம் வியர்வையையும் வேதனைகளையும்
உன் கனவுகளோடுக் கண்டுகளித்து கருணை மறந்தன.
உயிரிறைத்து வளர்த்ததனால் உயிர்கொண்டஎன் பயிர்களை
உண்டும் கொண்டும் அழித்தும் ஒழித்தும் விளையாடிய
பெருச்சாளியே..! கோயில்காளையே...! மதயானையே...!
சுத்த சைவம் என் சமயமென்றுச் செண்டையடித்து
சைவம் வளர்க்கும் உழவர் குருதியை உறிஞ்சிக்குடிக்கும்
பேரேட்டையே...! பெருத்தையே...! பிணந்தின்னியே...!
விளைச்சல்களின்மேல்மட்டும் கண்போட்டு- ஏழை
விவசாகிகளின் கைகளுக்கும் கால்களுக்கும் விலங்கிட்டு
ஓட்டைப்பல்லில் உரிமைகளைக்கட்டிப் பட்டம்விட்டு
ஓரக்கண்ணால் முதலாளித்துவத்துக்கு அழைப்பு விடுவோனே...! உன்
பொம்மலாட்டங்களை நாங்கள் உணராமலில்லை
'போகட்டும்' என்று விட்டுக்கொடுத்துவளர்ந்ததுதான் உண்மை.
தலைமுறைகளின் தலைகள்மேலுன் அதிகாரவெள்ளம் பொங்கியபின்னும்
தலையற்ற முண்டங்களா நாங்கள் பொறுத்திருக்க…?
பார்வையை மாற்றிவிடு. இல்லையேல், பாராமலேஇருந்துவிடு.
பார்த்தும் பார்த்திராததுபோல் பாவிப்பதை விட்டுவிடு.
வேளாண்-மேடுபள்ளங்களைத் தகர்தெறியத்தெரிந்த எம்மினம் வேரொடுனைப் பிடுங்கியெடுத்தெறிவோம் என்பதையும் புரிந்துவிடு.