பத்து ரூபாய் கற்றுத்தந்த பாடம்

பத்து ரூபாய் கற்றுத்தந்த பாடம் .


வழக்கமாக வரும் வழியில் நான் நடந்து வந்து கொண்டிருந்தேன், நெரிசல் அதிகமில்லாத நேரம், எனக்கு நேராய் ஒருவர் வந்து நின்று வணக்கம் சொன்னார் ,யார் என்று எனக்கு அடையாளம் தெரியவில்லை. மதித்து வணக்கம் சொல்லி முடிப்பதற்குள் என் நலம் விசாரித்து, என் குடும்ப நிலையை விசாரிக்க ஆரம்பித்தார். பல வருடம் பழகி, பிரிந்து, ஆவலாய் பார்த்து விசாரிப்பதுபோலவும், நன்று அறிமுகமானவருடன் பழகுவதுபோலவும் அந்த விசாரனை அமைந்தது.
நான் யோசிக்கவில்லை மெல்லிய குரலில் “நல்லா இருக்கேன்” என்று சொல்லி “அப்பா” இல்லை இறந்து விட்டார் என்பதைக் கணத்த இதயத்தோடு முகம் சுருக்கி சொன்னவுடன் “அம்மா” இருப்பாங்களே என்று அனுசரனையுடன் வேகமாக பேசிக்கொண்டேயிருந்தார்.
அவர் பேச்சு என்னை மையப்படுத்துவது போலவும், என்னை சரியாய் தெரிந்து கொண்டு விசாரிப்பது போலவும் இருப்பதாய் உணர்ந்தாலும், எனக்குள் ஒரு எச்சரிக்கையுணர்வு என்னை தட்டிக்கொடுத்து “நீ கொஞ்சம் தள்ளி நில்” என்று சொல்வதுபோல் உணரப்பட்டவுடன், ஒரு அடி பின் நோக்கி நகர்ந்தேன் ,
“நான்...... மேஸ்த்திரி, உங்கவீட்ல கூட நான் வேலை செய்திருக்கேன்” என்று ஏதோ ஒரு கடந்தகால நிகழ்வில் மறக்கமுடியாத நினைவுகளை ஞாபகப்படுத்துவது போலவும் , நினைவுக்கு வர மறுக்கும் முகம், இருந்தும் ஒரு துளிர் நம்பிக்கை மனதிற்கு எழவே .... ஏதோ சொல்ல வருகிறார் கேட்போமே என்று ஆறுதலாய் காது கொடுத்து கேட்க ஆரம்பித்தேன்.
ஆனாலும் “இவர் யார் என்பது எனக்கு இந்த நிமிடம் வரை சரியாக தெரியாது.” பட படவென பேசிக்கொண்டே சென்றார். மடித்துக்கட்டிய லுங்கி, கட்டம்போட்ட சட்டை, மழிக்கப்படாத முகம் சோர்வுடையந்த கண்கள். ஏதோ ஒன்றை நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட நான் “எப்போது இவர் பேசி முடிப்பார் என்று ஆவலுடன் இருந்த போது
“இருந்த ஒரே பையன் . சென்னை ராமச்சந்திரா ஆஸ்ப்பிடலில் ஒரு வருடம் வைத்திருந்தேன், HIV வைரஸ் ரத்தத்துல கலந்திடுத்து -முடியாதுன்னு சொல்லிட்டாங்க இங்க அருகாமையில உள்ள ஆஸ்பிட்டலுக்கு மாத்திட்டாங்க- பசி, காசு இல்ல... HIV -யில இருக்கிறவங்க நல்லா சாப்பிடனுமாம் இதோ.. பக்கத்துல இருக்கிற கடையில இடியாப்பம் இருக்கு -ஒரு செட்டு இருபது ரூபாய்- காசு இல்ல இப்ப. வாங்கிக் கொடுத்தா..... நல்லா இருக்கும் . எல்லாத்தையும் இழந்துட்டேன். ஒரே புள்ள ..”. எல்லாவற்றையும் சொல்லிவிட்டு நான் யோசித்தது போல் கடைசியாக ”ஒரு இருபது ரூபாய் இருந்தா கொடுங்க” என்று மெல்ல அவரின் கடந்த கால சோக நிகழ்வுகளையும் , நிகழ்கால சோதனையின் மிச்சங்களையும் அடுக்கிக்கொண்டே சென்றார் .
நான் சரியாகவே யூகித்துஇருக்கிறேன் என்பதை அவரின் இறுதி வார்த்தையை வைத்து உணர்ந்து கொண்டாலும் “எங்கிட்ட இருக்கிறது கொடுக்கிறேன்” என்று என் பாக்கட்டில் இருந்த பத்து ரூபாய் எடுத்துக்கொடுத்தேன் . ஏதோ அரைமனதுடன் அவர் அப்படி நடக்க ,மீதி மனதுடன் நான் இந்த பக்கம் நடக்க ஆரம்பித்தேன்.
பஸ்ஸைப்பிடித்து வீடுபோய் சேரும் வரை ஏதோ ஒரு இறுக்கம் மனதில் இருந்து கொண்டே இருந்தது . அவர் கேட்ட இருபது ரூபாயை கொடுக்கவில்லையே என்று . பல மடங்கு அவரின் அணுகுமுறையின் மூலம் கற்றதாய் உணர்ந்தேன் . ஒன்றை ஆரம்பித்து வெறொன்றை தொடர்புபடுத்தி அதற்கு இறுதி வடிவம் கொடுத்து , அழகாய் என்னிடமிருந்து இருபது ரூபாய் பெறுவதற்கு, அவர் மேற்கொண்ட முயற்சியை நினைத்து மெய்சிலிர்த்துப்போனேன்.
“எத்தனை பயிற்சி எடுத்தாலும் இதுபோன்ற ஒரு அனுபவத்தை மீண்டும் பெறமுடியாது” என்ற சிந்தனையுடன், புதிய அனுபவத்தோடு புறப்பட்டேன். நாளை இதேவழி முறையை வகுப்பறையில் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு. ஓர் ஆசிரியராய் .

எழுதியவர் : இரா.ரமேஷ் (12-Jun-21, 10:02 am)
சேர்த்தது : இரா ரமேஷ்
பார்வை : 151

மேலே