சுற்றுலா

கோவிந்தனின் ஒரே மகள் ரோகினி படிப்பை முடித்து விட்டாள். லயோலா கல்லூரி, சென்னையில் , எம் ஏ சோசியாலஜி. நல்ல மார்க் . ஆனால், அவளுக்கு வேலைக்கு போவதில் இப்போது நாட்டமில்லை.

“ அப்பா ! நான் இரண்டு வருடம் சமூக சேவை செய்யலாம் என்று இருக்கிறேன். அப்புறமா, திரும்பி வந்து, ஐ ஏ எஸ் அல்லது கல்லூரி விரிவாளர் வேலைக்கு போகிறேன் . ஆப்ரிக்காவில் சோமாலியாவிலே ஒரு என் ஜி ஒவிலே (அரசு சார்பற்ற தொண்டு நிறுவனத்திலே) என்னை கூப்பிட்டிருக்காங்க. அங்கே கிராமங்களிலே கேம்ப் நடத்தி, குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம்னு இருக்கேன் “

“ என்னம்மா ரோகினி இது ! நீ எங்க ஒரே மகள். செல்லமாக வளர்ந்தவள். படிப்பை முடிச்சிட்டு எங்க கூட இருப்பே, இல்லே கூப்பிடு தூரத்திலே, வேலைக்கு செருவேன்னு பாத்தா, சோமாலியா, திபெத்ன்னு திடு திப்னு சொல்லறே. அங்கே பாடம் சொல்லிக் கொடுக்கிறதை இங்கேயே திருப்பதியிலே, சுத்து வட்டாரத்திலே செய்யேன் . எங்களுக்கும் திருப்தியாக இருக்கும் “ அப்பா கோவிந்தன் சொல்லிப் பார்த்தார். அவருக்கு திருமலையில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்றில் மேனேஜர் வேலை. ஜாகையும் , மனைவியுடன் திருமலையில் தான்

ரோகினி மறுத்து விட்டாள்.. “ இல்லேப்பா , இங்கே சரிப்பட்டு வராது . தூரத்திலே இருந்தால் தான் சேவை பண்ண முடியும் . நீங்க கவலையே படாதீங்க அப்பா. நான் அங்கே தனியா இல்லே . என்கூட படிச்சவங்க, எனக்கு சீனியர்கள் எல்லாம் அங்கே இருக்காங்க . ரொம்ப ஈசியா சமாளிச்சுக்குவேன். என்ன ஆனாலும்,. திருப்பதி திருப்பதி தான், சோமாலியா சோமாலியா தான். இங்கே வாழ்க்கையே வேறே தான் . என்னை என் போக்கிலே விடுங்கப்பா” அடித்து சொல்லி விட்டாள்

என்னதான் கோவிந்தனும்,.அவன் மனைவி வேதாவும் வாக்கு வாதம் பண்ணினாலும், முடிவில் ஜெயித்தது என்னவோ ரோகினிதான்.

அதுதான் இன்று மூன்று பேரும், மகளை சோமாலியா அனுப்ப, திருமலையிலிருந்து சென்னை வந்திருந்தனர். ரோகினி, சென்னையிலிருந்து டெல்லி போய், அங்கிருந்து சோமாலியா போகவேண்டும் . அங்கிருந்து ஜீப்பில் பிரயாணம் பண்ணி, அவள் வேலை செய்யும் கேம்ப் போக வேண்டும் .

சென்னை விமான நிலையத்தில் கூட்டம் . நிறைய பேர் நின்று கொண்டிருந்தனர், வாசலை பார்த்த படியே. அந்த கூட்ட நெரிசலில் நின்ற படியே கோவிந்தனும் வேதாவும் பிரியா விடை கொடுத்தனர் ரோகினிக்கு. கடைசி முறையாக ரோகினியை கட்டி கொண்டாள் வேதா. “ இன்னும் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும் உன்னை பார்க்க” என்று மூக்கை சிந்தினாள் . “நீ போய்த்தான் ஆகணுமா ?” என்று நூறாவது தடவையாக கேட்டாள்.

