பொம்மியக்கா -அத்தியாயம் 7

கபடி ஆடுது ..
கடந்த காலம் தேவருக்கு
மறக்க நினச்ச தெல்லாம்
முண்டிக்கிட்டு வருது
மழை போல கண்ணீர் -ஏனோ
முட்டிகிட்டு வருது

அழுது பழக்கமில்ல
ஆம்பளைக்கு ....
அத்தனையையும் மீறி
அந்து விழுது கண்ணீர் துளி ரெண்டு

மறக்க நினைச்சது எல்லாம் -மனச விட்டு
துறக்க நினைச்சது எல்லாம்
மண்டுது மனசுக்குள்ள
மண்குழில மழைநீரா!
தூரப்போ! னு தூக்கி எரிஞ்சு பாத்தாலும்
ஊறப் போட்ட கள்ளா!
உள்ளார பொங்குது

மொக்கையா மூளையில
முடிஞ்சு வச்ச நினைவுகள்
முகம் காட்டுது ஒவ்வொண்ணா...

ஊருல பெரிய சாவு
பேருல பெரிய பேறு
பெரியகருப்பு தேவரு

பெத்த மகனா...
ஒத்த மகனா..
மொக்கையா முந்தி நிக்கையிலே....

கூட்டத்துல கச கசப்பு
சருகுலபெஞ்ச சாரலா
சலசலகுது சனங்க

ஏலே !வாலே! னு
எசுன ஏச்சும்
வாய்க்கு வந்தத பேசுற பேச்சும்
விழுகுது மொக்கயறு காதுபட

துக்கத்த துண்டுல நனைச்சுக்கிட்டு
பக்கத்துல வாறாரு மொக்கயறு
பதினாற தொடாத பருவத்துல
படியோரம் நிக்குறா ஒருத்தி...

பார்த்த முகமாகவும் இல்ல
பழகுன சனமாகவும் இல்ல
ஏங்கி போற ஏக்கம் இவளுக்கு
எங்கப்பன் சாவு மேல எதுக்கு??

முளை போட்ட கேள்விகள்
மூளைய கிளறும்போது
எவன் தின்ன இலைக்கு டி
எங்கய்யா பேரு
எகுறுனான் ஒருத்தன் .

அய்யா
செருப்பு கழட்டி போட்ட இடமெல்லாம்
சொந்த மாகி போகுமா ?
அடிச்சு விரட்டு டா அவளை னு
அடிக்க வாரான் ஒருத்தன்

இத்தனையையும் கேட்டும்
இம்மி அசையல இவ
நட்டு விட்ட நாத்தா-சாஞ்சு
நிலையுல நிக்குறா

கத்திப்பேச சக்தியும் இல்ல
ஒத்துக்கு பேசவும் ஒத்த ஆள் இல்ல

கலஞ்ச முடி கந்தல் துணியா
காத்துல பறக்க
வெளஞ்ச நாத்து விதிக்கணக்கில்
வீதியில கிடக்கு

அய்யா
ஒத்தாசைக்கு வச்சதும்
ஒண்ணுமன்னுமா வாழ்ந்ததும்
எந்த காடுலயோ,எப்போவோ போட்ட வித
வளந்து நிக்குது சோலையம்மாவா

சோத்துக்கா வந்தேன்
சொந்தம் சேந்திட தான வந்தேன்
போக்கிடம் இல்லாது போன
போக்கத்தவளுக்கு-பெத்தவன்
பொணத்த காட்டுங்கய்யா!
வானம் வரைக்கும் வழித்துணையா
வாக்கரிசி நான் போட
வழிய காட்டுங்கய்யா!

காஞ்சு போன சருகா
காத்துல மிதக்கேன்
கடைசியா கொஞ்சம்
கருணை காட்டுங்கய்யா!

ஏற விட்ட வெத்தல கொடியா
இறங்கல எவன் மனசும்

கடைசி கணையா....
முதல் முறையா....
மொக்கையா தேவர
முறை சொல்லி கூப்பிட்டா
அண்ணே!!!

எழுதியவர் : (26-May-21, 4:37 pm)
சேர்த்தது : RAJMOHAN
பார்வை : 19

மேலே