பிரியாத வரம் வேண்டும்

பைங்கிளி போல் மழலை மொழியில் நீ உதித்தச் சொற்களை எண்ணி
வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து மௌனமாகப் புன்னகைக்கிறேன்
நித்தம் நித்தம் உனது நினைவலைகள் என் சிந்தையைத் துளைக்க
ஒரே ஒரு முறை உன் திருமுகம் காணும் வரத்தினை யாசிக்கிறேன்


உணர்வுகளை உருக்கி கவிதையாய் செதுக்கி வந்த என் பேனா முனையோ
உனது பிரிவால் மையைக் கக்கக் கூட முகம் சுளிக்கிறது
நீ பொழிந்த பாசமழையோ என் மனதில் அழியா கல்வெட்டாய் வாழ்கிறது
நினைவுகளை அழிக்கத் தெரியா இந்தப் பாவியை
நீ கண் இமைக்கும் கணத்தில் வஞ்சித்து விட்டாய்


உன்னோடு வாழ வேண்டும் என்று நான் மனதில் கட்டிய தாஜ்மாஹால்
இடிந்து விழுந்து என் மனதிலிருந்து மறைந்தே விட்டது
நீ என்னுடன் இருப்பேன் என்று எனக்களித்த வாக்குறுதியும்
இன்று உயிரற்றுப் போனது


நினைவுகளைக் கருவாக வைத்துப் புனைகிறேன் உனக்கொரு கவிதை
விடைப்பெற்றக் காதலுக்கு விடைகிடைப்பது என்றோ?
உனது மான்விழிகளில் சிக்குண்ட என்னை விட்டுவிட்டு
நீ மட்டும் தனியாக கல்லறைக்குச் சென்றது ஏனோ?

எத்தனையோ உறவுகளைச் சந்தித்தப் போதிலும்
எனக்கென வந்தவள் நீயொருவள் தானே
உன்னுடன் கழித்தத் தருணங்களை வாய்மொழியால் சொல்லத் தெரியவில்லை
பார்வை மொழியாலும் பதிலளிக்கத் தெரியவில்லை

நம் வாழ்வில் வீசிய வசந்தக் காற்றுகளே சுவடில்லாமல் மறைய
நாம் செதுக்கிய காவியங்களோ சிரஞ்சீவீயாக வாழ
நான் மட்டும் ஏனோ உன் தோள் சாய்ந்து பேசிய வார்த்தைகளை
இன்று தனிமையில் என் காகிதத்திடம் மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்க்கிறேன்
உன்னைப் பிரியாத வரம் வேண்டி !!!




-ரோஹிணி

எழுதியவர் : 🌙சந்திரதேவன் காதலி ரோஹிண (20-May-21, 9:04 pm)
சேர்த்தது : Rajarohini
பார்வை : 1978

மேலே