பொம்மியக்கா - அத்தியாயம் 6

வரப்ப உடைகிறான்
வெரெப்பா நிக்குறான்
வளர்ந்தும் வளராத
வளத்தகெடா மீசைய
வருடித் தடவிகிட்டு
வம்புக்கு இழுக்கிறான்
குன்னிமுத்து......
பங்காளி சேக்காளி னு
பத்து பேர் படைசூழ
படமெடுத்து நிக்குறான்
குன்னிமுத்து....
ஒத்த பனமரம் தான்
உசரத்துல!
கலருல...
காக்காவையும் கரியையும்
கடைஞ்செடுத்த கடும் கருப்பு -பயல
வெயில்லையும் விளக்கு புடிச்சுத்தான் தேடனும்.

எரியுற எண்ணையில தண்ணியா
எரிஞ்சு விழுகுற முகத்துல
எடம் இல்ல உணர்ச்சி எதுக்கும்
அடுத்தவன் கண்ணீருக்கு
அழணும்ங்கிறது-இவன்
அகராதிலேயே இல்ல
சிறுக்கி மகன்
சிரிப்ப பாத்தே பலநாள் ஆச்சு

குன்னிமுத்து
பேரக்கேட்டாலே
படபடக்கும் பலபேருக்கு

பஞ்சமா பாவி மகன்
பாதகத்தி பெத்த மகன்
எண்ணி குடுத்த எட்டணாவுக்கு
எட்டுக்கு எட்டாத கணக்கு சொல்லி
வட்டிக்கு குட்டியா குருட்டு கிரயம் பண்ணி
ஓச்சே போடுவான் ஆளுகள

கால் ல விழுந்து -நீ
கெஞ்சு
கண்ணீரும் கம்பலைக்கும்
கரையாது இவன் நெஞ்சு

வராத கடனையும்
வரவழைக்கும் வித்தைக்காரன்
ஓட்ட பிரிச்சு ஒழுகும் மழையா
இண்டு இடுக்கெல்லாம்
இவனுக்கு அத்துப்பிடி

காடு வெளஞ்சிசோ
கம்மா நிறைஞ்சதோ
கவலைஇல்லை இவனுக்கு
தந்த காசு திரும்பி வரலீன
தாலி சங்கிலியும் தராசுக்கு வந்துரும்

வெளஞ்ச காடுனா வெள்ளாமைக்கு விட மாட்டான்
பெத்த புள்ளயா வளத்த
ஒத்த கரவ மாட்டையும்
பத்திருவான் அடிமாடா

தண்ணீ தெளிச்சுவிட்ட
தருதல பயபுள்ள
என்காட்ட மறிச்சு
எதுக்குடா உன் வேல
குறுக்கொடிஞ்சு போன
கிழவின்னு பாக்காத
மிஞ்சி வாடா -என் ஆம்பள பயபுள்ள னு
குனிஞ்சு ஊனி வந்த கம்ப
குறுக்கால போட்டா
குருவாயி கிழவி

ஏத்தா! குருவாயி
எள்ளு வெதைக்க ஒருவாட்டி
கொள்ளு வெதைக்க மறுவாட்டி னு
கொண்டா கொண்டானு வாங்குனயே
கொடுத்த காச கொண்டானு கேக்குறப்போ
குனிச்சு வந்த கம்ப குறுக்கால போடுற ??
கொளுத்தா கெடக்கு?
வானமா கொடுக்க வருண மகாராசாவா
தானமா கொடுக்க தர்ம மகாரசாவா

கனிஞ்ச குமரீனா
வேற மாதிரி வங்கிகுவேன்
கெழட்டு மாட்ட பூட்டி
ஏர் ஓட்ட முடியாதே
கக்கா பிக்கா னு சிரிக்கிறான்
களவாணி பய மகன்

கெட்டசாதிப் பயலே னு எகிறுனா குருவாயி
கெட்டு மார் தடுக்கி வரப்புல விழுந்தா
எடுத்து கம்ப ஊனி
எழுந்திரிக்க நினச்சா
தடுத்து கம்ப தள்ளி
கபடி ஆடுறான் கிழவிகூட
சேக்காளி பயலெல்லாம் சேர்ந்து சிரிக்க
ஒத்தாசைகும் ஆளில்லாமல்
ஒத்தையாகி போன குருவாயி

எங்கிருந்தோ வந்தாரு மொக்கையா
ஏலேட்டு இளம்தாரி பயலுக புடிக்க
குன்னிமுத்துவ பாத்து பாயுறாரு பாய்ச்சலா

கிழவன் குளிருக்கு குருவாத்தா முந்தானை
வார்த்தை முடியும் முன்னே
விழுந்திருச்சு முதல் குத்து
தடி மாட்டுப் பயலெல்லாம்
தடி எடுக்க ஓடையிலே
தனியாக நிக்காரு
தேவரு.....

மாமோய் ! மருமகனுக்கு
முறை செஞ்சு புட்டீறு
முகத்த வலிசுகிட்டு சிரிக்கான் குன்னிமுத்து
மாமோய்! வார்த்தை கனம் தாங்கல

எழுதியவர் : (26-May-21, 4:36 pm)
சேர்த்தது : RAJMOHAN
பார்வை : 16

புதிய படைப்புகள்

மேலே