கற்கவேண்டிய பாடம்

கற்கவேண்டிய பாடம்
விளையாட்டாக நட்ட அந்த விதை,மெல்ல வளர்ந்து செடியாகி மரமாக காட்சியளிக்கிறது. யாவருக்கும் நிழல் கொடுக்கும் மரத்தில், கிளைகளில் பரவி பறவைகளும் அணில்களும் விளையாடி சத்தங்கள் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை காட்டுகின்றன. மக்களுக்கு அது ஒரு பொழுதுபோக்காகவும் உள்ளது.
அந்த மரம் பெரிதாக வளர்ந்து கிராமத்தின் எல்லையில் ஒரு அடையாளமாகவே ஆகிவிட்டது. அந்த கிராமத்து வழியை கேட்போர் அந்த மரத்தை குறிப்பிட்டு சொல்வது வழக்கம். மரம் இப்பொழுது தனக்குள் ஒரு மனம் உள்ளதை உணர ஆரம்பித்தது.தன்னிடம் அன்புக்காட்ட யாரேனும் வருவார்களா என ஏங்கவும் தொடங்கியது.
இவ்வாறு மனம் வருந்தும் அந்த நேரத்தில் ஒரு சிறுவன் அதனிடம் வந்தான்.அதன் கம்பிரத்தை பார்த்து ஒரு நாள் நானும் இவ்வாறு உடலில் வலு அடைய வேண்டும் என எண்ணுவான். தினமும் வந்து அந்த மரத்தைத் தடவி கொடுத்து அதன் உயரத்தையும் சுற்றளவையும் பார்த்து அதனை குறித்து பெருமையுடன் அதனுடன் பேசுவான். அவன் மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு பாடியும் சுற்றி வந்து ஆடி விளையாடி விட்டும் போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்.

திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான். அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.

என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாகப் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான்.

கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்.
என்னைப் பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது...
அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.

மறுபடியும் அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் வந்து விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டுப் பாடு என்றது.

அதற்கு அவன்_இல்லை இப்பொது எனக்கு வயதாகி விட்டது_எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்,
ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை
மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி அதை எடுத்துச்சென்று அதை வைத்து அதில் ஒரு வீடு கட்டிக்கொள் என்றது.

அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே வருடத்துக்கு ஒரு முறையாவது வந்து பார்த்துச் செல் என்றது.

வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் அவன் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் தினம் காத்திருந்தது. பல வருடங்கள் கழித்து ஒரு நாள் அவன் வந்தான்.

மரம் அவனை பார்த்து ஆனந்தக் கூத்தாடியது.

அவன் எப்போதும் போல் இல்லாமல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. என் படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான்.

மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து படகை சரி செய்து கொள் என்றது.

அவன் அடி மரத்தை வெட்டும் போது, மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்ப முடிந்தாலும் என்னை பார்க்க வா என்றது.

ஆனால் அவன் அதன் பின் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.
அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான்.

அவனைப் பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.
இப்போது உனக்குக் கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை.. கிளைகள் இல்லை.. அடி மரமும் இல்லை. என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது.
அவன் உடனே நீ பழங்களைக் கொடுத்தாலும் அதைக் கடிக்க எனக்குப் பற்கள் இல்லை, வீடு பிரித்துக் கட்டவும் படகைப் பழுது பார்க்கவும் என்னிடம் சக்தியும் இல்லை. எனக்கு இப்போது வேண்டியது ஓய்வு மட்டுமே என்றான்.

அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அதன் ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்தக் கண்ணீர் விட்டது.

இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடிப் போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது,
நாம் கொடுக்க முடிந்ததெல்லாம் பாசம், அன்பு, நேரம் இவைகள் தான். அவர்கள் விரும்புவதும் அது ஒன்றைத் தான்... அதைக் கொடுத்து அவர்களை மகிழ்விப்போம்

எழுதியவர் : கே என் ராம் (26-May-21, 1:00 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 136

மேலே