கற்றவை-1

இளவயதிலிருந்தே ஏதேனுமொரு
இசைக்கருவியை கற்க ஆசை
அது வயதுக்கு வயது
மாறிக்கொண்டே இருப்பதுதான் ஆச்சர்யம்

வீணைக்கும் தம்புராவிற்கும்
இன்றளவும் வித்யாசம் தெரியாது -எதோ கல்யாணத்தில்
குமார் அண்ணா வாசித்ததாய் ஞாபகம்

கோயில் திருவிழாவில் பலூன் கட்டிய ஊதல்
பல திருவிழாக்களில் பலமுறை புல்லாங்குழல்
அப்புறம் ஊமைவிழிகள் படம் பார்த்து
மவுத் ஆர்கான் - எல்லாம் வாங்கி
பழகிப்பார்த்தும் இசை கிட்டக்க கூட வரவில்லை

வீரமணி மர டெஸ்கில் தாளம் போடுவான்
பக்கத்து கிளாஸ் தையல் டீச்சர் வரும்போது
என்னை மாட்டிவிடுவான் இசை பூசையாய் விழும்
இருந்தாலும் விடவில்லை இன்றளவும் இசை முயற்சி





கோபுர வாசலிலேயில் மோகன்லால்
ஒரு பெரிய பெட்டி மாதிரி ஒரு கருவியை வைத்து
விரித்து விரித்து மூட
இதுதான் நாம கத்துக்கணும்னு தேடியெல்லாம் பார்த்தேன்
ஜெயபால்கிட்ட கேட்டா "ஆர்மோனியம் தான" னு கேட்டார்
அது பேர் அக்கார்டியன்னு ரொம்ப லேட்டா தெரியவந்தது
தப்பித்தது ...

அரவிந்தசாமிதான் எனக்கு கிடார் கனவை கொடுத்தது
நலம் வாழ எந்நாளும்னு பாட்டு
கொஞ்சநாள் அதை வாசிப்பதாய்
கனவெல்லாம் கண்டுருக்கேன்

சாக்ஸ போன் நமக்கு ஏனோ பிடிக்காது
பீப்பியை வளைத்தது போலிருக்கும்
கொம்பு ஊதல்னு ஊர்ப்பக்கம் ஒன்னுருக்குமே அதுமாதிரி

கன்யாகுமரி டூர் போனப்ப ஒன்னுக்கு ரெண்டா
சங்கு வாங்கினேன் ஒன்னு வெள்ளை
இன்னொன்னு சந்தனக்கலர் ஒன்னும் சப்தமே வரல
பாலுதான் சொன்னான் அது டூப்ளிகெட்டுனு



கோயமுத்தூர் போனப்ப பிரசாத்தும்
மணியண்ணாவும் மோளம் மாதிரி
சின்னசைசில் கையாலேயே அடி பின்னாங்க
சரி இது கண்டிப்பா கத்துக்கணும்னு முடிவு
கொஞ்ச நாள் பார்த்ததில்
ஒரு காலை தூக்கி மேல வச்சு
தலையை காது கேட்காதவன் மாதிரி சாய்த்து வைத்துக்கொள்வது
பிடிக்கவில்லை -சரி போகட்டும்

பாம்பே ஜெயஸ்ரீ கேஸட்ட்ல வச்சிருக்குற தம்புரா
கிருஷ்ணபரமாத்மா புல்லாங்குழல்
குன்னக்குடி வயலின்
ஜாகிர் தபேலா
மணிஐயர் தவில்
இப்படி போஸ் கொடுக்கணும்னு ரொம்ப ஆசை

மகளை பியானோ கிளாசுக்கு
கொண்டுவிடும்போதெல்லாம்
டோஏ டியர் ஏ பிமேல் டியர்னு சொல்லிப்பார்ப்பேன்
அந்த கருப்பு வெள்ளை கட்டைக்குள் எத்தனை ரகஸ்யங்கள்

எதையுமே முயற்சி செய்யனும்
டிகிரி டூ தெரியுமா ஆஸ்திரேலிய பூர்வகுடிகளின் இசை
ஏணியோட ஒருபக்கம் அளவுக்கு உயரம்

தப்பிசை கூட ரொம்ப பிடிக்கும்
நாகூர் ஹனிபாவ பாட வச்சு இளையராஜா
அடித்த அந்த இசை

இப்படியான இசையார்வம்
சித் ஸ்ரீராம் பாடல்களால்
கொஞ்சம் குறைந்து போனது

எப்படியும் வயலின் கத்துக்கணும்
அப்பப்ப ஒருகையை வயலினாகவும்
மறுகையை கம்பி போல் வைத்து வாசித்துப்பார்ப்பேன்

இசை எங்கும் வியாபிக்க
கடலின் தனிமையில்
அலை வந்து வந்து போகும்
காற்றின் சப்தம் ....
பின் சரியான இடைவெளியிலொரு நிசப்தம்
மாறி மாறி
பியானோவின் கருப்பு வெள்ளை கட்டைகளாய்
முதல் அலையும் இரண்டாம் அலையும் கரை மோத
இன்றளவும்
இசை கைகூடவில்லை ....
#கற்றவை 1# ரிஷிசேது

எழுதியவர் : ரிஷிசேது (4-May-21, 4:28 pm)
சேர்த்தது : ரிஷி சேது
பார்வை : 51

மேலே