பொம்மியக்கா -அத்தியாயம் 5
வானம் கருத்து மழை கொட்ட தொடங்கிருச்சு
வாரேன்னு சூரியனும் மேற்கால கிளம்பிருச்சு
இரை தேடித் போன பறவையெல்லாம்
இறங்கிருச்சு கிளைமேல
ஒத்த சனம் இல்லாம
ஒடுங்கிருச்சு வீதி எல்லாம்
‘வா’ன்னு சொன்னாலும் வராத சத்தத்துல
‘ஓ’ னு ஒப்பாரி வச்சு
ஒன்டியப்பன் வீதி வழி
ஓடி வாறா பொன்னாத்தா......
யப்பே! யாத்தே! னு
ஆடி அலகளிஞ்சி...
அழிஞ்ச கோலமா ...
அலங்கோலமா...
அவுந்த கொண்டையா....
நிக்குறா பொன்னாத்தா.
எந்த காட்டுப் பயலுக்கு
என்ன கொடுத்த சொல்லு அப்பு?
சாமத்துக்கும் அடிக்கிறான்
சாராயம் குடிச்சு புட்டு
சங்கிலேயே மிதிக்கிறான்
நித்தம் குடிக்கும் நீச்ச தண்ணீக்கு
நித்தம் செத்து ...
நிம்மதிய அடமானம் வைக்க முடியாதப்பு
முடிச்சு விட்டுருங்க ;முழுக்கு போட்டுகிறேன்
மூக்கு சிந்தி போட்டா பொன்னாத்தா
கல்யாணம் ஆகி
கடந்திருச்சு வருசம்
தரேன்னு சொன்ன
தாலி தங்கம் எங்க?
தாலி சங்கிலிக்கும் தரம் கெட்ட பய னு
தள்ளி விட்டான் அப்பு ...
ஆத்தா இல்லாத அனாத பய மகளுக்கு
ஆதரவு இல்லையே அப்பு .....
வித நெல்லை வித்து காசு
வெள்ளிகிழமையானாலும் தாரேன்
வெசனப்படாத பொன்னாத்தா
பொம்மியக்கா நான் பெத்த பொண்ணுனா
பொன்னாத்தா நீதான் -என் ஒத்த கண்ணு
பெரியய்யா னு முறை சொன்ன
பெரியபொண்ணு பொன்னாத்தா !!
கண்ணாடி வளவியாட்டம்
கல கல னு சிரிக்கத்தான
காட வித்து கரைய வித்து
கரும்பு தோட்டம் பாதி வித்து
கரை சேத்தோம் உன்ன ...
கலங்க விட மாட்டேன் அப்பன்
கரையாம போடா!
தலைய அடமானம் வச்சும்
தந்துறேன் தாலி நக ...
மொக்கையா முறை எடுக்க
பக்கத்துல நிக்காரு
பாவமா பெரிய மூக்கன் …