மழை
மேகப் பெண்கள்
போகிறப்போக்கில்
உதறி விட்டு செல்லும்
கூந்தலின் நீர்த்துளிகள்...
மின்னல் ஒளிக்கீற்றிடையே
இடி முழக்கம் எக்காளமிட
வானப்பெண் அங்கே
நடத்துகிறாள் ஒரு
கண்ணீர் நாடகத்தை...
நீல மேகங்கள்
உருமாறி, கருமாறி
கார்முகிழ்களாகி
கண்ணீர்த்துளிவிட்டு
மண்ணின் நிறத்தை
மாற்றுகிறது பச்சையாக....
மார்கழியில் சூல்கொண்ட
மேகங்கள், ஐப்பசியில்
ஈன்றெடுக்கிறது
மழைக் குழந்தையை,
சூல்கொண்ட பெண் போல...
சூல்கொண்ட பெண்தான்
அழக்கூடாது..
சூல்கொண்ட மேகங்கள்
அழுதாக வேண்டும்...
மனிதன் அழுதால்
சோகம் உரைக்கும் கண்ணீர்!
மேகங்கள் அழுதால்
தாகம் தீர்க்கும் தண்ணீர்!
எனவே,
மழையே பொழிந்துவிடு!
உன் வருகைக்காக
கானமயில் காலில்
சலங்கை கட்டிக்
கொண்டிருக்கிறது...
வானவில் வரம் கேட்டு
காத்திருக்கிறது..
பூமிகூட கருணை மனு
போட்டுக் காத்திருக்கிறது..
விழுந்துவிடு மழையே!
மண் விவசாயிகள்
மகிழ்ச்சியடைவார்கள்...