பூத்த பொழுது புனித இரவு
விரிவானில் வீற்றிருந்த கதிதரவன்
விடைபெறத்துடித்தான்
விரைந்து வந்த பொழுதும் சாய்ந்து வடிக்க,
விழுபருதியும் அலைகள் நடைபழகும்,
நடுக்கடல்தாண்டி கடற்கன்னியைத் தழுவ;
தொடுவானம்தான் தோகைவிரித்தாட;
சிதறிய சிவப்பழகு,
சிவந்த இதழால் பருதி
முத்தம் கொடுக்கத் துடிக்க,
கட்டழகு உடுத்திய
அந்திவானமும் அசையாது இருக்க
பிந்திவந்த பொழுது பந்திவிரிக்க,
விட்டுச்செல்ல விரும்பாது;
மரகதப்பச்சை உடுத்திய,
கானகத்தின் மாலைப்புலம்பல்
தென்றல் காற்றீன் சீண்டல்,
படர் குளிரின் அடங்காத ஆசை,
இன்பமாய் வீசும் ஈரக்காற்று,
ஓரத்துப்பார்வை,
ஒதுக்கியது அழகை.
பறவைகளின் உலா,
பழகிய பாசை,
மாலைப் பொழுதில் மேகம் உடுத்திய அழகு.
உள்ளே புக ஆசையுடன்,
சிறகடித்துப் பறக்கும் பறவைகள்,
நீல் வானம்,
நிறம் மாறக்காணும் தவிப்பு,
இது ஒரு அழகிய வியப்பு,
மாலைப்புலம்பல்
மையிருட்டைத் தொட விறைந்த இரவுப் பொழுது.
இரவின் ஏக்கம்,
இரவியும் இருட்டை பூச,
பிறவிப்பேர் எடுத்ததாம் நிலவு.
பூசிய இருட்டில் தான்;
பூசைக்கு தயாரான நட்சத்திர கூட்டங்கள்;
தினம் பழகிய பொழுது தான்,
பார்க்க பார்க்க அழகுதான்.
பூசிய இருட்டில் தான் ,
பூசைக்கு தயாரான தம்பதிகள்
அழகு பூத்தது,
அழகாய் பூத்தது அந்த
அந்தரங்கம் சிரித்தது.
நிலவு நடந்தது நீல்வானில்,
உலவுபோன உயிர்வதைதான்,
இருண்ட இருள் சமுத்திரம் தான்.
இதயத்தில் பூக்கள் மலர்ந்தன,
இதழின் தாகத்தை தவிக்கத்தான்.
தாடாகத்தில் பூத்த தாமரை,
இருள் முகத்தைப் பார்த்து,
நாணம் வடித்து இதழ்களை மூடியது.
தடையில்லா பொழுதுதான்,
தயங்காத இளமைதான்,
சிலைவடித்த சிலையல்ல,
சிற்றின்ப ஆசைகள் தான்.
பழைய பாசைதான்,
பசியாத்தவந்த மோகம் தான்,
பாய்ந்துவந்த வேகம்தான்,
விடாத தாகம் தான்.
வெடித்தது வெட்கம் தான்.
ஆக்கிய சோறும் ஆறியதோ!
ஆருயிரும் வெந்ததோ
ஆர்வத்தின் ஆற்றாமைதான்,
அடிபட்ட வேங்கைதான்,
பிடிபட்ட மான்தான்,
பிடிவாதம் பிடித்தது, வேங்கையும் மானும்தான்.
பிடிபட்டது வேங்கையா? மானா?
பேந்து பேந்து முழித்தது,
இரவுதான்!
குருதி சிந்தாத போர்தான்!
குறையில்லா போராட்டம்தான்!
உடைவால் இல்லாத போராட்டம்தான்!
ஓயாது ஓசை கொடுத்த தவளைதான்,
குவைளைபூத்த தடாகத்தை,
குணிந்து பார்த்தது நிலவுதான்.
