அனிச்சம்

அங்கே..
பூக்களின் வாசத்தை
ஆதிக்கம் செய்தது
வாசனைத் திரவியங்களின் நெடி!

அவை..
உண்மை​ மலர்கள்தானா, மாலைகள்தானா?
குழப்பமே மிஞ்சியது
அவனுக்கு..

சோர்வில்லாமல்
இருகரம் கூப்பி
இனிமையுடன் வரவேற்றது
இயந்திர​ பொம்மை!

செயற்கை சிரிப்புகளை
சுமந்துகொண்டு
இங்குமங்குமாய்
மனித​ இயந்திரங்கள்..

உள்ளதில் சிறந்ததென்று
தேர்ந்தணிந்த​ உடை
கந்தலாய் தோன்றியது
ஜொலிப்புகளின் கூட்டத்திலே..

வேற்றுகிரக​வாசியாய்
ஊடுறுவும் கண்கள் கடந்து
கூச்சத்துடன் நுழைந்தான்

கறைபட​ குவித்த​
கோடிகள் பலப்பல​
ஊருக்கே வெட்டவெளிச்சம்..
கரை வேட்டி அமைச்சருக்கு அங்கே
இரத்தினக்கம்பள​ வரவேற்பு!

கிரீஸ் கறை விரல்களை
யாரும் பார்க்கா வண்ணம்
மறைத்துக் கொண்டான்
அவன்!

மூன்று நாள் கழுவினாலும்
கலைந்துவிடா ஒப்பனையில்
மணமகன் மணமகள்

கழுவியும் போகா
நகக்கீரல் கிரீஸ் கறைகளை
இரகசியமாய் அகற்றிக் கொண்டிருந்தான்
அவன்

பெருமைகள் தோரணமாய்
ஆடம்பரங்கள் ஆடைகளாய்
அரங்கம் மின்னிட​
படபடத்தது
அவன் இதயம்..

அழைப்பிதழ் இருந்தும்
அழையா விருந்தாளியாய்..
நெளிந்தது
அவன் மனம்

முகர்ந்தாலும் வாடிவிடா
செயற்கை மலர்களிடையே
அனிச்சமாய் வாடி நின்றான்
அவன்!..

எழுதியவர் : சு. அப்துல் கரீம், மதுரை. (12-Mar-21, 12:48 pm)
சேர்த்தது : சு அப்துல் கரீம்
பார்வை : 112

மேலே