நேரில் ஒரு சொல்
நேரில் ஒரு சொல்
_________________________________ருத்ரா
நேரில் ஒரு சொல் உதிர்க்க
தவித்துப்போகிறாய்.
தலை கவிழ்த்துக்கொள்கிறாய்.
அப்புறம் பார்க்கலாம்
என்று
அப்பால் நீ மறைந்த பிறகு
உன் மனசு பேசுகிற
ஒலியின் எதிரொலி
என்னைக் கசக்கிப்பிழிகிறது.
என் கனவை
அடித்து அடித்து துவைத்து
அந்த வானில் விரிக்கிறது.
அந்தக் கந்தல் முழுதும்
வானவில் வர்ணப்பிரளயங்கள்.
அந்த உன் விழியின் புருவம்
நெளியலில்
சுருளலில்
சுழிப்பில்
என்னை எங்கோ ஒரு
செவ்வாய்க்கோள் பாலைவனத்தில்
தூக்கி வீசுகிறது.
உன் சொல் எந்திரம்
அந்த "ப்ரிசெவியரன்ஸ்" போல்
என்னை உன் பிரிவு என்னும்
பாறைச்சிதலங்களில்
மோதிச்சிதறுகிறது!
நேருக்கு நேர் உன் இதழ் உதிர்க்கும்
சொல்
எனக்கு எப்போது எங்கே கிடைக்கும்?
இது தான் அந்த செவ்வாய் தோஷமோ?
இப்போது நான் ஒரு நம்பிக்கையில்
முற்றிப்போன "கேஸ்".
நாசாக்காரன் பொட்டில் அறைவது போல்
படம் காட்டினாலும்
கண்ணே!
உன் கனிவான காதலின் "ஜோஸ்யம்" மட்டுமே
எனக்குத்தெரிந்த "ஹிக்ஸ் போஸான்".
_______________________________________________