போராடும் நெஞ்சம்

தலைப்பின்றிக் கவிதை எழுதிட
களைப்பின்றி சிந்தித்தேன் கருவினை !
மலைத்துப் போனேன் கண்டவுடன்
மலைபோல் குவிந்த சிதறல்களால் !

சதையிலா பிண்டம் உள்ளதோ
விதையிலா விருட்சம் உண்டோ !
கதையிலா காணொளி
காட்சிகளாது
பாதையிலா பயணம்
முடிவாகாது !

இலக்கு வகுக்காத
வாழ்வெதற்கு ?
இன்பம் காணாத
இதயமெதற்கு ?
இருந்தும் இல்லாத
நிலையெதற்கு ?

பஞ்சமில்லை என்றும் தலைப்புக்கு
வஞ்சமில்லை நெஞ்சில் வடிப்பதற்கு !
குறைவில்லை சிந்தையில் சிந்தனைக்கு !
கருமியில்லை நானும் வழங்குவதில் !

நலமில்லை தொடர்ந்து
எழுதுவதில் !
விருப்பமில்லை நேரம்
வீணடிப்பதில் !
வளமானோர் கவிதையால் சிலர்
வாய்ப்பின்றி
தவிப்பவர் பலர் !
வசதியின்றி வாழ்பவர்
உளர் !

நினைப்பதை கிறுக்குகிறேன் நான்
நிந்திப்பர் நிச்சயம் வாசிப்பவர்
சிந்திப்பர் சிறிதளவு
எனைப்பற்றி !

உள்ளத்தில் எழுந்ததை
வடித்தேன்
வெடித்து சிதறியதில்
சிறிதளவை
படித்துப் பதிவிடுங்கள்
கருத்தினை !

நாளுக்கொரு கவிதை
எழுதியவன்
நான்கைந்து மாதங்கள்
எழுதவில்லை
நாட்களை நகர்த்துகிறேன்
வழியின்றி !

தாளொன்று கிடைக்காத
நிலையில்லை
கேளென்று உரைப்பது
வழக்கமில்லை
எழுதென்று
விரட்டுகிறது விரல்கள் !

காலத்தின் கொடுமை
கொரோனா
நுண்கிருமி மாள்வதும்
எந்நாளோ ?
மக்கள் மீள்வதும்
எப்போது ?


பழனி குமார்
05.06.2021

எழுதியவர் : பழனி குமார் (5-Jun-21, 3:01 pm)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : poraadum nenjam
பார்வை : 185

மேலே