ரோகினிக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. இருந்தாலும், மனதை கல்லாக்கிக் கொண்டு அம்மாவை தட்டி கொடுத்தாள். “ கவலைப் படாதேம்மா , நீ எப்போ கூப்பிட்டாலும் நான் உடனே வந்துடுவேன் “ என்ற படியே பிரிந்தாள். கண் மறையும் வரை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தாள்.

****

திரும்பி வருகையில், கோவிந்தன் விமான நிலைய கூட்டத்தை பார்த்துக் கொண்டே வந்தார். “ எவ்வளவு கூட்டம் ? ஏன்தான் இப்படி கூடராங்களோ? டைம் வேஸ்ட், பணம் வேஸ்ட், “ என்று கசந்து கொண்டே வந்தார். கூட்டத்தை பார்த்தாலே அவருக்கு வெறுப்பாக இருந்தது .

இதுதானே திருமலையிலும் . எப்போ பார்த்தாலும் கூட்டம் ? எங்கே பார்த்தாலும் கூட்டம் ? கூட்டத்தை கண்டாலே அவருக்கு வெறுப்பு ? அதுவும் ஜூலை மாசத்திலே , இந்த ப்ரம்ஹோத்சவம் வந்தா , திருமலைலே கேக்கவே வேணாம் ? எள் போட்டா எள் விழாது . அதுவும் இந்த சொந்தக்காரங்க தொல்லை இருக்கே , அப்பப்பா ! தாங்க முடியாது.

தம்பியோட மனைவியின் அண்ணன், மனைவியின் தம்பி மருமகன் , அண்ணாவின் மருமகளின் அப்பா, இப்படி தெரிந்தவங்க , தெரியாதவங்க, உறவு முறை சொல்லிக் கொண்டு , ரெண்டு ஆரஞ்சு பழத்தை கையிலே கொடுத்துட்டு, நம்ப வீட்டிலே டேரா போட்டுருவாங்க. அவங்களுக்கு சமையல் பண்ணி போட்டு, அங்கே இங்கே அழைச்சிகிட்டு போய், அப்பா, தொல்லை தாளாது. செலவு கட்டுப்படி ஆகாது . ஆனால், வேறே வழி, ?

“என்ன யோசனை ?” திரும்பி வரும்போது, பஸ்சில் வேதா கேட்டாள். “ஒண்ணுமில்லை , இந்த ப்ரம்ஹோத்சவம் வருதே, நம்ம தெரிந்த உறவு, தெரியாத உறவு இப்படி நிறைய கூட்டம் வருமே, செலவாகுமே, இப்பவே, ரோகினி ஆப்ரிகா போக செலவு பண்ணியிருக்கொமே, எப்படி சமாளிக்க போறோம்னு யோசிச்சுகிட்டு இருக்கேன் “

“ ஆமா ! எனக்கு கூட அந்த யோசனை தான் ! இவங்களுக்கு சமைச்சு போட்டு, சின்ன வீட்டிலே சமாளிக்கறது பெரிய பிரச்னை தான் ! என்ன பண்ணலாம் ? ஒண்ணுமே புரியலே !”

*****

வீட்டுக்கு வந்தவுடன், கோவிந்தன் நேரே தனது கம்புட்டர் நோக்கி சென்றார். போன வருடம், ப்ரம்ஹோத்சவம் போது ஆன செலவை தனது எக்ஸ்செல் ஷீட்டில் கணக்கிட்டார். உறவினர் சாப்பாடு செலவு, இதர செலவினங்கள் எல்லாம் சேர்த்து ரூ. 10000/- அந்த மாதம் மட்டும் அதிகம் ஆகியிருந்தது. அதை தவிர, உடற்கஷ்டம், வேதா சமையல், பாத்திரம் தேய்க்கும் அவஸ்தை , அப்பப்பா , போதுண்டா சாமி . திருமலையில் இருந்தாலே கஷ்டம் தான் .

இந்த வருஷம் எப்படியாவது, இந்த தொந்திரவிலிருந்து தப்பிக்க வேண்டும். என்ன செய்யலாம் ?