ஓட்டம் காட்டத்துடித்தது இரவுதான்;
வலைபோட்டது பருவம் தான்;
வந்தே சிக்கியது உடல்கள் தான்;
நடிக்காத நடிப்புத்தான்;
துடிக்காத துடிப்புத்தான்.
கொட்டும் சரசம்தான்
கொடைபிடித்தது விரசம் தான்;
வீழ்ந்துவிட்டது இரவுதான்;
வீழ்தியது இரு இதயங்கள் தான்.
விளக்குப் பிடித்த நிலவும்,
நைசாக விலகப்பாக்க,
இலகியது இருவர்கள்தான்.
விடியாத பொழுதுதான்,
பிடிவாத உறவுதான்,
வீழ்ந்ததும் இரவுதான்,
விடைபெற மலைத்தது உடல்கள் தான்,
வெளுக்கத் துவங்கிய பொழுதான்,
வெறுப்புற்ற தம்மதிகள்தான்.
முழுநிலவை பொழுதுவிரட்ட,
விருந்துண்ட விழிகள் விடைபெற தவித்தன.
பொழுது புலர்ந்தது,
போய்வர இரவும் துடித்தது.
சாய்த இரவை,
சிறிது சிறிதாக விடிகாலை கவ்வ,
வெளிச்சத்திற்கே வெட்கம்தான்,
தம்பதியர்களைப்பார்த்து.
சூரியன் சோம்பலை கடற்கன்னியிடம் நீக்கி
சுறு சுறுப்பாய் உயரந்தும்-
சுரணை இல்லாது கிடந்தவர்கள்
ரசனை இழந்தனர்.
காலைத்தென்றல்;
கட்டிய தம்பதியர்களின்
கட்டிய காட்சியை காண
ஒட்டி வர;
கழண்ட வெட்கத்தை,
கட்டினால் சேலையால் பேதை.
திட்டிய உதடுதான்,
தீட்டிய அழகுதான்,
தட்டி எழுப்பியது கதிரவன்தான்.
கதிரவனோ கலங்காதே
இதே கெதிதான் எனக்கும்,
கடலைத்தேடி மாலை நான் தொடர்வேன்,
உடலைத்தேடி ஊடல்,
உங்களைத்தொடரும் இரவில்,
இன்றும் விருந்துதான்;
என்றும் அது மருந்துதான்;
எழுந்து அமருங்கள் என்றது.
ஒன்றும் புரியாத தவிப்புத்தான்,
ஒருக்களித்து படுத்தவர்கள்,
ஒதுங்கியே செல்ல,
பதுங்கிய புலியும்,
பாயது ஓய்ந்தது.
வெள்ளை நீல் வானம் வெளுத்தது,
வழுத்தது கோபம் இருவருக்கும்,
வழக்கமாய் நடக்கும் நாடகம் தானே,
நடையைக் கட்டு என்றது பொழுது,
சீச்சி என்றே சீழ்வடிந்த ஆசையால் பொழுதை சபிக்க;
மோதை மயக்கம்
மெல்ல மெல்ல தெளிய,
போத்திருந்த மேனியும், மெல்ல மெல்ல விலக;
சொல்லாமல் கூவினான்;
காலைச் சேவல்.
பஞ்சனைக்குத்தான் வந்தது படுகோபம்;
பார்த்து பார்த்து ஏங்கிய தலையனைக்கு வந்தது
சிரிப்புத்தான்.
எழுந்த தம்பதியர்களின் மனத்திற்கும் இழுபறிதான்,
எழுதிய இரவுக் காவியம் முடிவுக்கு வந்தது.
ஏழுந்த பொழுதது,
எழுப்பியது உறவை
ஏந்திய இரவது,
எங்கோ சென்று உறங்கியது,
தயங்கிய விழிகள் அது,
தள்ளாடியே எழுந்தது.
பூத்த பொழுது,
புனித இரவு,
புதைந்த உறவு,
புறப்பட்ட பிரிவு,
அ. முத்துவேழப்பன்