ஓட்டுக்கு நோட்டு

ஆறாவது முறை
வேலைவாய்ப்பு அட்டை புதுப்பிக்கப்பட்டுவிட்டது..

பல சான்றிதழ்கள்
மூலை கிழிந்து
பதிவெண்கள்
மறைந்து விட்டது...

அரசுதேர்விற்கு
விண்ணப்பித்த பணத்தில்
அடகு வைத்த
அம்மாவின் தாலியை மீட்டிருக்கலாம்...

சான்றிதழ் நகலெடுத்த பணத்தில்

சகோதரி திருமணத்தினை
நடத்தி முடித்திருக்கலாம்..

தகுதித் தேர்வில்
பலமுறை வென்றவன்,
நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி.. எவ்வளவு தருவீர்கள்?....

அரசு வங்கியில் வாங்கிய
கல்வி கடனுக்காக,
அம்பானியின் அடியாட்கள்
அசிங்க அசிங்கமாக
திட்டி தீர்த்தார்கள்...

தேர்தல் அறிவிப்பு..
ஆளும் கட்சி வேட்பாளரின்
தேர்தல் அறிக்கை
" வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை " சொல்லி முடித்து
கைகளில் திணித்தார்
இரண்டாயிரம் ரூபாய் நோட்டை....

#ஓட்டுக்கு_நோட்டு
#கவிதை
#சிவனேஷ்

எழுதியவர் : சிவனேஷ் (3-Apr-21, 11:00 pm)
சேர்த்தது : சிபூ
பார்வை : 1009

மேலே