வேதாவிடம் பேசினார். முடிவு செய்து விட்டார் . அவளும் ஒப்புக் கொண்டாள்.

அடுத்த நாள். ஹோட்டல் சென்றவுடன், ப்ரம்ஹோத்சவம் சமயத்தில் பத்து நாட்கள் லீவ் எடுத்தார். தமிழ்நாடு சுற்றுலா துறையுடன் தொடர்பு கொண்டு, தமிழ்நாடு சுற்றுலா ஏழு நாட்களுக்கு இரண்டு டிக்கெட் பதிவு செய்தார். பின்னரே நிம்மதியானார்.

***

ஜூலை மாதம் முதல் நாள். அலை பேசி அவரை அழைத்தது . எடுத்தார். “ என்னப்பா, கோவிந்தா, சௌக்கியமா ! நாந்தான் , ராமதுரை பேசறேன் . உன் அத்தையின் மச்சினன். வேதா , ரோகினி எல்லாரும் சௌக்கியமா “

“ சொல்லுங்கோ, எல்லாரும் சௌக்கியம் “

“ ஒண்ணுமில்லே, நாங்க, கருட சேவைக்கு வரலாம்னு இருக்கோம் !, நீ இருந்தா, பார்த்துட்டு போகலாமேன்னு நினைச்சேன் . பார்த்தும், ரொம்ப நாள் ஆயிடுத்தே ! “

கோவிந்தன் முந்திக் கொண்டார். “ நாங்க ஊரிலே இல்லே மாமா ( மாமாவா?சித்தப்பாவா ?) வெளியூர் டூர் போறோம், ஒரு பத்து பதினைந்து நாள் ஊரிலே இருக்க மாட்டோம் சாரி மாமா “

“ அப்படியா ? அடடா ! சரி , வீடு காலியாகத்தானே இருக்கும் < ஒன்னு பண்ணு, வீட்டு சாவியை பக்கத்து வீட்டிலே கொடுத்துட்டு போ நாங்க வந்தா, தங்க உதவியாக இருக்கும் “

சரியான விடாக் கொண்டனாக இருக்கிறாரே ! “ இல்லே மாமா , நாங்க வீட்டை இன்னொருத்தருக்கு ஏற்கெனவே கொடுத்திட்டோம் “

“ அப்படியா ! சரி பரவாயில்லே விடு ! நாங்க வேறே ஏற்பாடு பண்ணிக்கிறோம்” ராம துரை அலைபேசியை கட் பண்ணி விட்டார்.

இரண்டு நாள் கழித்து : வேதாவின் சித்தி பெண்ணின் மாமனார் பேசினார். என்னப்பா, கோவிந்தா, சௌக்கியமா ! நாந்தான் , தேசிகன் பேசறேன் . வேதாவின் சின்ன மாமனார். வேதா , ரோகினி எல்லாரும் சௌக்கியமா “

“ சொல்லுங்கோ, எல்லாரும் சௌக்கியம் “

“ ஒண்ணுமில்லே, நாங்க, கருட சேவைக்கு வரலாம்னு இருக்கோம் !, நீ இருந்தா, பார்த்துட்டு போகலாமேன்னு நினைச்சேன் . பார்த்தும், ரொம்ப நாள் ஆயிடுத்தே ! “

கோவிந்தன் முந்திக் கொண்டார். “ நாங்க ஊரிலே இல்லே மாமா ( மாமாவா?சித்தப்பாவா ?) வெளியூர் டூர் போறோம், ஒரு பத்து பதினைந்து நாள் ஊரிலே இருக்க மாட்டோம் சாரி மாமா “

“ அப்படியா ? அடடா ! ! சரி பரவாயில்லே விடு ! நாங்க வேறே ஏற்பாடு பண்ணிக்கிறோம்” தேசிகன் அலைபேசியை கட் பண்ணி விட்டார்.

