லொக்டவுணில் ஒரு கலியாணம்

லொக்டவுணில் ஒரு கலியாணம் - பாகம் 01
அந்தி சாயும் நேரம். சூரியன் மேற்கே மறைய தொடங்கியிருந்தான். பகல் சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டு எழுந்து வெளியில் வந்து கதிரையில் அமர்ந்தார் நடராசா. குசினிக்குள் இருந்து வந்த சத்தத்தை வைத்து மனைவி பவளம் தேத்தண்ணி போடுகிறார் என்பதை புரிந்து கொண்ட நடராசா தன்னை கொஞ்சம் ஆசுவாசப்பசுத்திக் கொண்டு தேத்தண்ணி குடிக்க தயாரானார்.
"மெய்யே..ப்பா... பாண்காரன் வாறான் போல... இரவு சாப்பாட்டுக்கு ஏதும் வாங்கோனுமே..." நடராசா குசினிக்கு குரல் வைத்தார்.
"அப்பா... பாண் வாங்கக்க எனக்கு வாய்ப்பன் இரண்டு வாங்குக்கப்பா..." வீட்டுக்குள் இருந்து மகள் கவியழிலின் குரல் வந்தது
"இல்லை பா... காத்தாலையான் பாண் மிச்சம் இருக்கு... புட்டும் கொஞ்சம் அவிக்கிறன். கலந்து கட்டி சாப்பிடுவம்..." - மனைவி பவளம்
'நல்ல காலம்.... இண்டைக்கும் பாண் ல விட்டுடுவாளோ என்று பயந்திட்டன்...' மனதிற்குள் சொல்லிக்கொண்டார் நடராசா
"பிள்ளை... உனக்கு வாய்ப்பன் வாங்கிறதே..." - நடராசா
"ஒன்றும் வேண்டவேண்டாம்... உந்த எண்ணெய் சாப்பாடுகளை சாப்பிட்டு சாப்பிட்டு தான் வருத்தங்களும்..." கூறிக்கொண்டு தேத்தண்ணியுடன் வெளியில் வந்த பவளம் தன் கணவனுக்கு கொடுத்தார்.
"கவி, ஆதி... தேத்தண்ணி ஊத்தி வைச்சிருக்கன். எடுத்துக் குடியுங்கோ பிள்ளையள்..." - பிள்ளைகளுக்கு குரல் வைத்தார் பவளம்
"சரசு கதைச்சவள்... அவையின் ட பக்கத்து வீடு தனிமைப்படுத்தியிருக்கிறாங்களாம்" - பவளம்
"அப்பிடியே... இவைக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே..."
"இல்லையாம்... ஆனால், பயந்து போயிருக்குதுகள்..."
"பின்ன... பக்கத்து வீடு வேற... பயம் இருக்கும் தானே.... சுடு தண்ணி குடிக்க சொல்லு... ஒவ்வொரு நாளும் ரெண்டு தடவை ஆவி பிடிக்க சொல்லு... எதுக்கும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருக்கிறது நல்லம் தானே..."
"ம்ம்ம்ம்.... உண்மை தான். வி.எம்.றோட்டில் ரெண்டு வீடாம். ஓடக்கரைக்குள்ளே ஒரு வீடு, தும்பளை பக்கம் மூன்று வீடு. தனிமைப்படுத்தியிருக்காம்...." - பவளம்
"இப்ப ஊருக்குள்ளேயும் வரத் தொடங்கிட்டுது போல.... கோயில் திருவிழா தான் என்ன செய்யப் போகிறாங்களோ தெரியலை..." - நடராசா
"அதான் பா என்ர யோசனையும்... போன வருஷமும் தேர் இல்லை... இந்த வருஷம் பிள்ளையார் என்ன நினைச்சிருக்கிறாரோ தெரியலை... பார்ப்பம்." - மனைவி பவளம்
"எங்கட ரெண்டுட்டயும் சொல்லனும்... கண்டபடி வெளியில திரியவேண்டாம் என்று..." - நடராசா
"சரி அதை விடுங்கோ... இஞ்சைப்பா... எனக்கென்னமோ உந்த லிங்கம் தரகர் மேல நம்பிக்கை இல்லை பா... இண்டைக்கு எத்தனை நாளாச்சு சொல்லுங்கோ ஆதிக்கு பொண்ணு பார்க்க சொல்லி... ஒரு தகவலும் இல்லை...."
"நானும் அதை தான் பா யோசிக்கிறன். உந்தாளை மட்டும் நம்பி இருந்தால் வேலைக்காகாது. வேற யார்ட்ட சரி ஜாதகத்தை கொடுத்து பார்ப்போம்..." - நடராசா
"ஓம்மப்பா... இல்லாட்டி சரிவராது. எப்பிடியும் அடுத்த மாசத்துக்குள்ளால அவனுக்கு கலியாணத்தை பண்ணியே ஆகனும். தப்பிச்சோ.... அடுத்த நாலைஞ்சு வருசத்துக்கு வரன் பொருந்தி வராதாம்.... சாஸ்திரி சொன்னது நினைவிருக்கு தானே..." - பவளம் பயமுறுத்தும் தொணியில் ஞாபகப்படுத்தினார்
"ம்ம்ம்ம்.... நாங்களும் ஒரு பக்கத்தால பார்ப்போம். எது சரிவருதோ அதை செய்து வைப்போம்..."
"உவள் பிள்ளை சொன்னாள் ஏதோ இண்டர்நெட் ல கொடுத்தும் தேடலாம் என்று... அதையும் செய்து பார்ப்போமன்..."
"அதுக்கென்ன.... ஒரு முயற்சி தானே..." - நடராசா
"ஓமப்பா... என்னோட படிச்ச பிள்ளைக்கு நெட் ல தான் பார்த்து கலியாணம் செய்து வைச்சவையள். சந்தோசமா தான் இருக்கிறாள்..." என்றவாறு கையில் தேத்தண்ணியோட வந்தமர்ந்தாள் கவியழில்.
"அவையள் ட டீட்டெயில் எடுத்து வை பிள்ளை... நாளைக்கே டவுணுக்கு போயிட்டு என்ன ஏது என்று விசாரிச்சு பார்த்திட்டு வாறன்..." - நடராசா
"என்ன பேச்சுவார்த்தை எல்லாம் காரசாரமா போயிட்டு இருக்கு... என்ன விசயம்" - ஆதியும் அவர்களுடன் இணைந்து கொண்டான்
-கலியாண பேச்சு தொடரும்