கடைச் சிரிப்பால் தேற்றிடுவாய்

சின்னச் சின்ன நிலவே – என்
சிந்தை எல்லாம் நின் நினைவே
புன்னகை சிந்திடுவாய் –எமை
பூரிக்க வைத்திடுவாய்..

மலர்போலும் நீ இருப்பாய் –என்
மனதில் நீயும் நிறைந்திருப்பாய்
புலருகின்ற பொழுதாக –எனைப்
புதுமை யாக்கி வைத்திருப்பாய்.

குழலதுவும் இனிமையில்லை-அந்த
யாழ் இசையும் இனிப்பதில்லை
மழலை நின் மழலையதோ –எனை
மயங்கிடவே வைக்குதன்றோ .

காலூன்றி கையூன்றி –நீ
தவழ்ந்தெங்கும் சென்றிடுவாய்
காலூன்றி ஓடிவர –உன்
பெற்றோரை பழக்கிடுவாய்.

தத்தி தத்தி நீ நடந்து –பல
வித்தையெல்லாம் காட்டிடுவாய்
மெத்தையினை நீ நனைத்து –ஒரு
மணங்கமழச் செய்திடுவாய்.

தூக்குகின்ற பொருளை நீயும் –ஒரு
தூரத்தில் எறிந்திடுவாய்.
போக்குக் காட்டி யாவரையும் –உன்
புன்னகையால் மாற்றிடுவாய்.

சுட்டியாக நீ இருப்பாய் –ஒரு
சுடர் போலும் ஒளி தருவாய்
கட்டிக் கரும்பும் நீதானே –எம்
கன்னமெல்லாம் தேன் பொழிவாய்.

வீட்டிலுள்ள பொருளையெல்லாம் –தினம்
கொட்டி விரவி வைத்திடுவாய்
வெட்டியாக இருப்பவரை –நீ
விரட்டி விரட்டி துரத்திடுவாய்.

அன்னைமடி தூங்கிடுவாய் –பிறர்
மடி புகுந்தால் நனைத்திடுவாய்
சொன்ன சொல்லைக் கேட்பதில்லை –ஒரு
சுதந்திரத்தில் தவண்டிடுவாய்.

துவண்டு விழும் மனங்களையும் –ஒரு
சுறுசுறுப்பாய் மாற்றிடுவாய்
அரண்டு போன பேர்களையும் –உன்
கடைச் சிரிப்பால் தேற்றிடுவாய்.

எழுதியவர் : பொதகை மு.செல்வராசன் (23-Mar-21, 12:51 pm)
பார்வை : 4559

மேலே