கோவிந்தனுக்கு அப்பாடா என்றிருந்தது. நல்லவேளை, தப்பித்தோம் . இனிமேல், ஒவ்வொரு வருஷமும், இப்படித்தான் ப்ரம்ஹோத்சவம் சமயத்தில் ,ஏதாவது சுற்றுலா போய்விட வேண்டும் .

சுற்றுலாவுக்கு கிளம்பும் நாளுக்கு முதல் நாள் வரை, இப்படித்தான் யாராவது உறவு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

*****

“ வேதா ! ரெடியா ! கிளம்பு கிளம்பு சீக்கிரம் . நாம் கிளம்பும் முன், யாராவது வாசலில் வந்து நிற்கப் போகிறார்கள் . அப்புறம் வீட்டை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது தான் ! “ – கோவிந்தன் துரிதப் படுத்தினார்.

அப்போது அவர் அலை பேசி அழைத்தது. “ யார்ரா இது , இந்த நேரத்திலே ?”

“ அப்பா, நாந்தான், ரோகினி !. இப்போ, நான் சோமாலியாவிலிருந்து பேசறேன் . அம்மாவும் நீங்களும் சௌக்கியமா ? “

“ நாங்க நல்லாயிருக்கோம் . நீ எப்பெடி இருக்கே ரோகினி ?”
“ அப்பா ! உங்களுக்கு ஒரு சந்தோஷமான நியூஸ், நா, இப்போ, இந்தியாவுக்கு கிளம்பிகிட்டு இருக்கேன் ! என்கூட என்னோட படிச்ச டாக்டர் ஒருத்தரும் வரார். அவருக்கு நம்ம ப்ரம்ஹோத்சவம் பாக்க ஏகப்பட்ட ஆசை . அதனாலே வரோம் . நாளன்னிக்கு திருமலைலே இருப்பேன் . உங்களை பாக்கப் போறோம்னு நினைச்சாக்க, ரொம்ப சந்தோஷமா இருக்கு “ – ரோகினி பொரிந்து தள்ளினாள்.

“சரிம்மா ! வா ! அம்மாகிட்டே கொடுக்கிறேன் போனை ! “ வேதாவிடம் மொபைலை கொடுத்தார். அவரது சந்தோஷம் வெகுவாக குறைந்து விட்டது . என்ன பண்ணுவது , மகள் ஆயிற்றே. முடியாது என சொல்ல முடியுமா ? இல்லே பின்னாடி ஒரு நாள் வாங்க என்று தான் சொல்ல முடியுமா ?

****

கோவிந்தன் தமிழ்நாடு சுற்றுலா துறையுடன் தொடர்பு கொண்டு, டிக்கட்டை கான்செல் செய்ய சொன்னார். கடைசி நிமிஷத்தில் கான்செல் செய்ய மறுத்து விட்டனர். போச்சு பணம் , வருந்தினார்.

ஆனால், பெண் வருகிறாளே , அந்த சந்தோஷம் , மனதின் ஒரு மூலையில்

அடுத்த நாள், ரோகிணியிடமிருந்து மீண்டும் ஒரு கால். “ அப்பா, நான் வர முடியாதுப்பா. என் டிக்கெட் கான்செல் ஆயிடுச்சி. இந்தியாவிலே கொரோனா ரொம்ப மோசமான நிலையிலே இருக்கிறதனாலே, என்னோட டாக்டர் நண்பர் வரமாட்டேன்னுட்டார். நான் மட்டும் தனியா வந்து என்ன பண்ணப் போறேன். நான் பாக்காத ப்ரம்ஹோத்சவமா ? நீங்க அனுபவியுங்க ! பை பை”

அட கொடுமையே !

வாசல்லே யாரோ குரல் கேட்டது. ராமதுரை மற்றும் தேசிகன் சக குடும்ப சமேதராய். வெளியே . “ நீங்க போகலியா ? எதுக்கும் பாக்கலாமேன்னு வந்தோம் . ரொம்ப நல்லதாப் போச்சு “ என்று உள்ளே வந்தனர் .

..... முற்றும்

எழுதியவர் : முரளி (18-May-21, 7:42 am)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : sutrulaa
பார்வை : 123

மேலே